உன்ன மரம்

தாவர இனம்

உன்ன மரம் என்பது சங்ககாலத்தில் இருந்த மர வகைகளில் ஒன்று. இது இக்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இதன் வேர்கள் வலிமை இல்லாதவை. இந்த மரம் நாட்டுக்கு நன்மை வருங்கால் பூத்துக் குலுங்கியும், கேடு வருங்கால் காய்ந்தும் நிற்கும் எனக் கூறப்படுகிறது. போர்களத்தில் பகைவரின் பிணங்களை அடுக்குவதைத் தொல்காப்பியம் 'உன்னநிலை' என்னும் துறையாகக் காட்டுகிறது. பருவ மகளின் நடத்தைகளைத் தாய்மார் உன்னிப்பாகக் கண்காணிப்பதை 'உன்னக் கொள்கை' என்றனர்.

சான்றுகள்
தொகு
  • உன்ன மரத்தின் வேர்கள் புன்மையானவை. அதாவது இது ஆணிவேர் இல்லாத மரம். களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் நன்னனின் வாகை மரத்தை வெட்டி வீழ்த்திய பின்னர் உன்னமரம் சாய்ந்து போயிற்று. [1]
  • உன்னமரம் சாய்ந்தது கண்டு நாட்டுக்கு நேர்ந்த தீங்கைப் போக்கச் செல்வக்கடுங்கோ வாழியாதன் கொடை வழங்கினான். [2]
  • வெட்சிப் போரின்போது புறமுதுகிட்டு ஓடாத மன்னர்களின் உடலைப் போர்க்களத்தில் அடுக்குவது 'உன்னநிலை' என்னும் துறை எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [3]
  • 'உன்னம்' என்பது மரம். அது தன் நாட்டகத்துக் கேடுவருங்கால் உலறியும், வாராத காலம் குழைந்தும் நிற்கும். [4]
  • உலர்ந்த உன்னமரத்தில் பிணம் தின்னும் பருந்துகள் காத்திருக்கும். [5]
  • பருவ மகளின் வாட்டம் கண்டு தாய்மார் மகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக நோக்குவதற்கு 'உன்னக்கொள்கை' என்றுபெயர். [6]
  • உலர்ந்த உன்னமரத்தில் எளிதாகக் கறையான் பற்றும். [7]

அடிக்குறிப்பு

தொகு
  1. புன் கால் உன்னம் சாய, (பதிற்றுப்பத்து 40)
  2. புன் கால், உன்னத்துப் பகைவன், (பதிற்றுப்பத்து 61)
  3. ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும் (தொல்காப்பியம் பொருளதிகாரம் 63)
  4. தொல்காப்பியம் பொருளதிகாரம் 63 இளம்பூரணர் உரை
  5. செந் தொடை பிழையா வன்கண் ஆடவர் அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை, திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும் உன்ன மரத்த துன் அருங் கவலை, (புறநானூறு 3)
  6. உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம் ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம் (அகநானூறு 65)
  7. அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்திச் சிதடி கரைய, பெரு வறம் கூர்ந்து, (பதிற்றுப்பத்து 23)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்ன_மரம்&oldid=1681821" இலிருந்து மீள்விக்கப்பட்டது