இரண்டாம் இராசாதிராச சோழன்

சோழ மன்னர்

இரண்டாம் இராசாதிராச சோழன் (Rajadhiraja Chola II) விக்கிரம சோழனின் மகள் வயிற்றுப் பேரனாவான். இரண்டாம் இராசாதிராசன் பட்டத்திற்கு வரவேண்டும் என்று இரண்டாம் இராஜராஜன் தன்னுடைய ஆட்சியின் இறுதியில் முடிவு செய்தான். நேரடியாக ஆடவர் வரிசையில் அரசுரிமைக்கு உரியோர் இல்லாத காரணத்தால் விக்கிரம சோழனின் மகள் வழிப் பேரனான இரண்டாம் இராசாதிராசன் தேர்ந்தெடுக்கப்பட்டான்.[1][2][3]

ஆட்சி

தொகு

இரண்டாம் இராசராசனுடன் சேர்ந்து, இராசாதிராசன் இவ்வாறு சில வருடங்கள் அரசப் பிரதிநிதியாக ஆண்டுவந்தான். இராசாதிராசனுடைய மெய்க்கீர்த்திகள், மூவகையின. அவை யாவும் சொல்லலங்காரம் நிறைந்ததாக உள்ளனவே தவிர வரலாற்றுச் செய்திகளைச் சிறிதளவும் கொண்டவனவாக இல்லை. இரண்டாம் ஆட்சிக் காலத்திலேயே காணப்படுவதும் 'கடல் சூழ்ந்த பார் மகளும்(மாதரும்)' என்று தொடங்குவதுமான வாசகம், இரண்டாம் இராசராசன் கல்வெட்டுகளில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்க வேண்டும். வேறு வாசகங்களும் உண்டு.

ஐந்தாம் ஆண்டில் முதல் முறையாக 'பூமருவியக் திசைமுகத்தோன்' என்ற வாசகம் காணப்படுகிறது. இதைப் பிற்காலத்தில் மூன்றாம் குலோத்துங்கன் கடைபிடித்தான். தஞ்சை மாவட்டத்தின் ஆறாம், பத்தாம் ஆட்சி ஆண்டுகளில் ஏற்பட்ட கல்வெட்டுகளில் 'கடல் சூழ்ந்த பாரேழும்' என்ற வாசகம் உள்ளது. அரசனின் மெய்க்கீர்த்திகள் வரலாற்று ஆராய்ச்சிக்குப் பயன்படாவிட்டாலும் அவனுடைய ஆட்சியில் ஏற்பட்ட சில கல்வெட்டுகள், பாண்டிய அரசுரிமைப் போர்களின் நிகழ்ச்சிகளைப் பற்றி விரிவான தகவல்களைத் தருகின்றன. இந்தப் போரைப் பற்றி மகாவம்சம் தெரிவிக்கும் விவரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கல்வெட்டுச் செய்திகள் மிகவும் நம்பத்தக்கனவாக உள்ளன.

பாண்டியப் போர்

தொகு

இரண்டாம் ராசாதிராசனின் காலத்தில் ஆரம்பித்தது பாண்டிய தாயாதிகளின் பகைமை சண்டைகள். தாயாதிகளான குலசேகரப் பாண்டியனும் பராக்கிரம பாண்டியனும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

குலசேகரப் பாண்டியன் சோழனின் உதவியை நாடினான். பராக்கிரம பாண்டியன் சிங்களன் பராக்கிரம பாகுவின் உதவியை நாடினான். இவ்வாறு இந்த இரண்டு மன்னர்கள் பொருட்டு சோழர்களும் சிங்களர்களும் மோதிக் கொள்ள ஆரம்பித்தனர்.

தாயாதி சண்டையினில் பாண்டிய தேசத்தினை ஆண்டு கொண்டிருந்த பராக்கிரம பாண்டியனை குலசேகரப் பாண்டியன் முற்றுகை இட்டான். பராக்கிரம பாண்டியன் சிங்கள மன்னனாகிய பராக்கிரம பாகுவின் உதவியை கோரினான். அவனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிங்களன், தனது மாதண்ட நாயகனை பெரும் படையுடன் பாண்டிய தேசத்துக்கு அனுப்பித்தான். சிங்களப் படை நுழைவதற்குள் குலசேகரன், பராக்கிரம பாண்டியனையும் அவனது உற்றத்தையும் கொன்று ஆட்சியை கைப்பிடித்தான். இதனை அறிந்த சிங்கள மாதண்டன் மதுரை நகரத்தினுள் நுழைந்து பாண்டிய படைகளை அழித்தான், பராக்கிரமனின் புதல்வனாகிய வீர பாண்டியனை ஆட்சிப் பொறுப்பில் எற்றுவித்தான்.

பராக்கிரம பாண்டியனின் ஆட்சியை விரும்பாத பாண்டியர்கள் அவனது மகனாகிய வீரப் பாண்டியனின் ஆட்சியை விரும்பவில்லை. அவர்கள் குலசேகர பாண்டியனையே மன்னனாக்க விரும்பினர், அவர்கள் ஒரு பெரும் படை சேர்த்து வீரப் பாண்டியனை ஆட்சியில் இருந்து அகற்றினர். இதனை உணர்ந்த சிங்கள மாத்தண்டன் உதவிப் படை கோரி சிங்களனிடம் விண்ணப்பித்தான். அதனால், சிங்கள மன்னன் ஜகத்விஜயன் என்ற தண்டனாயகனை சிங்கள மாதண்டனாயகனுக்கு துணை அனுப்பித்தான். இந்த இரண்டு வீரர்களிடம் ஈடுக் கொடுக்க முடியாத குலசேகரன் தனது அரியாசனத்தை இழக்க வேண்டி இருந்தது.

சோழர்களின் நுழைவு

தொகு

அரியாசனத்தை இழந்த குலசேகரன் இரண்டாம் ராசாதிராசனின் உதவியை கோரி சோழனின் மாளிகையை அடைந்தான். தன்னிடம் புகலிடம் அடைந்த குலசேகரனுக்கு உதவி செய்யும் பொருட்டு பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான். தோண்டிப் பட்டணத்தில் சோழர்களுக்கும் சிங்களர்களுக்கும் முதல் போர் ஆரம்பித்தது. முதல் போரில் சிங்களப் படைகள் வெற்றியடைந்தன. இதனால் சோழ மக்கள் அச்சம் கொண்டனர். அடுத்து நிகழ்ந்த போரில் திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் சிங்களப் படைகளை வெற்றிக் கொண்டான். சிங்கள மாதண்ட நாயகனையும், தண்ட நாயகன் ஜகத்விஜயனையும் கொன்று சோழர்களின் புகழினை நாட்டினான். அத்துடன் அல்லாமல் சிங்களத் தலைவர்கள் இருவரின் தலைகளையும் அரண்மனை வாயிலில் மாட்டி வைத்தான். இதனை அடுத்து குலசேகரப் பாண்டியன் அரியணை ஏறினான்.

சிங்களப் போர்

தொகு

சோழர்களிடம் தோல்வியை அடைந்ததை பராக்கிரம பாகு ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இதனால் தனது தோல்வியை அகற்ற பராக்கிரம பாகு புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் போன்ற ஊர்களில் படைகளைத் திரட்டி படகுகளையும் ஆயத்தம் செய்தான். இதனை ஒற்றறிந்த சோழன், அம்மையப்பா அண்ணன் பல்லவராயன் தலைமையில் படை ஒன்றை திரட்டினான். சிங்களனின் தயாதியான சீவல்லபன் என்பவன் சோழனின் உதவியை கேட்டு சோழ தேசம் வந்தான். அவனுக்கு உதவும் வகையில் தனது படையை பராக்கிரம பாகுவினை எதிர்க்க அனுப்பினான். மாதோட்டம், புலைச்சேரி ஆகிய இரண்டு இடங்களிலும் சோழனுக்கும் சிங்களனுக்கும் கடுமையான போர் நிகழ்ந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. அது மட்டுமில்லாமல், இப்போரில் ஆயிரம் யானைகளை வென்று, பல்லாயிரம் மதிப்புள்ளவைகளை வென்று சோழனுக்கு அண்ணன் பல்லவராயன் காணிக்கை அளித்ததாக திருவாலங்காடுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

சிங்களனின் பாண்டிய உறவு

தொகு

சோழர்களிடம் வலிமையை இழந்த சிங்களன், தான் பராக்கிரம பாண்டியனிற்கு உதவியதால் தான் இந்த தோல்விகளை அடைய நேர்ந்தது என்பதனை உணர்ந்து, தனது ஆதரவை குலசேகரப் பாண்டியனிற்கு நீட்டினான். தனது புதல்வியை குலசேகரப் பாண்டியனிற்கு திருமணம் முடிப்பித்தான். இதனால் ராசாதிராசன் தனக்கு உதவியதை மறந்த குலசேகரன் சிங்களனின் சொற்படி நடக்க ஆரம்பித்தான். அரண்மனை வாயிலில் தொங்கிக் கொண்டிருந்த சிங்களர்களின் தலைகளை அகற்றி அவர்களுக்கு கல் தூண் நாட்டினான்.

இதனை அறிந்த சோழன் குலசேகரன்பால் வெகுண்டெழுந்தான். தனது உதவிகளை மறந்து சிங்களனுடன் தொடர்பு கொண்ட குலழேகரனை ஆட்சியை விட்டு நீக்குவதற்கு முடிவு செய்தான். இதனையடுத்து அண்ணன் பல்லவராயன் மற்றும் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் படைகளை அனுப்பினான். அண்ணன் பல்லவராயனின் இளவலான கருணாகரப் பல்லவனும் இப்போரினில் ஈடுபட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பெரும் படைகளோடு சிங்களனையும் பாண்டியனையும் எதிர்த்து சோழர்கள் வெற்றி நடைப் போட்டு பாண்டிய தேசத்தினை முற்றுகை இட்டனர். மிகக் கடுமையாக நிகழ்ந்த போரினால் சிங்களர்கள் தோற்று புறமுதுகிட்டு ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கே ஓடினர். போரினில் தோற்ற குணசேகரப் பாண்டியனும் ஈழ தேசத்தில் புகலிடமடைந்தான். இதனையடுத்து வீரப்பாண்டியனிற்கே பாண்டிய தேசத்தினைக் கொடுத்து தனக்கு படிந்த மன்னனாக ஆட்சிப் புரிந்து கப்பம் செலுத்தப் பணித்தான் சோழன். இவ்வாறு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான் இரண்டாம் ராசாதிராச சோழன்.

இறுதி நாட்கள்

தொகு

சுருங்கிக் கொண்டிருந்த சோழர்களின் வரைப் படத்தினையும் வீரத்தினையும் மலர்ச்சி அடைய செய்த பெரும் வீரனாக திகழ்ந்தான் இரண்டாம் ராசாதிராசன். இவனது காலத்தில் சோழ மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருந்தனர். பாண்டியர்களையும் சிங்களர்களையும் வென்று சோழர்களின் புகழினை இறங்காமல் காப்பாற்றினான் ராசாதிராசன். ஆனால் கால ஓட்டத்தில் இரண்டாம் ராசராசனின் மகன் வளர்ந்து பருவத்தினை அடைந்தான். அவனது புஜங்களும் போர் தினவெடுத்தன. இராசாதிராசனின் போர் கலந்த சுற்று சுழலில் வளர்ந்த அவன், சோழர்களின் புகழினை உச்சிக்கு கொண்டு செல்ல எண்ணினான். தனக்கு உரிய அரச பீடம் கிடைக்காதா என்று ஏங்கினான். இதனை அறிந்த ராசாதிராசன் ராசராசனின் புதல்வனாகிய மூன்றாம் குலோத்துங்கனுக்கு அரச பதவி அளித்துவிட்டு தெலுங்கு தேசம் சென்றான்.

மேற்கோள்கள்

தொகு
  1. University of Allahabad. Dept. of Modern Indian History, University of Kerala. Dept. of History, University of Kerala, University of Travancore. Journal of Indian History, Volumes 15-16. University of Kerala., 1937. pp. 141–142.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. Niharranjan Ray; Brajadulal Chattopadhyaya. A Sourcebook of Indian Civilization. Orient Blackswan, 2000 - History - 673 pages. p. 470.
  3. S. R. Balasubrahmanyam; B. Natarajan; Balasubrahmanyan Ramachandran. Later Chola Temples: Kulottunga I to Rajendra III (A.D. 1070-1280), Parts 1070-1280. Mudgala Trust, 1979 - Architecture - 470 pages. p. 270.