இந்திய நன்றித் தொகை வழங்கல் சட்டம் - 1972

தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப அந்நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான நன்றித் தொகை (பணிக்கொடை) வழங்குகின்றன. 1970 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன் முதாலாக மத்திய அரசின் சட்டங்கள் எதுவுமில்லாமல் கேரள மாநிலத்தில் அம்மாநில அரசு நன்றித்தொகை வழங்கும் சட்டத்தை இயற்றியது. இதைத் தொடர்ந்து மேற்கு வங்காளம் அரசும், அதைத் தொடர்ந்து வேறு சில மாநில அரசுகளும் தொழிலாளர்களுக்கு நன்றித் தொகை வழங்கும் சட்டங்களை இயற்றின. இதன் பிறகு இது குறித்து பல தொழிலாளர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு 1972 ஆம் ஆண்டில் இந்திய அரசு நன்றித் தொகை வழங்கல் சட்டம் - 1972 (en: Payment of Gratuity Act – 1972)-ஐ இயற்றியது. அதன் பிறகு மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்கள் செல்லாது என்றும் இந்தியா முழுவதும் ஒரே சட்டமாக தொழிலாளர்களுக்கான நன்றித் தொகை வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

நோக்கம் தொகு

தொழிற்சாலைகளின் உயர்வுக்காகவும், முதலாளிகளின் நல்வாழ்வுக்காகவும் தன் உழைப்பையும் ஒத்துழைப்பையும் நல்கிய தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நன்றித் தொகை வழங்கப்படுகிறது. இச்சட்டம் தொழிற்சாலைகள், சுரங்கம், எண்ணெய் வயல், சுரங்கம், துறைமுகம், ரயில்வே ஆகிய பெருந்தொழில்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். நன்றித் தொகை வழங்குவதில் இருந்து எந்தவொரு நிறுவனத்திற்கும் விலக்களிக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கோ அல்லது இந்தியாவிலுள்ள பிற மாநில அரசுகளுக்கோ வழங்கப்படவில்லை.

நன்றித் தொகை பெறும் தகுதிகள் தொகு

நன்றித் தொகை வழங்கல் சட்டம்-1972ன் பிரிவு 4ன்படி ஒரு தொழில் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியிலிருந்து விட்டு ஓய்வு பெறும் தொழிலாளி அல்லது தானாகவே தனது பணிக்காலத்தை முடித்துக் கொள்ளும் தொழிலாளி இச்சட்டத்தின் கீழ் நன்றித் தொகையினைப் பெற முடியும்.

அவரது பணிக்காலம்

  • வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின்படி ஓய்வுபெறும் வயதை அடைந்ததால் அல்லது கட்டாய ஓய்வின் மூலம் அல்லது தன்னிச்சையான ஓய்வின் மூலம் முடிவுக்கு வரலாம்.
  • இறப்பு, விபத்து அல்லது நோயினால் ஏற்படும் தகுதியிழப்பு காரணமாக பணிக்காலம் முடிவுக்கு வந்தால் அவர் 5 ஆண்டுகள் தொடர்ச்சியான பணிக்காலம் இல்லாதவராக இருந்தாலும் அவருக்கு நன்றித் தொகை வழங்கப்பட வேண்டும். இறந்து போன நபர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படுகிறது.

நன்றித் தொகைக் கணக்கீடு தொகு

ஒரு தொழிலாளி ஓய்வு பெறுவதற்கு முன்பு வேலை பார்த்த தொழில் நிறுவனத்தில் தொடர்ச்சியாக வேலை பார்த்த ஒவ்வொரு முழுமையான ஆண்டிற்கும் 15 நாள் சம்பளம் என்ற விகிதத்தில் அவரது பணிக்காலம் முழுமையாகக் கணக்கிடப்பட்டு அத்தொகை நன்றித்தொகையாகயாக அளிக்கப்படுகிறது. பணிக்காலத்தைக் கணக்கிடும் போது 6 மாதங்களுக்கு மேலாக வேலை செய்த காலத்தை ஒரு ஆண்டாகக் கணக்கிட வேண்டும்.

நன்றித் தொகையின் உயர் வரம்பு தொகு

ஒரு தொழிலாளிக்கு நன்றித் தொகையாக ரூ.50,000/- அல்லது 20 மாதச் சம்பளம் ஆக இருக்க வேண்டும். ஆனால் நிர்வாகமும் தொழிலாளர்களும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் அல்லது நீதிமன்ற தீர்ப்புகளுக்கு ஏற்ப இந்த உயர் வரம்பிற்கு அதிகமான தொகை தொழிலாளர்களுக்கு நன்றித் தொகையாக வழங்கப்படும் நிலையில் இச்சட்டம் அதைத் தடுப்பதில்லை.

நன்றித் தொகை இழப்பு தொகு

ஒரு தொழிலாளி அவருக்குச் சேர வேண்டிய நன்றித் தொகையினை பின்வரும் காரணங்களுக்காக இழக்க நேரிடலாம்.

  • தொழிலாளியின் ஒரு செயலால் அல்லது செயல் தவிர்ப்பின் காரணமாக தொழிற்சாலைச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினார் என்று வேலை நீக்கம் செய்யப்பட்டால் அவர் ஏற்படுத்திய சேதத்தின் மதிப்பிற்கேற்ப நன்றித்தொகையின் அளவு குறைக்கப்படும்.
  • தீய நடத்தை, வன்முறைகளில் ஈடுபட்டது போன்ற காரணங்களினால் வேலை நீக்கம் செய்யப்படும்போது அவரது முழு நன்றித்தொகையினையும் இழக்க நேரிடும்.

காப்பீடு தொகு

தொழிற்சாலை அல்லது நிறுவனத்தின் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு நன்றித்தொகை வழங்குவதற்காக ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் காப்பீடு செய்ய வேண்டும். அப்படி செய்யத் தவறுபவர்கள் கட்டத்தவறிய காப்பீட்டுத் தொகையினை வட்டியுடன் நன்றித் தொகையாக செலுத்த வேண்டும். அப்படி வழங்காத நிர்வாகம் தண்டத் தொகையைச் செலுத்த வேண்டும்.

கட்டுப்பாட்டு அதிகாரி தொகு

நன்றித் தொகை வழங்கும் சட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டு அதிகாரி மாநில அரசால் நியமிக்கப்படுகிறார். அவர் சில அதிகாரங்களை இச்சட்டத்தின் கீழ் பெற்றிருக்கிறார்.

  • நன்றித் தொகையின் அளவு, கோரிக்கை போன்றவைகளை அனுமதித்தல். இதில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும் நிலையில் அதனைத் தீர்க்க விசாரணை மேற்கொள்ள கடமையுடையவராகிறார்.
  • நன்றித் தொகை குறித்த தகராறுகளைத் தீர்க்கும் வழியாக அவர் மேற்கொள்ளும் விசாரணை நடவடிக்கைகளுக்கு அவர் உரிமையியல் நீதி மன்றங்களின் அதிகாரங்கள் பெற்றிருக்கிறார்.
  • நன்றித் தொகை குறித்த தகராறு முடிவு செய்யப்படும் போது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நன்றித் தொகையினை நிர்வாகம் கட்டுப்பாட்டு அதிகாரியிடமே செலுத்த வேண்டும். அதன் பின்பு அந்த நன்றித் தொகை கட்டுப்பாட்டு அதிகாரியால் சேர வேண்டிய நபர்களுக்கு வழங்கப்படும்.
  • இச்சட்டம் குறிப்பிடாத எந்த அதிகாரத்தையும் செயல்படுத்த கட்டுப்பாட்டு அதிகாரிக்கு அதிகாரம் கிடையாது. அது போன்ற சமயத்தில் உரிமையியல் நீதிமன்றம் அத் தகராறு குறித்து விசாரணை செய்யும்.


வெளி இணைப்புகள் தொகு