உத்தமதானபுரம்

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

உத்தமதானபுரம் (Uthamathanapuram), என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

அமைவிடம் தொகு

இது சென்னையிலிருந்து 307 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைநகரான திருவாரூரில் இருந்து 33 கி.மீ தொலைவிலும்,[1] பாபநாசத்துக்குத் தென்கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில், காவேரி வடிநிலத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரின் மக்கள் தொகை சுமார் 900 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு) ஆகும்.

வரலாறு தொகு

உத்தமதானபுரம் தமிழ்த் தாத்தா உ. வே. சுவாமிநாத ஐயரின் (1855-1942) சொந்த ஊர் ஆகும். அவர் தன் தாயின் சொந்த கிராமமான சூரியமூலையில் பிறந்தாலும், தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை வேறு இடத்தில் கழித்தாலும், சுவாமிநாத ஐயர் எப்போதும் உத்தமதானபுரத்தைத் தனது சொந்த ஊராகக் கருதினார். ஏனெனில் அவரது தந்தைவழி குடும்பம் இங்கே இருந்து வந்தது. சுவாமிநாத ஐயர் தனது சுயசரிதையான என் சரித்திரத்தில், கிராமத்தின் தோற்றம் குறித்த செவிவழிக் கதையைக் கூறியுள்ளார்: இதன்படி, 18-ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் மன்னர் தனது நாட்டைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டார். பயணத்தின்போது இன்றைய உத்தமதனபுரம் உள்ள இடத்தில் தங்கினார். ஏகாதசி நாட்களில் அவர் ஒரு வேளை மாத்திரமே உணவு உண்ணும் பழக்கம் கொண்டவர். அந்த நாளில் தாம்பூலமும் தரிக்கமாட்டார். ஆனால் அதை மறந்து அங்கே அன்று உணவை உண்டு, தாப்பூலமும் போட்டுக்கொண்டார். பின்னரே அவர் தன் விரதத்தை மீறியதை உணர்ந்தார். அரசர் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாமென்று சில பெரியோர்களைக் கேட்கத் தொடங்கினர். அவர் வைதிக ஒழுக்கமும் தானசீலமும் உடையவரென்பதை யாவரும் அறிந்திருந்தனர்; ஆதலின் அப்பெரியோர்கள், “ஓர் அக்கிரகாரத்தை நிறுவி வீடுகள் கட்டி வேதவித்துக்களாகிய அந்தணர்களுக்கு அவ்வீடுகளோடு பூமியையும் தானம் செய்தால் இந்தத் தோஷம் நீங்கும்” என்றார்கள். உடனே அங்கே ஓர் அக்கிரகாரத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். அதில் 48 வீடுகளைக் கட்டி, இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறாக 24 கிணறுகளையும் அமைக்கச் செய்தார். 48 பிராமணர்களை அருகிலும் தொலைவிலும் உள்ள ஊர்களிலிருந்து வருவித்து, அந்த வீடுகளையும், ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டு மா நன்செயும் அதற்குரிய புன்செயுமாகிய நிலத்தையும் தானம் செய்தார். அந்த உத்தமமான தானப் பொருளாக அமைந்தமையால் அவ்வூர் உத்தமதானபுரம் என்னும் பெயரால் வழங்கலாயிற்று. சுவாமிநாத ஐயரின் கூற்றுப்படி, பல்வேறு பிராமண சாதிகளைச் சேர்ந்தவர்களும், பிராமணர்களுக்குச் சொந்தமான நிலங்களில் உழவு வேலைசெய்த தாழ்த்தப்பட்ட விவசாயிகளும் அவரது குழந்தைப் பருவத்தில் கிராமத்தில் வாழ்ந்தனர்.[2]

உத்தமதானபுரம் சிற்றூர் இரண்டு தெருக்களை மட்டுமே கொண்டுள்ளது. ஒன்று கிழக்கு-மேற்காகவும், இன்னொரு தெரு வடக்கு-தெற்காகவும் உள்ளது. கிழக்கு-மேற்குத் தெருவின் மேற்கு முனையில் விஷ்ணுவுக்கான கோயில் உள்ளது, அவர் இலட்சுமி நாராயணப் பெருமாள் என்று வழிபடப்படுகிறார். மேலும் வடக்கு-தெற்கு தெருவின் தெற்கு முனையில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது.[3] உ. வே. சுவாமிநாத ஐயர் வாழ்ந்த இல்லமானது 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நினைவில்லமாக அறிவிக்கப்பட்டது.[4]

குறிப்புகள் தொகு

  1. "Uthamadanapuram Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-31.
  2. U. V. Swaminatha Iyer: The Story of My Life, übersetzt von Kamil V. Zvelebil, Band 1, Madras: Institute of Asian Studies, 1990, S. 1–5.
  3. Swaminatha Iyer 1990, S. 2.
  4. The Hindu, 28. April 2008: „U.Ve.Swaminatha Iyer memorial inaugurated“.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தமதானபுரம்&oldid=3529397" இலிருந்து மீள்விக்கப்பட்டது