இரத்தினசோதி சரவணமுத்து

சேர் இரத்தினசோதி சரவணமுத்து (Sir Ratnasothy Saravanamuttu) இலங்கைத் தமிழ் மருத்துவரும் அரசியல்வாதியும் ஆவார். இலங்கை அரசாங்க சபையின் உறுப்பினராக இருந்தவர். இவர் கொழும்பு மாநகரசபை முதல்வராகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கையர் ஆவார்.[1]

இலங்கை அரசு அதிகாரி பாக்கியசோதி சரவணமுத்துவின் மகனான இரத்தினசோதி கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் சென்னையில் மருத்துவக் கல்வியையும், இலண்டனில் மருத்துவத்தில் பின்பட்டப்படிப்பும் பெற்றார். இவரது இளைய சகோதரர்கள் மாணிக்கசோதி சரவணமுத்து, பாக்கியசோதி சரவணமுத்து, லெப். கேணல் எஸ். சரவணமுத்து ஆகியோராவார்.

1931 ஆம் ஆண்டில் இவர் இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கொழும்பு வடக்குத் தொகுதியில் இருந்து இலங்கை அரசாங்க சபைக்குத் தேர்தெடுக்கப்பட்ட முதலாவது பிரதிநிதி ஆனார். ஆனாலும், தேர்தலில் முறைகேடுகள் செய்ததாக தேர்தல் நீதிபதி ஒருவரினால் குற்றம் சாட்டப்பட்டு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் ஏழு ஆண்டுகளுக்கு இவரது குடியியல் உரிமையும் பறிக்கப்பட்டது. இதனையடுத்து 1932 மே 30 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதே தொகுதியில் இவரது மனைவி நேசம் சரவணமுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது பெண் உறுப்பினர் இவராவார்.[2][3]

இரண்டாம் உலகப் போரின் போது இவர் ஆற்றிய சேவைகளுக்காக இவருக்கு பிரித்தானிய அரசு சேர் பட்டம் வழங்கிச் சிறப்புப் படுத்தியது.

மேற்கோள்கள்தொகு