கடம்பு

தாவர இனம்
(கடம்பு மரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கடம்பு
Tree in கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.
Close-up of flower
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Gentianales
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
இனம்:
N. cadamba
இருசொற் பெயரீடு
Neolamarckia cadamba
(Roxb.) Bosser
வேறு பெயர்கள் [1]
  • Nauclea cadamba Roxb.
  • Anthocephalus cadamba (Roxb.) Miq.
  • Anthocephalus indicus var. glabrescens H.L.Li
  • Anthocephalus morindifolius Korth.
  • Nauclea megaphylla S.Moore
  • Neonauclea megaphylla (S.Moore) S.Moore
  • Samama cadamba (Roxb.) Kuntze
  • Sarcocephalus cadamba (Roxb.) Kurz
இரண்டு பாதியாக ஒரு முழு கடம்பு

கடம்பு என்பது (Neolamarckia cadamba மற்றும் Anthocephalus indicus, Anthocephalus Cadamba)[1] தென் ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு மாறாப் பசுமையான, வெப்பமண்டலத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.[2] இது அடர்த்தியான கோள வடிவ கொத்துகளான, நறுமணமுள்ள, செம்மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டுள்ளது. பூக்கள் வாசனைத் திரவியங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மரம் ஒரு அலங்கார செடியாகவும், கட்டடத் தேவைகளுக்கான மரம் மற்றும் காகித தயாரிப்பிற்காகவும் வளர்க்கப்படுகிறது.[2][3]

இந்திய மதங்கள் மற்றும் புராணங்களில் கடம்பு பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன.

கடம்ப மரம் முருகனுக்கும், திருமாலுக்கும் உரியது எனச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. கொத்தாக உருண்டு பூக்கும் இதன் மலரின் நிறம் வெள்ளை. நன்னன் என்னும் அரசனின் காவல்மரம் கடம்பு. நீரோட்டமுள்ள கரைகளில் இது செழித்து வளரும். சாமியாடும் வேலன் மட்டும் இதனை அணிந்துகொள்வான். இதன் இலைகளை மாலையாகக் கட்டி முருகனுக்கு அணிவிப்பர். இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, பட்டாம்பூச்சி, மற்றும் வரியன் பூச்சிகளும் உணவாக உட்கொள்ளுகின்றன.[4]

விளக்கம்

தொகு

நன்கு முதிர்ந்து வளர்ந்த கடம்ப மரம் 45 மீற்றர் (148 அடி) உயரம் வரை இருக்கும்.[5] இந்த மரம் முதல் 6-8 வருடங்கள் வரை மிக விரைவாக வளர்ந்து, மிகப் பெரிய மரமாகிப் பரந்த கிளைகளையும், அகலமான இலைகளையும் கொண்டிருக்கும். அடிமர தண்டின் விட்டம் 100-160 செ.மீ வரை இருக்கும், ஆனால் அனேகமாக இதைவிட குறைவாகத்தான் இருக்கும். இந்த மரத்தின் இலைகள் 13-32 செ.மீ (5.1 - 12.6 அங்குலம்) வரை நீளமானது.[5] மரத்தின் 4-5 ஆண்டு கால வளர்ச்சிக் காலத்திலேயே கடம்ப மரம் பூக்க ஆரம்பித்துவிடும்.

இந்த மரத்தின் பூக்கள் இனிமையான நறுமணம் கொண்ட, சிவப்பிலிருந்து தோடம்பழ நிறம் வரையுள்ள, கோள வடிவமான (அண்ணளவாக 5.5 செ.மீ (2.2 அங்குலம்) விட்டமுடைய தலைகளைக் கொண்டவையாகும். கடம்ப மரத்தின் பழங்கள் சிறிய இறுக்கமான சதைப்பிடிப்பான மஞ்சள் கலந்த தோடம்பழ நிறமுடைய பெட்டி வடிவான கூட்டுப்பழங்களாகும். பழங்கள் ஏறக்கூறைய 8000 விதைகளைக் கொண்டிருக்கும், பழங்கள் சிதறி வெடிக்கும் போது விதைகள் வெளியேறி பின்பு அவை காற்றாலும்,மழையாலும் பரவப்படும்.[6][7]

சங்கப்பாடல் குறிப்புகள்

தொகு
  • கடம்பு புலவர் போற்றும் மரம்.[8]
  • நீர்வளப் பகுதியில் கடம்பு செழித்து வளரும்.[9]
  • அருவி ஆடிய மகளிரில் ஒருத்தி கடம்பமரத்தைப் பற்றிக்கொள்ள மற்றவர்கள் அவளது கையைப் பற்றிக்கொண்டு நீராடினர்.[10]
  • கடம்பின் மலர்க்கொத்து உருண்டு இருக்கும் [11]
  • கடம்பு காடைப் பறவை போல் பூக்கும்.[12]
  • தெய்வம் முருகப்பெருமானைக் கடம்பமர் நெடுவேள் என்பர்.[13][14][15][16][17],[18]
  • முருகன் திருவிழாவின்போது கடம்ப மரத்தில் கொடி கட்டுவர். கடம்பு கொடி யாத்து, கண்ணி சூடி, (முருகயர்வர்).[19]
  • முருகனுக்குக் கடம்பின் இலைகளால் தொடுத்த மாலை போடுவர். கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல் - புறம் 23-3
  • கடம்பன் என்னும் சொல் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நால்வகை முதுகுடிகளில் ஒன்று.[20]
  • வெறியாட்டு நிகழ்த்தும் வேலன் கடப்பமலர் அணிந்திருப்பான்.[21]
  • குறமகள் முருகாற்றுப்படுக்கும் இடங்களில் ஒன்று [22]
  • இமயவரம்பன் நெடுஞ்சேரலாரன் பகைவனின் கடம்ப-மரத்தை வெட்டி முரசு செய்துகொண்டான்.[23]
  • களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் கடம்பின் பெருவாயில் நன்னனை அதித்தான்.[24]
  • ஆலமரம், கடம்பு, ஆற்றுநடுத் தீவு (திருவரங்கம்), (இருங்)குன்றம் ஆகிய இடங்களில் திருமால் குடிகொண்டுள்ளான்.[25]

கடம்ப மரமும், மதுரையும்

தொகு
 
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் நுழைவாயிலின் முன்னே கடம்பமரம்

முற்காலத்தில் மதுரை கடம்ப மரங்களின் சோலையாக இருந்தது என்றும், இந்த மரங்களை அழித்துத் தான் மதுரை நகரம் தோன்றியதாகவும் இந்த காரணத்தாலேயே மதுரைக்கு கடம்பவனம் என்ற பெயர் உண்டு என்றும் தலபுராண அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[26] இந்த கடம்ப மரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலவிருட்சமாகும். மீனாட்சி அம்மனுக்கு கடம்பவனவாசினி மற்றும் கடம்பவனபூவை என்ற திருபெயர்கள் உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிக்குள் சொக்கநாதர் சன்னதி அருகில் பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த கடம்ப மரம வெள்ளி தகடு போர்த்திப் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மருதத்துறை என்பதே மருவி மதுரை ஆயிற்று.

இவற்றையும் காண்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. 1.0 1.1 "Neolamarckia cadamba". World Checklist of Selected Plant Families. Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 2013-09-01.
  2. 2.0 2.1 USDA GRIN Taxonomy
  3. "Neolamarckia cadamba". Useful Tropical Plants. Useful Tropical Plants Database 2014 by Ken Fern. பார்க்கப்பட்ட நாள் 25 February 2021.
  4. விரியும் கிளைகள் 19: உண்மையான கடம்ப மரம்? தி இந்து தமிழ் 27 பிப்ரவரி 2016
  5. 5.0 5.1 Krisnawati, Haruni; Kallio, Maarit; Kanninen, Markku (2011). Anthocephalus cadamba Miq.: ecology, silviculture and productivity. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786028693387. இணையக் கணினி நூலக மைய எண் 939914708.
  6. http://www.agricultureinformation.com/forums/questions-answers/11926-anthocephalus-kadamba.html.-[தொடர்பிழந்த இணைப்பு] Horticulture/Suryanarmada, Agriculture Arbitration Consultant, Chennai, India.
  7. "- The Environmental Information System(ENVIS), Ministry of Environment and Forests - Centre of Mining environment". Archived from the original on 2009-10-22. பார்க்கப்பட்ட நாள் 2009-10-25.
  8. புலவரை அறியாத புகழ் பூத்த கடம்பு (அமர்ந்தவன் முருகவேள்) பரிபாடல் 19-2,
  9. நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த துறுநீர்க் கடம்பு - சிறுபாணாற்றுப்படை 69
  10. குறிஞ்சிப்பாட்டு 176
  11. உருள் இணர்க் கடம்பு - பரிபாடல் 21-11,50
  12. வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன … குறும்பூழ் - பெரும்பாணாற்றுப்படை 203
  13. பெரும்பாணாற்றுப்படை 75
  14. கடம்பின் சீர்மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ - மதுரைக்காஞ்சி 614
  15. கார் கடப்பந்தாரன் எங் கடவுள் – சிலப்பதிகாரம் 24 பாட்டிமடை வெறிவிலக்கல்
  16. மணிமேகலையைக் காமுற்ற உதயகுமரன் ‘காரமர் கடம்பன் அல்லன்’ என விளக்கப்படுகிறான். மணிமேகலை 4-49
  17. உருவிணர்க் கடம்பின் ஒலி தாரோய் பரிபாடல் 5-81
  18. அகநானூறு 138-11,
  19. அகநானூறு 382-3,
  20. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை - புறநானூறு 335
  21. கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட - நற்றிணை 34
  22. புதுப்பூங் கடம்ப மரத்தடி திருமுருகாற்றுப்படை -225
  23. பதிற்றுப்பத்து 11-12, பதிற்றுப்பத்து 12-3, பதிற்றுப்பத்து 17-5, பதிற்றுப்பத்து 20-4, பதிற்றுப்பத்து 88-6, அகநானூறு 127-4, அகநானூறு 347-4,
  24. பதிற்றுப்பத்து பதிகம் 4-7,
  25. பரிபாடல் 4-67,
  26. http://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-music/madurai-through-a-fish-eyed-lens/article4238705.ece

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடம்பு&oldid=3854573" இலிருந்து மீள்விக்கப்பட்டது