பாக்கியசோதி சரவணமுத்து

பாக்கியசோதி சரவணமுத்து (Paikiasothy Saravanamuttu, 26 அக்டோபர் 1892 - 28 மே 1950) இலங்கை அரசு அதிகாரியும், அரசியல்வாதியும் ஆவார்.

பாக்கியசோதி சரவணமுத்து
Paikiasothy Saravanamuttu
பிறப்பு(1892-10-26)26 அக்டோபர் 1892
இறப்பு28 மே 1950(1950-05-28) (அகவை 57)
இனம்இலங்கைத் தமிழர்
படித்த கல்வி நிறுவனங்கள்இலண்டன் பல்கலைக்கழகம்
பணிஅரசு அதிகாரி
வாழ்க்கைத்
துணை
சிபில் தங்கம்
உறவினர்கள்சகோதரர்கள்: இரத்தினசோதி, நனசோதி, தர்மசோதி, மாணிக்கசோதி, சப்தரணசோதி

ஆரம்ப வாழ்க்கை

தொகு

சரவணமுத்து 1892 அக்டோபர் 26 இல் கொழும்பைச் சேர்ந்த மருத்துவர் வேதாரணியம் சரவணமுத்து என்பவருக்குப் பிறந்தார்.[1] இவரது தாயார் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்.[2] இவரது தந்தை வழிப் பாட்டனார் வேதாரணியம் என்பவர் வட இலங்கையில் சுன்னாகம் என்ற சிறிய நகரை நிருமாணித்தவர் எனக் கூறப்படுகிறது.[3] சரவணமுத்துவுடன் கூடப் பிறந்தவர்கள் இரத்தினசோதி, நனசோதி, தர்மசோதி, மாணிக்கசோதி, சப்தரணசோதி ஆகியோர் ஆவர்.[1] கல்கிசை புனித தோமையர் கல்லூரில் கல்வி பயின்றார்.[1][2] பள்ளிக்கூட விளையாட்டுக் கழகத்தில் உறுப்பினராக இருந்து, துடுப்பாட்ட, உதைபந்தாட்ட அணிகளிலும் சேர்ந்து விளையாடினார்.[2] இலண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர்,[1][2] சரவணமுத்து கொழும்பு றோயல் கல்லூரி சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] இந்தியக் குடிமைப் பணியில் சேருவதற்காக 1915 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ச் பிட்சுவில்லியம் கல்லூரியில் சேர்து படித்தார். ஆனாலும், குடும்ப சூழலால், அவரால் படிப்பைத் தொடர முடியாமல் போனது.[2][3]

புத்தளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமாரு என்பவரின் மகள் சிபில் தங்கம் என்பவரை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பாஸ்கி, சந்திரி என இரண்டு ஆண்களும், சகுந்தலா என்ற ஒரு பெண்ணும் பிள்ளைகள் உள்ளனர்.[1] இவர்களில் பாஸ்கியின் மகன் பாக்கியசோதி மாற்றுக் கொள்கைகள் மையத்தின் தலைவராகப் பணியாற்றுகிறார்.[2]

1919 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பிய சரவணமுத்து இலங்கைக் குடியுரிமை சேவையில் சேர்ந்து, ஆரம்பத்தில் கொழும்பு கச்சேரியில் பணியாற்றினார்.[2][3] பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றிய இவர் குடியுரிமை சேவையாளராகத் தரமேற்றப்பட்டார்.[1] 1926 இல் முல்லைத்தீவிலும் பின்னர் அம்பாந்தோட்டையிலும் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினார்.[1][2] பதுளை, களுத்துறை, கேகாலை, குருணாகல் ஆகிய இடங்களில் நீதித்துறை அலுவலராகப் பணியாற்றினார்.[1][2] 1946 இல் விவசாயத்துறை அமைச்சில் பணியாற்றிய பின்னர், தேயிலை, இரப்பர் கட்டுப்பாடு ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.[1][3] அப்போதைய காலகட்டத்தில் நாட்டிலேயே மிக அதிக வேதனம் பெற்ற அரசு அதிகாரியாக இவர் திகழ்ந்தார்.[2] இவரது போர்கால சேவைக்காக இவருக்கு பிரித்தானிய அரசின் சென் மைக்கேல், சென் ஜோர்ஜ் விருது 1946 புத்தாண்டில் அறிவிக்கப்பட்டதாயினும், அவர் விருதை ஏற்றுக்கொள்ளவில்லை.[2][3]

1946 ஆம் ஆண்டில் இளைப்பாறிய பாக்கியசோதி, அரசியலில் நுழைந்தார்.[2] 1947 1வது நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக கொழும்பு தெற்கில் போட்டியிட்டு 640 வாக்குகளால் இரண்டாவதாக வந்து தோற்றார்.[4] இத்தேர்தலில் முதலாவதாக வந்து வெற்றி பெற்ற ஆர். ஏ. டி மெல் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தனது பதவியை இழந்தார்.[2] 1948 நவம்பரில் நடந்த இடைத்தேர்தலில் பாக்கியசோதி போட்டியிட்டு மீண்டும் தோற்றார்.[5]

சமூகப் பணி

தொகு

சரவணமுத்து தமிழ் யூனியன் துடுப்பாட்ட, தடகளக் கழகத்தில் இணைந்து அதன் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.[1] 1948 முதல் 51 வரை இக்கழகத்தின் தலைவராக இருந்து பணியாற்றினார்.[6] கழகத்துக்கான அரங்கம் ஒன்றை நிறுவினார். கொழும்பு ஓவல் என அழைக்கப்படும் இவ்வரங்கத்திகு பாக்கியசோதியின் நினைவாக 1977 ஆம் ஆண்டில் பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் எனப் பெயர் மாற்றப்பட்டது.[1][3] பி. சரா விருது என்ற துடுப்பாட்டத் தொடர் 1949 முதல் 1982 வரை விளையாடப்பட்டு வந்தது.[1] சரவணமுத்து 1937 முதல் 1950 வரை இலங்கைத் துடுப்பாட்டக் கழகத்தின் தலைவராகவும், 1949 முதல் 1950 வரை இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்தின் முதலாவது தலைவராகவும் இருந்து பணியாற்றினார்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 181.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 "He gave of his best, but died a disillusioned man". சண்டே டைம்சு. 28 மே 2000. http://www.sundaytimes.lk/000528/plus10.html. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Billimoria, Marc (13 ஆகத்து 2004). "The Saravanamuttu Prize at S. Thomas' College". டெய்லி நியூஸ். http://archives.dailynews.lk/2004/08/13/spo10.html. 
  4. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-12-28.
  5. "Summary of By-elections 1947 to 1988" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2014-12-28.
  6. "Presidents". Tamil Union Cricket and Athletic Club. Archived from the original on 2017-01-08. பார்க்கப்பட்ட நாள் 2014-12-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கியசோதி_சரவணமுத்து&oldid=3562512" இலிருந்து மீள்விக்கப்பட்டது