இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்
இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் (Bharat Jodo Nyay Yatra) என்பது இந்திய தேசிய காங்கிரசு தலைவர் இராகுல் காந்தியால் வழிநடத்தப்படும் ஒரு இயக்கமாகும். இது 2024 சனவரி 14 அன்று இந்தியாவின் கிழக்கில் உள்ள இம்பாலில் தொடங்கி 2024 மார்ச் 20 அன்று இந்தியாவின் மேற்கே உள்ள மும்பையில் முடிவடையும். இந்த நடைபயணம் நாடு முழுவதும் கட்சியின் தேர்தல் பணியை ஊக்குவிக்கும் நோக்கமாக கொண்டது. மேலும் அடுத்து வரவிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தல்களுக்கான உத்தியாகக் கருதப்படுகிறது. இந்த அரசியல் பயணம் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் தொடர்ச்சியாக இருக்கும். [1] [2]
நாள் | சனவரி 14, 2024 | – 20, மார்ச், 2024
---|---|
காலம் | 65 நாட்கள் |
அமைவிடம் | இந்தியா |
வகை | பாதயாத்திரை, எதிர்ப்புப் போராட்டம் |
கருப்பொருள் | அரசியில் இயக்கம், சமூக இயக்கம் |
காரணம் | பொருளாதார பிரச்சினைகள் மற்றும் சமூக ஒற்றுமையின்மை |
உள்நோக்கம் | பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூகப் பிளவு, நிர்வாகத்தில் எதேச்சதிகார அணுகுமுறைக்கு எதிராகப் போராடுவது |
ஏற்பாடு செய்தோர் | இந்திய தேசிய காங்கிரசு, இராகுல் காந்தி |
பங்கேற்றோர் | அரசியல்வாதிகள், குடிமக்கள், குடிமை சமூக அமைப்புகள், அரசியல் ஆர்வலர்கள் |
முந்தைய இந்திய ஒற்றுமைப் பயணம் பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூகப் பிளவு, ஆட்சியில் எதேச்சதிகார அணுகுமுறை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வருவதற்காக நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டது. இதற்கு நேர்மாறாக, அடுத்த நடை பயணமான இந்திய நீதிப் பயணம் நாட்டின் குடிமக்களுக்கான சமூக, பொருளாதார, அரசியல் அம்சங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்கும். [3]
திட்டம்
தொகு21 திசம்பர் 2023 அன்று நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டியின் ஆலோசனைக்குப் பிறகு, 27 திசம்பர் 2023 அன்று காங்கிரஸ் எம்.பி.யும் கட்சியின் பொதுச் செயலாளருமான (அமைப்பு) கே. சி. வேணுகோபால் இந்த நடைபயணத்தை அறிவித்தார் [4] 2024 இந்தியப் பொதுத் தேர்தலுக்கான இந்த இந்திய தேசிய காங்கிரசின் பரப்புரைக்கு இராகுல் காந்தி தன் போக்குவரத்துக்காக ஒரு பேருந்தைப் பயன்படுத்துவார். அதே நேரத்தில் 14 மாநிலங்கள் மற்றும் 85 மாவட்டங்களை உள்ளடக்கிய குறிப்பிட்ட தூரங்களுக்கு குறுகிய நடைப்பயணங்களை மேற்கொள்வார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கர்கெ இந்த அரசியல் பரப்புரையைத் துவக்கி வைக்கிறார். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட இந்திய ஒற்றுமைப் பயணத்தில் முன்னர் சேர்க்கப்படாத கணிசமான எண்ணிக்கையிலான மாநிலங்களை இதில் உள்ளடக்கும் நோக்கம் உள்ளது. அதன் படி இதில் மணிப்பூர், நாகாலாந்து, அசாம் , மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், சார்க்கண்டு, ஒடிசா, சத்தீசுகர் உத்தரப் பிரதேசம் மத்தியப் பிரதேசம், இராசத்தான், குசராத்து ஆகிய மாநிலங்களைக் கடந்து 6,200 கிலோமீட்டர் தூரம் வரை 150 நாள் இப்பயணம் மேற்கொள்ளப்படும். [5] [6]
மொத்தத்தில், இந்திய நீதிப் பயணம் 355 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நாட்டின் மொத்த மக்களவைத் தொகுதிகளில் தோராயமாக 65% ஆகும். 2019 மக்களவைத் தேர்தலில் இந்த 355 இடங்களில் பாஜக 236 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி வெறும் 14 இடங்களிலும் வெற்றி பெற்றது. [6]
நோக்கம்
தொகுபயணத்துக்கான துவக்க இடமாக மணிப்பூரைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை காங்கிரஸ் கட்சி விளக்கியது, இந்தப் பரப்புரையின் நோக்கம் வடகிழக்கு மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு ஏற்பட்ட "காயங்களைச் சரிசெய்யும்" நோக்கத்தின் ஒரு தொடங்கமாகும். 2023 மணிப்பூர் வன்முறையில் அண்மையில் குக்கி மற்றும் மெய்தே சமூகங்களுக்கு இடையே கடுமையான இன மோதல்கள் நடந்தன. இதில் 200 க்கும் மேற்பட்ட நபர்களின் இறக்க காரணமாயிற்று. மேலும் சுமார் 60,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர். [3][7]
பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராசத்தான் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் இராகுல் காந்தி தனது பயணத்தைத் தொடங்குகையில், சமூக நீதியை வளர்த்தெடுப்பது குறித்து காங்கிரஸ் கட்சியால் திரும்ப வலியுறுத்தப்படும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலமும், நாட்டின் வளர்ச்சியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நியாயமான சமமான பங்கைப் பெற உறுதியாக வாதிடுவதாக இது அடையப்படுத்துகிறது. சமூக நீதிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், சனவரி 22 ஆம் நாள் அயோத்தியில் இராமர் கோயிலின் பிரமாண்ட திறப்பு விழாவை ஆதாயமாக்கிக் கொள்ள விரும்பும் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கங்களை எதிர்ப்பதற்கு ஒரு மாற்று கதையாடலை உருவாக்குவதையும் காங்கிரஸ் கட்சி தன் நோக்கமாகக் கொண்டிருக்கலாம். [3]
வேலையில்லா திண்டாட்டமும், பணவீக்கமும் இந்த தேர்தல் பரப்புரையில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கும். நாடாளுமன்ற பாதுகாப்பை மீறி இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்ததற்கு இந்த இரண்டு காரணிகளும் முதன்மையானவையாக திரு. இராகுல் காந்தியால் முன்வைக்கப்பட்டது. [3]
இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியின் தலைவர்கள் அவரவர்களின் சொந்த தொகுதிகளை இராகுல் காந்தியின் பயணம் நெருங்கும்போது இந்த தேசிய பரப்புரையை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [6]
எதிர்வினைகள்
தொகுகவர்ச்சியான முழக்கங்களை உருவாக்கி இந்திய குடிமக்களை ஏமாற்ற முடியாது என ஆளும் பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. 2014 முதல் "உண்மையான நீதியை" வழங்குவது மோடி-அரசுதான் என்பதை பாஜக மீண்டும் வலியுறுத்தியது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Eye on Lok Sabha polls, Rahul Gandhi to launch Manipur to Mumbai Bharat Nyay Yatra on January 14" (in en). The Indian Express. 27 December 2023. https://indianexpress.com/article/india/rahul-gandhi-bharat-nyay-yatra-january-14-manipur-to-mumbai-9084383/.
- ↑ "Congress Leader Rahul Gandhi to Start Bharat Nyay Yatra from Manipur to Mumbai on January 14". The Wire. https://thewire.in/politics/congress-leader-rahul-gandhi-to-start-bharat-nyay-yatra-on-january-14.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Phukan, Sandeep (27 December 2023). "Rahul Gandhi to lead Bharat Nyay Yatra across 14 States" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/congress-leader-rahul-gandhi-to-lead-bharat-nyay-yatra-across-14-states/article67679021.ece.
- ↑ "Rahul Gandhi to lead two-month-long Bharat Nyay Yatra from Imphal to Mumbai". Scroll.in. 27 December 2023. https://scroll.in/latest/1061228/rahul-gandhi-to-lead-two-month-long-bharat-nyay-yatra-from-imphal-to-mumbai.
- ↑ 5.0 5.1 "'Manipur To Mumbai': Rahul Gandhi's 'Bharat Nyay Yatra' From Jan 14". NDTV.com. https://www.ndtv.com/india-news/manipur-to-mumbai-rahul-gandhi-to-undertake-6-200-km-bharat-nyay-yatra-from-jan-14-4749808.
- ↑ 6.0 6.1 6.2 "Rahul Gandhi to hit the road again: Bharat Nyay Yatra explained in numbers". mint. 29 December 2023. https://www.livemint.com/politics/news/bharat-nyay-yatra-rahul-gandhi-pm-modi-lok-sabha-elections-2024-mallikarjun-kharge-india-alliance-congress-bjp-11703782034767.html.
- ↑ Chatterji, Saubhadra (27 December 2023). "Rahul Gandhi to undertake Manipur-Mumbai Bharat Nyaya Yatra from January 14" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/rahul-gandhi-to-undertake-manipur-mumbai-bharat-nyaya-yatra-from-january-14-101703656678452.html.