உலக்கை என்பது உரலில் அரிசி மற்றும் தானியங்களை இடித்து மாவாக பெறப்படுகிறது. அரிசி மற்றும் பல தானியங்களில் இருந்து உமியை பிரித்து எடுத்து உணவு சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் வேலைகளுக்கு அதிகமாக பயன்படுகிறது.

உரலும் உலக்கையும்

அமைப்பு

தொகு

உலக்கை என்பது மரத்தால் செய்யப்பட்ட ஒரு மெல்லிய உருளை வடிவான அமைப்பாகும். சுமார் ஐந்து அடி நீளமும் இரண்டரை அங்குலங்கள் வரை விட்டமும் கொண்ட இதன் இரண்டு பக்கமும் இரும்பால் செய்யப்பட்ட காப்பு எனப்படும். பூண்கள் பொருத்தப்பட்டிருக்கும் இப்பூண் உலக்கையின் இரண்டு பக்கமும் பொருத்தப்படுவதற்கு காரணம் உலக்கையால் உரலில் தானியங்களை வைத்து இடிக்கும் போது மரத்தால் ஆன பகுதி உடைந்து விடாமலிருக்க காப்பாக உதவுகிறது. மாவு இடித்தல் நெல்லுக் குற்றுதல் போன்ற செயற்பாடுகளின் போது உலக்கையை நிலைக்குத்தாக மேலே தூக்கி உரலுக்குள் இருக்கும் பொருட்களின் மீது வேகமாக விழவிடப்படும். பொதுவாகப் பெண்களே இவ்வேலைகளைச் செய்வதால், அவர்கள் இலகுவாகத் தூக்கிக் கையாளுவதற்கு வசதியாக உலக்கையின் எடை அமைந்திருக்கும். ஒரு உரலில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வேலை செய்வதும் உண்டு. அப்போது இரண்டு அல்லது மூன்று உலக்கைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட உலக்கைகள் ஒரே குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் மாறிமாறி உரலுக்குள் விழுந்து எழுவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

பெயர்கள்

தொகு
  • உலக்கை என்னும் சொல்லிற்கு தானியங்களை உரலில் இட்டு இடிக்க அல்லது குத்தப் பயன்படும், முனையில் இரும்புப் பூண் பொருத்தப்பட்ட உருண்டை வடிவ, நீண்ட மரச் சாதனம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது.[1]
  • இவை பழங்காலத்தில் உற்பத்திப் பொருள்களை உணவுப் பண்டமாக மாற்றப் பாறைகளின் சிறிய குழிகளை உரலாகவும் உருண்டையான நீண்ட மரக்கட்டைகளை உலக்கையாகவும் பயன்படுத்தினர்.
  • பிற்காலத்தில் கட்டையின் இரு முனைப்பகுதியிலும் இரும்புப் பூன் மற்றும் வெண்கலப் பூண்களைப் (வளையம்) பூட்டினர். ஒரு முனையில் சமமானதும் மற்றொரு முனையில் சிறிது குழிந்த பூணும் பூட்டப்பட்டன.
  • இதனால் முனைகள் சிதையாமலும், விரிசலடையாமலும் நீண்ட காலம் பயன்பட்டன.
  • ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரியார் அருளிய கந்தபுராணத்தில் முருகனின் பூதபடைத் தலைவனாக சிந்துமேனனை அவுணர் படைத் தலைவனாக அதிகோரன் (அசுரன்) இரும்புலக்கையால் தாக்கிய செய்தி காணப்படுகின்றது.[2] இதில் 'முசலம்' என உலக்கைக் குறிப்பிடப்படுகிறது.[3]
  • மேலும், ”விசிகம்” என்ற சொல்லும் இரும்பு உலக்கையைச் சுட்டுவதாக உள்ளது.

உலக்கை தயாரிப்பு

தொகு
 
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள உலக்கை

உலக்கைகள் தேக்கு, மருதமரம், புளியமரம், கடம்பமரம் போன்ற உறுதியான மரத்துண்டுகளால் செய்யப்பட்டவைகளாக 4 முதல் 5 அடி நீளமுள்ளவைகளாகக் காணப்படுகின்றன. மஞ்சள், மிளகாய் வற்றல் போன்றவற்றை இடிக்கச் ”கழுந்துலக்கை” பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 3 முதல் 4 அடி வரை நீளமுள்ளதாக பூண் பூட்டப்படாத நிலையிலும் உள்ளதாகக் கூறப்படுகின்றது.[4]

பயன்பாடுகள்

தொகு
  • உலக்கை சார்ந்த பயன்பாடுகள் அனைத்தும் உணவு சார்ந்த பொருட்கள் தயாரிக்கவே அதிகபட்சமாக பயன்படுகிறது.
  • அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற நெல் சார்ந்த பயிர் வகைகளை உலக்கை மற்றும் உரலின் உதவியுடன் மாவாக பெற உதவுகின்றது.
  • உலக்கை பழங்காலத்தில் உணவு சார்ந்த பொருட்கள் தானியங்களில் இருந்து பெற பெரும் உதவியாக இருந்தது.

உலக்கையின் மற்ற பயன்பாடுகள்

  • உலக்கை தமிழ்ர் கலாச்சாரத்தில் மிகவும் பங்காற்றுகிறது.
  • குறிப்பாக பழங்காலங்களில் உணவு சார்ந்த பொருட்கள் தயாரிக்க பெரும் பங்கு வகிக்கித்திருந்தது.
  • தமிழ் கலாச்சாரத்தில் கிராமங்களில் உலக்கையை கஸ்தூரி என்ற பெண் கடவுளாக வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
  • உலக்கையால் மனிதர்களுக்கு உடம்பில் ஏற்படும் இடை சுளுக்கு (இடுப்பு சுளுக்கு) மற்ற உடல் பாகங்களில் ஏற்படும் சுளுக்கால் ஏற்படும் வலி உள்ள பகுதியில் விளக்கெண்ணெய்யால் நீவி விட்டு அதில் உலக்கையை வைத்தால். உலக்கை நேர் நிலையாக நிற்கும் அவ்விடத்தில் சுளுக்கு நீங்கும் வரை நின்ற உலக்கை விழுந்தவுடன் சுளுக்கு வலி நீங்கிவிடும்.

இலக்கியங்களில் உலக்கை

தொகு

சிலப்பதிகாரம்

தொகு

உலக்கையைக் கொண்டு தானியங்களைக் குற்றும் பொழுது பெண்கள் பாடும் பாட்டு வள்ளைப்பாட்டு என அழைக்கப்படுகிறது. உலக்கையைக் கொண்டு தானியங்களைக் குற்றும் பொழுது பெண்கள் தலைவனைப் புகழ்ந்து பாடுவதாகச் சிலப்பதிகார வாழ்த்துக் காதை கூறுகிறது. இது ”வள்ளைப்பாட்டு” எனக் குறிப்பிடப்படுகின்றது. வள்ளை என்றால் உலக்கை எனவே ”உரற்பாட்டு, உலக்கைப்பாட்டு, அவலிடி, அம்மானை வள்ளை என்ற பெயர்களாலும் இப்பாடல் (குறுந்தொகை மூலமும் உரையும் [5] அழைக்கப்பட்டது.

புறநானூறு- வள்ளைக்கூத்து

தொகு

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் நாட்டுப்புற மக்கள் நெற்கதிர் வரிந்த கூரை வீடுகளின் முன்பு கரும்பை வாசலில் தோரணமாகக் கட்டியுள்ளனர். தானியம் குவியலாகக் கிடக்கிறது. பெண்கள் உலக்கையைக் கழுவி அணி செய்து வைத்திருக்கிறார்கள். அது நெல் குற்றுவதற்காக அல்லாமல் வள்ளைக் கூத்தோடு களத்தின் நடுவே கிடத்துவதற்காக வைத்திருக்கிறார்கள். இவ்விழாவில் வள்ளைக் கூத்து, நெல் குற்றுவது போல ஆடும் கூத்து ஆடப்படுகின்றது. என புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது.[6] உழவுத் தொழிலின் தொடக்கக்காலத்தில் மகளிர் அத்தொழிலில் ஈடுபட்டிருந்தமயும் அத்தொழிலில் மகளிரின் பங்கை வலியுறுத்துவதாகவும் இக்கூத்து ஆடப்பட்டது.[7]

குறுந்தொகை

தொகு

குறுந்தொகையின் மருதத் திணைப் பாடல் ஒன்றில் உலக்கையால் தானியம் குற்றும் பொழுது வள்ளைப் பாடல் பாடப்பட்டது என்பதனை,

”பா அடி உரல பகுவாய் வள்ளை

ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப…

மெய் இயல் குறுமகள் பாடினாள் குறினே”

என்று குறிப்பிடுகின்றது. இதில் தலைவியானவள் பரந்த அடிப்பாகத்தையுடைய உரலின் வட்டவடிவமான வாயினிடத்தே உலக்கையால் தானியம் குற்றும்போது வள்ளைப் பாட்டைப் பாடிக் குற்றினாள் என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டுப்புற இலக்கியங்களில்

தொகு

நாட்டுப்புறப்பாடலில் தாலாட்டு[8], சிறுவர்பாடல்கள்,[9] காதல்பாடல்கள்,[10], ஒப்பாரிப் பாடல்கள்,”[11] சடங்குப்பாடல்கள் போன்றவற்றிலும் உலக்கையைப் பற்றிய பாடல் வரிகளாக இடம்பெறுகின்றன. இதன் வாயிலாக நெல் குற்றுதல், அரிசி இடித்தல் போன்ற செயல்கள் மக்களின் வழக்காறுகளில் பாடல்களாக இடம் பெற்றுள்ளன என்பதை அறியலாம்.

மேற்கோளும் குறிப்புகளும்

தொகு
  1. கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. 2000. pp. பக்.151.
  2. "இடுக்கண் எய்தி இவன் ஆவியை இன்ன முடிப்பன் என்று முசலம் கொடு மொய்ம்பில் புடைத்தனன்"- கந்தபுராணம்
  3. ஸ்ரீகச்சியப்ப சிவாசாரியார் அருளிய கந்த புராணம் – மூலமும் தெளிவுரையும், 6-ம் பகுதி,. 2000. pp. பக்-342.
  4. "செயல்பாட்டியல் நோக்கில் உலக்கை". பா. நேருஜி. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. மார்ச் 13, 2011. Archived from the original on 2013-01-21. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 28, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. மு. சண்முகம் பிள்ளை (1994). குறுந்தொகை மூலமும் உரையும். pp. ப.க.86.
  6. வலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த வாய் கரும்பின் கொடிக் கூரை சாறு கொண்ட களம் போல வேறு வேறு பொலிவு தோன்ற குற்றானா உலக்கையால் கலிச்சுமை வியாலங்கண்”
  7. தமிழர் வரலாறும் பண்பாடும். நா. வானமாமலை. 2001. pp. பக்.15.
  8. பள்ளிதனைக் கூட்டி பதமாக அவல் இடித்து இடைச்சிதனைக் கூட்டி இலைபோல அவல் இடித்து
  9. ”மழை வருது மழை வருது நெல்லை வாருங்கோ மூனுபடி அரிசிகுத்தி முறுக்கு சுடுங்கோ
  10. ”வீதியிலே கல் உரலாம் வீசி வீசிக் குத்துராளாம்
  11. ”தங்க அரிசி குத்தி தனிப்பாலம் சுத்தி வந்தேன்”
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக்கை&oldid=3928088" இலிருந்து மீள்விக்கப்பட்டது