உலகச் சமயங்களின் பாராளுமன்றம்
உலகச் சமயங்களின் பாராளுமன்றம் என்ற பெயரில் பல கூட்டங்கள் நடை பெற்றுள்ளன. இவற்றுள் மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது, 1893 இல் சிக்காகோவில் இடம்பெற்ற கூட்டம் ஆகும். உலக மத நம்பிக்கைகளிடையே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான முதல் முயற்சி இதுவாகும். இந்த நிகழ்வு, அதன் நூற்றாண்டு நிறைவான 1993 ஆம் ஆண்டில் இன்னொரு உலக சமயங்களின் பாராளுமன்றம் என்னும் பெயர் தாங்கிய கூட்டம் ஒன்றால் நினைவு கூரப்பட்டது. இது, உலக சமயங்களின் பாராளுமன்றம் என்னும் பெயரில் தொடர் கூட்டங்கள் நடப்பதற்கு வித்திட்டது.
1893 இன் பாராளுமன்றம்
தொகு1893 ஆம் ஆண்டில், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400 ஆவது ஆண்டைக் கொண்டாடுமுகமாக சிக்காகோவில், உலக கொலம்பியக் கண்காட்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்காக உலகெங்கிலும் இருந்து பலர் சிக்காகோவுக்கு வந்தனர். முன்னெப்போது இல்லாத அளவுக்கு இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலைப் பயன்படுத்திக் கொண்டு, மகாநாடுகள், பாராளுமன்றங்கள் என்னும் பெயர்களில் பல கருத்தரங்குகளும் இடம்பெற்றன. இவற்றுள் ஒன்றுதான் உலக சமயங்களின் பாராளுமன்றம்.
செப்டெம்பர் 11 தொடக்கம் செப்டெம்பர் 27 வரை இடம்பெற்ற 1893 ஆம் ஆண்டுப் பாராளுமன்றமே கிழக்கையும், மேற்கையும் சேர்ந்த ஆன்மீக மரபுகளின் பேராளர்கள் ஒன்றுகூடிய முறைப்படியான முதல் நிகழ்வு ஆகும். உலகம் தழுவிய மதங்களிடையேயான முறையான கருத்தாடல்களின் தொடக்கம் என இந் நிகழ்வு இன்று போற்றப்படுகிறது.
தாயக அமெரிக்கச் சமயங்கள், சீக்கியம், வேறு சில உள்ளூர்ச் சமயங்களும், புவி மையச் சமயவாதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 1993 ஆம் ஆண்டுக் கூட்டத்திலேயே இவை முதன் முதலாகக் கலந்து கொண்டன. அக்காலத்தில் புதிய இயக்கங்களாக இருந்த ஆன்மீகவாதம் (Spiritualism), கிறிஸ்தவ அறிவியல் (Christian Science) ஆகிய சமயங்கள் இக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தன. கிறிஸ்தவ அறிவியலின் நிறுவனரான மேரி பேக்கர் எடி என்பவரும் பேராளராக வந்திருந்தார். ஐரோப்பாவில் ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தாலும், இக் கூட்டத்தில் பேசப்பட்டதில் இருந்தே பஹாய் சமயம் அமெரிக்காவில் அறிமுகமானது. இலங்கையைச் சேர்ந்த அனகாரிக தர்மபால தேரவாத பௌத்தத்தின் பேராளராகவும், சுவாமி விவேகானந்தர் இந்து சமயத்தின் பேராளராகவும் கலந்து கொண்டனர்.
கருத்துத் தோற்றமும் செயலாக்கமும்
தொகு- சார்லஸ் கரோல் போனி எனும் வழக்கறிஞர் சர்வமத மகாசபை (உலகச் சமயங்களின் பாராளுமன்றம்) ஒன்றை கூட்டும் கருத்தையும், அது கிறித்துவ மதத்தை உலகின் தலைசிறந்த மதமாக மேன்மைப்படுத்தும் என்ற கருத்தையும் தெரிவித்தார். போனியின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு சிகாகோ பிரஸ்பிட்டீரியன் சர்ச்சின் மதபோதகர் ஜான் ஹென்றி பரோஸ் சர்வமத மகாசபை அமைப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு, 1890 ஆம் ஆண்டு அக்டோபரில் இதற்கான பணிகள் துவக்கப்பட்டன.[1]
- 10,000 கடிதங்களும், 40,000 அறிக்கைகளும் இக்குழுவின் சார்பில் உலக நாடுகள் அனைத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, உலக நாடுகள் அனைத்திலிருந்தும் 3000 ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டனர். [1]
- இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலோசகர்கள்: சென்னை இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் ஜி.எஸ்.ஐயர், மும்பை பி.பி.நகர்கர், கல்கத்தா பிரதாப் சந்திர மஜூம்தார். [1]
- கலந்துகொண்ட மொத்த பிரதிநிதிகளான 170 பேரில் 100 பேர் கிறித்தவ மதத்தைச் சார்ந்தோராகவும் உலகின் மற்ற அனைத்து மதங்களுக்கும் சேர்த்த பிரதிநிதிகள் 70 பேராகவும் இருந்தனர்.[1]
- பேப்டிஸ்ட், ஆங்க்லிகன் சர்ச் போன்ற கிறித்துவ சர்ச்கள் பங்கேற்கவில்லை [1]
- ஆங்கிலிகன் சர்ச்சின் பிஷப், சம அந்தஸ்து உடைய மதங்கள் மட்டுமே கலந்துகொள்ளாமல் அனைத்து மதங்களும் அழைக்கப்பட்டிருப்பதால் தம்மால் பங்கெடுக்க இயலாது என பரோஸுக்குக் கடிதம் எழுதித் தெரிவித்தார். [1]
- ஹாங்காங் பாதிரிகள் சர்வமத மகாசபை முயற்சியை ’ஏசுவிற்கு எதிரான வஞ்சகத் திட்டம்’ என்று கண்டித்தனர்.[1]
- திட்டமிட்ட தேதிக்கு மேல் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது.[2]
பங்குபெற்றோர்
தொகு- இதில் இடம் பெற்ற பத்து முக்கிய மதங்கள்: பிரம்ம சமாஜம், யூதம், இசுலாம், இந்து சமயம், பௌத்தம், சமணம் தாவோயியம், கன்பூசியம், ஷின்டோ, கிறித்துவம் ஆகும். இவற்றைக் குறிப்பிடும் வகையில் நியூ லிபர்ட்டி மணி பத்து முறை அடிக்கப்பட்டது. (கத்தோலிக்க, கிரேக்க, புரோட்டஸ்டன்ட் பிரிவுகள் கிறித்துவ மதப்பிரிவுகளாதலால் ஒன்றாகக் கருதப்பட்டன)[3]
- கன்பூசியம் மதத்தின் புங் க்வாங் யு, ஜப்பானிய புத்த மதத்தின் ஹோரின் டோக்கி, இலங்கை பௌத்த மதத்தின் தர்மபாலர் இந்தியாவின் பிரம்மஞான சபையின் மஜும்தார் மற்றும் நகர்க்கர் ஆகியோரின் உரைகள் கீழை நாட்டு மதங்களின் உயர்வை மேலைநாடுகளுக்குத் தெரியப்படுத்தியது.[4]
- சுவாமி விவேகானந்தர்[5] 31ஆம் இருக்கையிலும், அவரருகில் மும்பையின் நகர்கர், அடுத்து இலங்கையின் தர்மபாலர், அடுத்ததாக மஜும்தார் ஆகியோர் அமர்ந்திருந்தனர். [6]
- வீர்சந்த் காந்தி சமண மதத்தின் பிரதிநிதியாகவும், பிரம்மஞான சபையின் பிரதிநிதியாக ஞான் சந்திர சக்கரவர்த்தி மற்றும் அன்னிபெசன்ட் வந்திருந்தனர். [6]
- முதலில் பேசியவர் கிரேக்க சர்ச்சின் ஆர்ச் பிஷப் ஜாந்தே.[7]
- கன்ஃபூசிய பிரதிநிதி புங் க்வாங் யூ குறிப்பிடத்தக்க பேச்சாளராக அமைந்தார். டாக்டர் பரோஸ், இவருக்கு கிடைத்த வரவேற்பைப் போல் மேடையில் வேறொருவரும் பெறவில்லை என்றும் நீண்ட காலமாக அமெரிக்கர்கள் சீனர்களை நடத்திய விதத்திற்கு மன்னிப்பு வேண்டுகின்ற விதத்திலேயே அத்தகைய சிறந்த வரவேற்பை அவரது உரை பெற்றது என்று போனி யும் குறிப்பிட்டனர்.[7]இவர் சீன அரச பாரம்பரிய உடையணிந்திருந்தார்.[6]
- இலங்கையின் புத்த மதத்தின் தர்மபாலரின் உரை பார்வையாளர்களைப் பிரமிக்கச் செய்த உரையாக அமைந்தது.[7]
- சுவாமி விவேகானந்தர் 23வது பேச்சாளர். இவரது உரையை அனைத்திலும் வெற்றிகரமானது என்று பத்திரிக்கைகள் எழுதின. [8]
- சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு, விண்வெளியைப் போல பரந்ததாக எல்லா மதங்களின் சிறந்த சாரத்தை உள்ளடக்கியிருந்தது என்று ’பாஸ்டன் ஈவினிங் டிரான்ஸ்கிரிப்ட்’ பத்திரிக்கையும், இதுவரை வந்துள்ள எந்தச் சொற்பொழிவாளருக்கும், எந்தப்பாதிரிக்கும் இவருக்கு வழங்கப்பட்ட கவனமும் மரியாதையும் வழங்கப்படவில்லை என்று ’அப்பீல் அவலன்ச்’(Appeal Avalanche) பத்திரிக்கையும் எழுதின.(பத்திரிக்கைகள் இவரது பெயரைப் பலவிதமாக உச்சரித்தன).[9]
- இவரது உரையால் கவரப்பட்ட கண்டுபிடிப்பாளர் ஹிராம் மேக்ஸிம் தமது ’லி ஹன்ங் சாங்க்’ஸ் ஸ்க்ரேப் புக்’ ("Li Hung Chang's scrap-book") நூலின் முன்னுரையில் சுவாமி விவேகானந்தரின் உரையைப் புகழ்ந்து அவரை நெப்போலியன் போன்றவர் என்று குறிப்பிட்டு, அவரது உரைகளின் விளைவால் அமெரிக்க மக்கள் வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலர் அளவு சேமித்தனர் என்றும் குறிப்பிடுகிறார்.[10]
- மற்ற அனைத்து சமயப்பிரிவுகளின் பிரதிநிதிகளும் அவரவர்கள் சார்ந்த அமைப்பால் உரிய சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர், ஆனால், இந்தியாவிலிருந்து சென்று இந்து மதத்திற்காகப் பேசிய சுவாமி விவேகானந்தரை எந்த தனிப்பட்ட இந்து அமைப்புகளும் அனுப்பி வைக்கவில்லை. இவரை அனுப்பி வைத்த இவரது சென்னைச் சீடர்கள் உரிய அத்தாட்சிப் பத்திரங்களுடன் அனுப்பிவைக்கத் தவறியிருந்தனர். பிச்சை எடுப்பது சட்டப்படிக் குற்றமாக இருந்த அமெரிக்காவில் எப்படியாவது சமாளித்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் அனுப்பிவைத்திருந்தனர். [11]சென்னையில் இருந்த போது, சுவாமி விவேகானந்தர் அறிமுகக்கடிதத்திற்காக தியாசபிகல் சொசைட்டியின் தலைவர் ஆல்காட்டை சந்திக்க, அவ்வமைப்பில் சேர மறுத்ததால் அறிமுகக்கடிதம் தந்து உதவ ஆல்காட் மறுத்திருந்தார்.[12]
- இந்து மதத்தின் பிரதிநிதியாக சுவாமி விவேகானந்தருக்கு அறிமுகக் கடிதம் தந்தவர் அமெரிக்காவின் பேராசிரியர் ஜான் ஹென்றி ரைட்.[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7823-220-0; பக்கம் 520,521,522
- ↑ சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7823-220-0; பக்கம் 530
- ↑ சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7823-220-0; பக்கம் 547
- ↑ சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7823-220-0; பக்கம் 575
- ↑ சுவாமி விவேகானந்தர் உலகப்புகழ்பெற காரணமாக அமைந்த சிகாகோ உலகச் சமயங்களின் பாராளுமன்றம்
- ↑ 6.0 6.1 6.2 சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7823-220-0; பக்கம் 548
- ↑ 7.0 7.1 7.2 சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7823-220-0; பக்கம் 549
- ↑ சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7823-220-0; பக்கம் 552,553
- ↑ (உதாரணத் தகவல்கள் தரப்பட்டுள்ளன,முழுமையான மற்றும் மற்ற அனைத்து பத்திரிக்கைகளின் செய்திகளையும் காண: http://www.advaitaashrama.org/cw/content.php -->Volume 9-->Newspaper Reports)
- ↑ http://archive.org/stream/cu31924022954436/cu31924022954436_djvu.txt
- ↑ சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7823-220-0; பக்கம் 529
- ↑ சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7823-220-0; பக்கம் 474
- ↑ சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7823-220-0; பக்கம் 537