செங்குருதியணு

(இரத்தச் சிவப்பணு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செங்குருதியணு அல்லது இரத்தச் சிவப்பணு (Erythrocytes or Red blood cell) (இலங்கை வழக்கு: செங்குருதிக் கலம் அல்லது செங்குருதிச் சிறுதுணிக்கை) முதுகெலும்புடைய விலங்குகளின் குருதியில் உள்ள உயிரணுக்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனவாகும். இவையே இவ் விலங்குகளில் ஆக்சிசனை நுரையீரலிலிருந்து இழையங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. பிற்பாடு, இழையங்களிலிருந்து வெளியிடப்படும் கரியமில வாயுவையும் நுரையீரலுக்கு எடுத்துச் செல்கின்றன. இப்பணியில் உதவுவது இவற்றிலுள்ள ஹீமோகுளோபின் என்ற புரதமாகும்.

மனித இரத்தச் சிவப்பணுக்கள்

இவை வட்ட வடிவில் இருபுறமும் குழிந்த செல்கள் இச்செல்களில் உட் கரு இல்லை. ஆண்களின் இரத்தத்தில் ஒவ்வொரு கன மில்லிமீட்டர் இரத்தத்திலும் ஏறக்குறைய 5.2 மில்லியன் சிவப்பணுக்கள் உண்டு. (அளவீடு 4.2-5.8 மில்லியன்) பெண்களின் இரத்தத்தில் ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 4.5 மில்லியன் சிவப்பணுக்கள் (அளவீடு 3.3-5.2 மில்லியன்) அமைந்திருக்கும். தட்டு வடிவில் உள்ள சிவப்பணுவின் குறுக்கு விட்டத்தின் அளவு 7.5 mm ஆகும். ஒவ்வொரு செக்கனிலும் 2.4 மில்லியன் செங்குருதியணுக்கள் உருவாக்கப்படுகின்றன[1]. எலும்பு மச்சையில் இவை உற்பத்தியாகின்றன. இவை குருதியில் 100-120 நாட்கள் இருந்து, பின்னர் முதிர்வடைந்த சிவப்பணுக்கள் பெருவிழுங்கி (Macrophage) இனால், கல்லீரல், மண்ணீரலில் அழிக்கப்படுகின்றன.

சிவப்பணுவும் வெள்ளையணுவும்
சிவப்பணுவும் வெள்ளையணுவும்

தொழில்கள்

தொகு
  • பிரதான தொழில்: செங்குருதிக் கலங்களின் பிரதான தொழில் ஆக்சிசன் வாயுவைக் காவுவதும் விடுவிப்பதுமாகும். செங்குருதிக் கலங்களிலுள்ள ஹீமோகுளோபின் புரதத்திலுள்ள இரும்பு அயன்களுடனேயே ஆக்சிசன் இணைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு பின் ஆக்சிசன் குறைவான இடத்தில் விடுவிக்கப்படுகின்றது. குருதியில் கொண்டு செல்லப்படும் ஆக்சிசனில் 98%க்கும் மேற்பட்ட வீதமான ஆக்சிசன் செங்குருதிக் கலங்களிலேயே காவப்படுகின்றன.
  • குருதியில் காவப்படும் 5-10% காபனீரொக்சைட்டை ஹீமோகுளோபினின் புரதப்பகுதியோடு இணைத்துக் காவி விடுவித்தல். (குருதி முதலுருவில் கரைந்த இரு காபனேற்று அயன் (HCO3-) வடிவில் காவப்படுவதே பிரதான முறையாகும். கரைந்த CO2 வடிவிலும் காவப்படுகின்றது)
  • காபனீரொக்சைட்டுக் கொண்டு செல்லலில் இக்கலத்திலுள்ள நொதியங்கள் உதவுகின்றன.

முள்ளந்தண்டுளிகளின் செங்குருதியணு

தொகு
 
முள்ளந்தண்டுளிகளிடையே செங்குழியப் பருமனின் அடிப்படையில் பெரும் வேறுபாடு உள்ளது. முலையூட்டிகளின் செங்குழியத்தில் கரு இல்லை. அத்துடன் முலையூட்டிகளின் செங்குழியப் பருமன் ஏனைய வகை முள்ளந்தண்டுளிகளினதை விட மிகவும் குறைவாகும்.[2]

முள்ளந்தண்டுளிகளில் மாத்திரமே செங்குருதியணு காணப்படுகின்றது. இவற்றில் இனத்துக்கினம் செங்குருதியணுவின் வடிவமும், கட்டமைப்பும் மாற்றமடைகின்றது. முலையூட்டிகள் தவிர ஏனைய அனைத்து முள்ளந்தண்டுளிகளின் (மீன்கள், ஈரூடகவாழிகள், ஊர்வன, பறவைகள்) செங்குருதிக் கலங்களிலும் கரு உள்ளது. செங்குருதிக் கலங்களே குருதிக்குச் சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றன. செங்குருதிக் கலங்களின் ஹீமோகுளோபினின் ஹீம் கூட்டத்தின் இரும்பு அயன்களாலேயே இரத்தம் சிவப்பு நிறமாகின்றது. செங்குருதிக் கலங்கள் நீக்கப்பட்ட குருதி முதலுரு வைக்கோல் மஞ்சள் நிறத்திலேயே இருக்கும். உலகில் குடும்பம் Channichthyidae மீன்களில் மாத்திரமே செங்குருதிக் கலங்களோ ஈமோகுளோபினோ காணப்படுவதில்லை. இவை அந்தார்ட்டிக் சமுத்திரத்தின் குளிர் நீரில் வாழ்வதால் அந்நீரே அவற்றுக்குத் தேவையான ஆக்சிசனைக் காவுகின்றது. (குளிர் நீரில் ஆக்சிசனின் கரைதிறன் அதிகமாகும்). பொதுவாக செங்குருதிக் கலத்தின் விட்டம் குருதி மயிர்க்குழாயின் விட்டத்தை விட 25% அதிகமாகும். எனினும் செங்குருதிக் கலங்களின் கலமென்சவ்வின் மீள்தன்மை (Elasticity) காரணமாக அக்குறுகிய இடைவெளியூடாகவும் நசிந்து கொண்டு செல்கின்றன. இவ்வாறு இருப்பதால் செ.கு.கலங்கள் மெதுவாக மயிர்த்துளைக் குழாயூடாக செல்கின்றன. இம்மெதுவான அசைவால் அதிகளவு ஆக்சிசன் பரவக் கூடியதாக உள்ளது.

ஈமோகுளோபின்

தொகு

முள்ளந்தண்டுளிகளின் பிரதான சுவாச நிறப்பொருள் ஈமோகுளோபின் ஆகும். ஈமோகுளோபினில் குளோபின் எனும் புரதப்பகுதியும் ஹீம் எனும் அயன் பகுதியும் உண்டு. ஆக்சிசன் இரும்பு அயனோடு இணையும்; CO2 புரதப்பகுதியோடு இணையும். எனவே ஆக்சிசன் கொண்டு செல்லலுக்கு காபனீரொக்சைட்டு போட்டியாக இருப்பதில்லை. எனினும் புகையிலுள்ள காபனோரொக்சைட்டு (CO) இரும்போடு இணைவதால் ஆக்சிசன் கொண்டு செல்லலுக்குப் போட்டியாக அமைந்து ஆக்சிசன் காவலைக் குறைக்கின்றது. ஒரு ஈமோகுளோபின் புரதத்தில் நான்கு இரும்பு அயன்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு செங்குருதிக் கலத்தில் கிட்டத்தட்ட 270 மில்லியன் ஈமோகுளோபின் மூலக்கூறுகள் உள்ளன.

முலையூட்டிகளின் செங்குருதிக் கலம்

தொகு

மனிதன் உட்பட முலையூட்டிகளின் செங்குருதிக் கலம் ஆக்சிசன் காவல் வினைத்திறனை அதிகரிப்பதற்கென பல இசைவாக்கங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் கருவோ, இழைமணியோ இருப்பதில்லை. எனவே இவற்றின் செங்குருதிக் கலங்களில் டி.என்.ஏ இருப்பதில்லை. முலையூட்டிகளின் செங்குருதிக் கலங்களுக்குத் தேவையான சக்தி காற்றின்றிய சுவாசம் மூலமே பெறப்படுகின்றது. இழைணி இன்மையால் கிடைக்கும் நன்மை:

  • காவப்படும் ஆக்சிசன் காவிக் கலமான செ.கு.கலத்தால் உபயோகிக்கப்பட மாட்டாது.

கரு இல்லாததால் கிடைக்கும் நன்மை:

  • கரு பிடிக்கும் கனவளவு மீதப்படுத்தப்பட்டிருப்பதால், அதிக ஆக்சினைக் காவலாம்.
  • டி.என்.ஏ இல்லாததால் செ.கு.கலங்களை எந்தவொரு வைரஸ்ஸாலும் தாக்கி அழிக்க முடியாது.

முலையூட்டிகளின் செங்குருதிக் கலங்கள் இரட்டைக் குழிவான தட்டுருவானவை. இவ்விரட்டைக் குழிவும் ஆக்சிசன் பரவலடையும் மேற்பரப்பின் பரப்பளவை அதிகரிப்பதாக உள்ளது.

செங்குழிய வாழ்க்கைக் காலம்

தொகு

செங்குழியங்கள் பொதுவாக செவ்வென்பு மச்சையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு செக்கனிலும் 2-4 மில்லியம் செங்குழியங்கள் உருவாகின்றன. இவற்றின் உற்பத்திக்கு இரும்புச்சத்து, புரதம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் B12 என்பன அவசியமாகும். ஒவ்வொரு செங்குழியமும் முதல் 7 நாட்களை செவ்வென்பு மச்சையினுள் ஆரம்ப நிலையிலும், கிட்டத்தட்ட 120 நாட்களை குருதியிலும் கழிக்கின்றன. செங்குழியங்களின் முன்னோடிக் கலங்கள் வலையுருக்குழியங்கள் ஆகும். வாழ்வுக் காலத்தை முடித்த செங்குழியங்களும், காயமடைந்த அல்லது வித்தியாசமான செங்குழியங்களும் குருதியிலிருந்து நீக்கப்படுகின்றன. பிரதானமாக மண்ணீரலிலும், ஈரலிலும் இவை நீக்கப்படுகின்றன. ஈரலில் அழிக்கப்படும் செங்குழியங்களின் கூறுகளிலிருந்தே பித்த நிறப்பொருட்கள் உருவாகின்றன. கருப்பையில் உள்ள முதிர்மூலவுரு நிலையில் மாத்திரமே செங்குழியங்கள் பிரதானமாக ஈரலில் உருவாக்கப்படுகின்றன.

மனிதரில் செங்குழியம்

தொகு
 
மனித செங்குழியம் உடலை முழுமையாக சுற்றிவர 20 செக்கன்கள் எடுக்கும். இக்காலத்தில் இதில் ஆக்சிசன் அளவு மாறுபடலை இப்படிமம் காட்டுகின்றது. நுரையீரல் சிற்றறையில் உள்ளபோது ஆக்சிசன் அளவு உச்சத்தில் உள்ளது.
  • விட்டம்:6.2–8.2 µm
  • தடிப்பு:0.8–1 µm
  • மேற்பரப்பளவு:136 μm2
  • வடிவம்:இருகுழிவான வட்டத்தட்டு வடிவம்
  • எண்ணிக்கை: மொத்தமாக 20-30 திரில்லியன். இது உடலில் உள்ள மொத்தக் கலங்களின் எண்ணிக்கையில் கால்ப்பங்காகும்.
ஆண்களில்- 5.5-6 மில்லியன்/µL
பெண்களில்- 4.5-5 மில்லியன்/µL

செங்குழியத்துடன் தொடர்புடைய நோய்கள்

தொகு
 
அரிவாள்க் கல நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் குருதி. செங்குழியங்களின் வடிவம் விகாரமடைந்துள்ளதை அவதானிக்கலாம்.
  • குருதிச்சோகை- குருதியில் செங்குழிய எண்ணிக்கை குறைவடைவதால் அல்லது செங்குழிய வடிவம் விகாரமாவதால் ஏற்படும் நோய் நிலமை. இதனால் உடலில் ஆக்சிசன் கொண்டு செல்லும் வினைத்திறன் குறைவடையும்.
  • இரும்புச் சத்துக் குறைபாட்டு குருதிச்சோகை- உணவில் இரும்புச் சத்து குறைவாக உள்ளமை/ உடலினுள் இரும்புச் சத்து உறிஞ்சப்படல் குறைவடைவதால் ஏற்படும் குருதிச் சோகை. செங்குழிய உற்பத்திக்கு இரும்புச் சத்து அவசியமென்பதால் உருவாக்கப்படும் செங்குழியங்களின் எண்ணிக்கை குறைவடைந்து குருதிச் சோகை ஏற்படும்.
  • அரிவாள்-கலச் செங்குழிய குருதிச் சோகை- இது மரபணு சார்ந்த நோயாகும். மரபணுவில் ஏற்படும் மாறுதலால் உண்டாகின்றது. செங்குழியங்கள் அரிவாள் போன்ற வடிவை எடுக்கின்றன. அவற்றின் மீள்தன்மையும், ஆக்சிசன் காவும் திறனும் குறைவடைகின்றன. குருதிக் கலன்கள் விகாரமுள்ள இக்கலங்களால் அடைக்கப்படலாம். இதனால் வலியும், பக்கவாதமும் ஏற்படலாம். மண்ணீரலும் பாதிக்கப்படலாம்.
  • தலசீமியா- மரபணு சார்ந்த நோய். ஈமோகுளோபின் உப அலகுகள் சரியான வீதத்தில் உருவாக்கப்படாமையால் ஏற்படும் நோய் நிலமை.
  • கோளக் குழியமாதல் - மரபணு சார்ந்த நோய். செங்குழிய மென்சவ்வில் ஏற்படும் விகாரத்தால் கலம் சிறிய கோள வடிவத்தை எடுக்கும். இக்கலங்கள் மண்ணீரலில் இவற்றின் விகாரத்தன்மை காரணமாக அழிக்கப்படுவதால், செங்குழிய எண்ணிக்கை குறைவடைந்து குருதிச் சோகை ஏற்படும்.[3]
  • செங்குழியச் சிதைவு-உருவாக்கப்படும் அளவை விட செங்குழியங்கள் அதிகளவில் அழிக்கப்படுவதால் ஏற்படும் நோய் நிலமை.
  • மலேரியா- மலேரியாவை ஏற்படுத்தும் Plasmodium புரோட்டோசோவா தன் வாழ்க்கை வட்டத்தில் சில காலத்தை செங்குழியத்தினுள்ளே களிக்கும். அது செங்குழியத்தினுள்ளே உள்ள ஈமோகுளோபினை பிரிகையடையச் செய்து காய்ச்சலை ஏற்படுத்தும்.
  • செங்குழிய எண்ணிக்கை அதிகரித்தல்- இந்நிலைமை குருதியின் பிசுக்குமையை அதிகரித்து குருதியோட்டத்தைக் குறைக்கும்.
  • பிழையான குருதி மாற்றீடு - பொருந்தாத குருதி வகைகளை மாற்றீடு செய்வதால் ஏற்படும் நோய் நிலமை. குருதி வாங்கியின் பிறபொருளெதிரிகள் பொருத்தமில்லாத குருதியிலுள்ள செங்குழியங்களை அழிப்பதால் இறுதியில் இறப்பு நிகழலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Erich Sackmann, Biological Membranes Architecture and Function., Handbook of Biological Physics, (ed. R.Lipowsky and E.Sackmann, vol.1, Elsevier, 1995
  2. Gulliver, G. (1875). "On the size and shape of red corpuscles of the blood of vertebrates, with drawings of them to a uniform scale, and extended and revised tables of measurements". Proceedings of the Zoological Society of London 1875: 474–495. 
  3. An X, Mohandas N (May 2008). "Disorders of red cell membrane". British Journal of Haematology 141 (3): 367–75. doi:10.1111/j.1365-2141.2008.07091.x. பப்மெட்:18341630. 

வெளி இணைப்பு

தொகு

http://en.wikipedia.org/wiki/Erythrocytes

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்குருதியணு&oldid=3129335" இலிருந்து மீள்விக்கப்பட்டது