இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி

இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி 1898 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் தொழில்நுட்பக் கல்லூரி (Technical College) என்பது தொழில்முறைக் கல்வி மற்றும் பயிற்சி வழங்கும் அரசினர் உயர் கல்வி நிறுவனம் ஆகும். இக்கல்லூரிகள் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படுகிறது. நாடெங்கும் இவ்வாறான கல்லூரிகள் 33 உள்ளன.

வரலாறுதொகு

முதன்முறையாக இக்கல்லூரி அரசத் தொழில்நுட்பக் கல்லூரி என்ற பெயரில் 1893 ஆம் ஆண்டில் கொழும்பில் மருதானை என்ற இடத்தில் அமைக்கப்பட்டது. 1906 இல் இக்கல்லூரி இலங்கைத் தொழில்நுட்பக் கல்லூரி என்று பெயர் மாற்றப்பட்டது. இக்கல்லூரியில் ஆரம்பத்தில் வேதியியல், இயற்பியல், உயிரியல் போன்ற தூய அறிவியல் கல்வியும், குடிசார் பொறியியல், மின்பொறியியல், எந்திரப் பொறியியல் போன்றவற்றில் தொழில்நுட்பக் கல்வியும் போதிக்கப்பட்டன. இது இப்போது மருதானை தொழில்நுட்பக் கல்லூரி என அழைக்கப்படுகிறது.

1921 இல் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி அமைக்கப்பட்ட போது, தொழில்நுட்பக் கல்லூரியின் அறிவியல் பகுதி பல்கலைக்கழகக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. இப்பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகத்தின் இணைசார் கல்லூரியாக இருந்தது. 1933 ஆம் ஆண்டில் இருந்து லண்டன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறைக்கான வெளிசார் மாணவர்களை இலங்கைத் தொழில்நுட்பக் கல்லூரி பயிற்றுவித்தது.

1942 இல் தொழில்நுட்பக் கல்லூரி இலங்கைக் கல்வித் திணைக்களத்தில் இருந்து பிரிக்கப்பட்டு "இலங்கைத் தொழில்நுட்பக் கல்லூரித் திணைக்களம்" புதிய திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பின்னர் இக்கல்லூரியில் கணக்குப் பதிவியல், வர்த்தகக் கல்வி போன்றவை பயிற்றுவிக்கப்பட்டன. 1950 இல் பொறியியல் கல்வித் துறை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்துடன் இணைக்கப்பட்டது. 1950களில் காலி, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் கனிஷ்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. 1960களில் மேலும் பல தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன.