இரண்டாம் விக்ரமாதித்தன்

இரண்டாம் விக்ரமாதித்தன் (Vikramaditya II ஆட்சிக்காலம்கிபி 733-744) என்பவன் ஒரு சாளுக்கிய மன்னனாவான். இவன் தன் தந்தை விஜயாதித்தன் இறந்தபின் ஆட்சிப்பொறுப்பேற்றான். இந்த தகவல் சனவரி 13 தேதியிட்ட, 735[1] லகஷ்மேஷ்வர் கன்னடக் கல்வெட்டுவழியாக அறியப்படுகிறது. மேலும் இக்கல்வெட்டுவழியாக இரண்டாம் விக்ரமாதித்தன் அவனது தந்தையின் காலத்தில் இளவரசனாக (யுவராஜா) முடிசூடப்பட்டு, தங்களது பரம எதிரிகளான பல்லவர்களுக்கு எதிராக நடந்த போர்களில் கலந்துகொண்டான் என்று தெரிகிறது. இவனது மிக முக்கியச் சாதனைகள் என்றால் மூன்று சந்தர்ப்பங்களில் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியது, முதல் முறை இவன் இளவரசனாக இருந்தபோதும், இரண்டாம் முறை இவன் பேரரசனான ஆனபிறகும், மூன்றாம் முறை இவனது மகன் மற்றும் முடிக்குரிய இளவரசர் இரண்டாம் கீர்த்திவர்மன்தலைமையின் கீழ் என காஞ்சி வெற்றிகொள்ளப்பட்டது. இதே தகவலை விருபாக்ஷா கோயில் கல்வெட்டுகள் என்று அழைக்கப்படும் வேறு கன்னட கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.[1] மற்ற குறிப்பிடத்தக்க சாதனை என்பது இவனது அரசிகள் லோகதேவி, திரிலோகதேவி ஆகியோர் மூலம் பிரபலமான விருபாக்ஷா கோயில் (லோகேஸ்வரா கோயில்), மல்லிகார்ஜுன கோயில்(திரிலோகேஸ்வரா கோயில்) ஆகிய கோயில்கள் பட்டடக்கல் என்ற பகுதியில் கட்டப்பட்டதாகும்.[2] 1987 ஆம் ஆண்டில் இந்த கோயில்கள் கொண்ட நினைவுச் சின்னங்களின் தொகுதி உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

விருபாக்ஷா கோயில், பட்டடக்கல்

பல்லவர்களுக்கு எதிரான போர்கள்

தொகு
 
காசிவிசுவநாதர் கோயில் (இடது) மற்றும் மல்லிகார்சுனர் கோயில் (வலது)
 
பழங் கன்னடம் வெற்றித் தூண் கல்வெட்டு, விருபாக்‌ஷா கோயில், பட்டடக்கல், 733–745 CE
 
பழங்கன்னடத்தில் வாதாபி சாளுக்கியர் கல்வெட்டு, விருபாக்‌ஷா கோயில், பட்டடக்கல்

இவனது தந்தையான விஜயாதித்தன் நான்கு தசாப்தங்கள் நீண்ட மற்றும் அமைதியான ஆட்சியை தனது வயது முதிரும்வரை ஆண்டதைப் போலல்லாமல், இரண்டாம் விக்ரமாதித்யனின் கல்வெட்டுகள் வழியாக இவனது ஆட்சியில் போர்களுக்கு முக்கியத்துவம் இருந்தது தெரிகிறது. அந்த கல்வெட்டுகளில் இருந்து வரலாற்றாய்வாளர்கள் இவன் பல்லவர்கள் மீது வன்மம் கொண்டிருந்தான் என்று நினைக்கிறனர். பல்லவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, முதலாம் நரசிம்ம பல்லவன் தலைமையின் கீழ், சாளுக்கியர்களைத் தோற்கடித்து அவர்களின் அரசியல் தலைநகரான வாதாபியை ஆக்கிரமித்திருந்தனர். இதனால் இரண்டாம் புலிகேசியால் புகழ்பெற்ற இவர்களின் ஆட்சியும், சாளுக்கிய அரச குடும்பமும் பெரிய அவமானத்தில் மூழ்கியது. இதனால் பல்லவர்களை முற்றாக நிர்மூலமாக்கி (prakrity-amitra) சாளுக்கியர் இழந்த கண்ணியத்தை மீட்க முடியும் என்று கருதியதாக கல்வெட்டுகள் வழியாக அறியப்படுகிறது. இரண்டாம் கீர்த்திவர்மன் இந்த எண்ணத்துடன், உற்சாகமாக (mahotsaha) பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான்.[3]

இவன் ஆட்சிக்கு வந்த உடன், காஞ்சிபுரத்தில் நடந்த உள்நாட்டுப் போரால் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டாம் நந்திவர்மனுக்கு எதிராக, சித்ரமயன் போரிட்டுவந்தான். இதனால் பல்லவர்கள் பலம் குன்றி இருந்தனர்.[2] இரண்டாம் விக்ரமாதித்தன், பல்லவர்கள் மீது பல போர்களை நடத்தினான். அதில் மூன்று முக்கியமான வெற்றிகளைப் பெற்றான். கி.பி.730 காலகட்டத்தில் சாளுக்கிய இளவரசனாக இருந்த காலத்தில் இவனது நண்பனான மேலைக் கங்க மரபின் இளவரசன் இரேயப்பா சாளுக்கியர்களின் படைகளுடன், பல்லவர்களைத் தாக்கி பல்லவ மன்னன் இரண்டாம் பரமேசுவரவர்மனுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தினான். பல்லவன் சமாதானம் செய்துகொண்டு, கொஞ்ச காலத்திற்கு பிறகு கி.பி.731இல் மேலைக் கங்க மன்னன் சிறீபுருசன் மீது ஒரு எதிர்த் தாக்குதல் செய்தான். விலந்து என்ற இடத்தில் நடந்த போரில் பல்லவன் கொல்லப்பட்டான். சிறீபுருசன் பல்லவ அரசனின் முத்திரை, வெண்கொற்றக் குடை போன்றவற்றைக் கைப்பற்றி பெருமானடி என்ற பட்டம் பெற்றான்.[4] இந்த சாளுக்கிய வெற்றி விஜயாதித்தன் ஆட்சியின் போது நடந்தது என்றாலும், சாளுக்கிய அரசர்கள் பதிவுகள் இவ்வெற்றி இரண்டாம் விக்ரமாதித்யனைச் சேருவதாக புகழ்கின்றன [1]

விக்ரமாதித்தன் மீண்டும் தன் நண்பன் மேலைக் கங்க மன்னன் சிறீபுருசன் தலைமையில் தனது படைகளை கி.பி. 735க்கு பின் பல்லவ பேரரசுக்குள் அனுப்பினான். இந்தப் போரில் பல்லவர் பகுதிகளைச் சாளுக்கியர்கள் ஆட்சிக்குள் சேர்த்தான். இந்த படையெடுப்பற்றி 21 திசம்பர் 741 அல்லது 742. அன்று வெளியிடப்பட்ட நார்வின் பட்டயங்கள் கூறுகின்றன. பல்லவ மன்னன் நந்திவர்மன் 13 வயது சிறுவன் ஆவான். இதனால் படையெடுப்பை எதிர்கொள்ள முடியாமல் நாட்டை விட்டு காஞ்சிபுரத்திலிருந்து அரச சின்னங்களை விட்டுவிட்டுத் தப்பிச்சென்றான். பல்லவனின் மதிப்புமிக்க போர்முரசு (katumukha), போரிசைக்கருவி (samudraghosa,) தண்டாயுதம், போர் யானைகள், விலையுயர்ந்த கற்கள், பேரளவு தங்கக்குவியல் ஆகியவை சாளுக்கிய மன்னனுக்குச் சொந்தமானது.[5]

காஞ்சிபுரம் நகர சாலையில் இரண்டாம் விக்ரமாதித்தன் வெற்றிகரமாக நுழைந்தான். மக்களுக்கு எவ்வித தீங்கும் செய்யவில்லை என்று இவனது காஞ்சி கன்னட கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.(கல்வெட்டு- Kanchim avinasya pravisya) [5][6] போரில் வென்ற பல அரசர்கள் போல் அல்லாமல், விக்ரமாதித்தன் மிக கெளரவமான முறையில் நடந்துகொண்டான். உள்ளூர் பிராமணர்கள் மற்றும் பலவீனமான குடிமக்களுக்கு தானம் கொடுத்தான். காஞ்சிபுரம் கோயில்களுக்கு நிவந்தங்களை அளித்தான் என்று கைலாசநாதர் கோவில் மண்டபத்தின் (கூடம்) தூணில் கன்னட மொழிக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.[2][6][7] மற்ற கோயில்களுக்கு அவன் செய்தவை அவனது செப்புத் தகடுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதனால் பல்லவ ஆக்கிரமிப்பினால் சாளுக்கிய பேரரசிற்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்தான். ஒரு நூற்றாண்டுக்கும் முந்தைய நரசிம்மவர்மன் செயலுக்கு பழிவாங்கி இரண்டாம் விக்ரமாதித்தன் வாதாபி திரும்பினான். இவன் காலத்துக்குப் பின்னர் சாளுக்கிய பேரரசு இரண்டாம் புலிகேசியின் ஆட்சியின் போது இருந்த நிலையை அடைந்தது.

மேலும் இவன் சேரர், சோழர் ,பாண்டியர், களப்பிரர், ஆகியோரைத் தோற்கடித்தான். இந்த வெற்றிகளை இந்தியக் கடற் கரையில் தனது கல்வெட்டில் எழுதியுள்ளான்.[7] காஞ்சிபுரத்தின் மீது மீண்டும் படையெடுப்பு இவனது மகன் இளவரசன் இரண்டாம் கீர்த்திவர்மன் தலைமையின் கீழ், விக்ரமாதித்தனின் ஆட்சியின் இறுதி ஆண்டுகளில் நடந்தது.[8]

அரேபியர்கள் மோதல்

தொகு

விக்ரமாதித்தன் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில், சிந்துவில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருந்த அரபு படையெடுப்பாளர்கள், தக்கானத்தின் மீது படையுடுக்க முற்பட்டனர். இதை சாளுக்கிய பேரரசின் லதா கிளை (குஜராத்) ஆளுநரான விக்ரமாதித்தனின் தாயாதியான புலிகேசி என்பவன் அவர்களுடன் போராடி 739-ல் அவர்களைத் தடுத்தான்.[9][10] இதனால் இரண்டாம் விக்ரமாதித்தன் அவனைப் பாராட்டி, அவனுக்கு 'அவனிஜனஸ்ரேயா' (பூமியின் மக்களுக்கு அடைக்கலம் தருபவன்) என்ற பட்டத்தை அளித்தான். இராஷ்டிரகூடர் மன்னன் தந்திவர்மன் அல்லது தந்திதுர்காவும் சாளுக்கியருடன் இணைந்து அரேபியரை எதிர்த்து போரிட்டனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Ramesh (1984), p156
  2. 2.0 2.1 2.2 2.3 Kamath (2001), p63
  3. Ramesh (1984), p 157
  4. Sastri (1955), p 139
  5. 5.0 5.1 Ramesh (1984), p158
  6. 6.0 6.1 Sastri (1955), p 140
  7. 7.0 7.1 Ramesh (1984), p 159
  8. Ramesh (1984), p 160
  9. Ancient India by Ramesh Chandra Majumdar: p.279
  10. History of India by N. Jayapalan: p.152
முன்னர் Chalukyas
733–744
பின்னர்

குறிப்புகள்

தொகு