எசுபார்டியேட்

எசுபார்த்தன் போர்க் குடியினர்

எசுபார்டியேட் ( Spartiate) என்பவர்கள் எசுபார்த்தாவின் முழுக் குடியுரிமை பெற்ற ஒரு உயர்குடி ஆண்மகனாவார்.

எசுபார்த்தாவின் முழுமையான குடிமக்களான எசுபார்டியேட்டுகள் வேலை செய்வதிலிருந்து சட்டத்தால் தடுக்கப்பட்டனர், மேலும் எசுபார்த்தன் சமூகத்தின் பிற சமூக வகுப்புகளால் ஆதரிக்கப்படனர். சிறுவயதிலிருந்தே, எசுபார்டியேட்டு ஆண் பிள்ளைகள் போருக்காகப் பயிற்றுவிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் அச்சமற்ற போர்மறவர்களாக உருவாக்கும் நோக்கில் கடுமையான சவால்களைச் சந்தித்தனர். போரில், இவர்கள் கிரேக்கத்தில் சிறந்த வீரர்கள் என்ற நற்பெயரைக் கொண்டிருந்தனர். இதனால் எசுபார்த்தாவின் ஹாப்லைட் படைகள் வலிமையானதாக இருந்ததால் பாரம்பரிய காலத்தின் பெரும்பகுதி முழுவதும் கிரேக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் அரசாக எசுபார்த்தா மாற முடிந்தது. எசுபார்த்தாவின் ஆதிக்கத்தின் உச்சக்கட்ட காலத்தில் 8000 எசுபார்டியேட்டுகளை மட்டுமே திரட்ட முடிந்தாலும், மற்ற நகர அரசுகள் எசுபார்த்தாவைத் தாக்கத் தயங்கின. அதன் வீரர்களின் புகழ் அப்படிப் பட்டதாக இருந்தது.[1]


எசுபார்த்தன் குமுகாய அமைப்பு தொகு

 
எசுபார்த்தன் குமுகாயத்தின் அமைப்பு

பாரம்பரிய எசுபார்த்தன் குமுகாயம் பல சாதிகளாக கடுமையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவினருக்கும் கடமைகளும் பொறுப்புகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. குமுகாயத்தில் எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையினராக இருந்தாலும், அதிக அதிகாரமும் சுதந்திரமும் கொண்டவர்களாக எசுபார்டியட் உயரடுக்கு பிரிவினர் இரு்தனர். எசுபார்டியேட்டுகளுக்கு உடல் உழைப்பு பணிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது மேலும் எசுபார்த்தன் அரசாங்கத்தை கட்டுப்படுத்துபவர்களாகவும் இருந்தனர். எசுபார்டேட்ஸ் ஆடவர் எப்போதும் இராணுவ மோதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எசுபார்டியேட்டுகளுக்கு அடுத்த நிலையில் பெரியீசி, அதாவது புற நகரங்களில் வசிப்பவர்கள் ஆவர். எசுபார்டியேட்டுகள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டதால் பெரியீசி வகுப்பினர்தான் நகரத்தின் பெரும்பாலான வணிகம் மற்றும் தொழிலை மேற்கொண்டனர். மிகத் தாழ்ந்த நிலையில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களான எலட்கள் இருந்தனர். அவர்கள் வேளாண் பணிகளை செய்பவர்களாக இருந்தனர். கிமு 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் அதற்குப் பிறகும், ஒரு புதிய வகுப்பினரான, நியோடாமோடிஸ், அதாவது புதிய டாமோஸ் என்ற பிரிவினர் உருவாயினர். இவர்கள் அடிமைத்தளையில் இருந்து விடுவிக்கப்பட்ட எலட்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஐப்போமியோன்கள் என்ற தாழ்ந்த பிரிவினர் இருந்தனர். இவர்கள் அநேகமாக எசுபார்டியேட்டுகளாக இருந்து ஏதொ ஒரு காரணத்தினால் சமூக அந்தஸ்தை இழந்தவர்களாவர்.

தோற்றம் தொகு

 
லைகர்கசு

பாரம்பரிய குறிப்புகளின்படி, எசுபார்த்தன் அரசியலமைப்பானது அறிஞரான லைகர்கசால் உருவாக்கப்படதாகும். அவர் எசுபார்த்தன் அரசியலமைப்பை தொன்மையான காலத்தில் எழுதியதாகக் கூறப்படுகிறது, பெரும்பாலும் கிமு 770 களில் இருக்கலாம்.

லைகர்கஸ் என்பவர் உண்மையில் வரலாற்றில் வாழ்ந்த நபரா என்பதை உறுதிபடுத்த முடியவில்லை. எவ்வாறாயினும், தொன்மையான காலத்துக்கு பிந்தைய காலத்தில், எசுபார்த்தன் சமூக அமைப்பானது முடியாட்சி அமைப்பிலிருந்து உயரடுக்கு போர்மறவர் வர்க்க பிரபுத்துவத்திற்கு மாற்றப்பட்டது என்பது தெளிவாகிறது. அந்த மாற்றமானது, பிரபுக்கள் ஆதிக்கம் செலுத்திய இருண்ட காலப் போரிலிருந்து, பாரம்பரிய காலத்தின் ஹாப்லைட் போருடன் ஏற்பட்ட மாற்றத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாக இருக்கலாம். அந்த மாற்றத்தின் போது, எசுபார்த்தா அண்டை அரசான மெசேனியாவைக் கைப்பற்றியது. ஒப்பீட்டளவில் பெரிய நிலப்பரப்பு மற்றும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களை கையால்வது போன்றவை ஹெலோடேஜ் அமைப்புக்கான தேவையை உருவாக்கியது மேலும் கிளர்ச்சி செய்ய வாய்ப்புள்ள மெசேனியர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஒரு பெரிய இராணுவப் படைக்கான தேவை இருந்தது. எசுபார்டியேட்கள் நிரந்தரமாக ஆயுதம் ஏந்திய தலைமை வகுப்பினராக மாறினர். இவர்கள் எலட்களின் உழைப்பில் வாழ்வது மற்றும் தொடர்ச்சியான போர்களின் மூலம் கிளர்ச்சியைத் தடுப்பது என்று இருந்தனர்.

எசுபார்டியேட் வாழ்க்கை முறை தொகு

கிமு 6 மற்றும் கிமு 5 ஆம் நூற்றாண்டுகளில், ஸ்பார்டன் அமைப்பு அதன் உச்ச நிலையில் இருந்தது. கிமு 555 இல், எசுபார்த்தா டெகியாவை தோற்கடித்து, அந்த அரசை இதன் கூட்டாளியாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிமு 544 இல், எசுபார்த்தா ஆர்கோசை தோற்கடித்து, பெலொப்பொனேசியாவில் முதன்மையான ஆற்றலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக, எசுபார்த்தா கிரேக்கத்தின் மேலாதிக்க நில சக்தியாக மாறியது, எசுபார்டியேட் ஹாப்லைட்டுகள் இதன் இராணுவத்தின் மையமாக இருந்தனர்.

நகரத்தின் சமூக அமைப்பைப் பாதுகாக்கும் விதமாக, எலட்களின் எந்தவொரு புரட்சியையும் (பாரம்பரிய காலத்தில் பல முறை நிகழ்ந்தது) எதிர்கொள்ள ஒரு படை தயாராக இருப்பது அவசியமாக இருந்தது. தங்கள் படை பலத்தை உறுதிபடுத்த, எசுபார்டியேட் இளைஞர்கள் ஏழு வயது முதல் முழுக் குடியுரிமை பெறும் முப்பது வயது வரை, படைத்துறைப் பயிற்சியில் ( அகோஜ்) சேர்ந்து பயிற்சி பெற்றனர். அந்த வயதிலிருந்து, அவர்கள் போரிட முடியாத அளவுக்கு வயதாகும் வரை, அவர்கள் தங்கள் படை வீடுகளில் வசித்து வந்தனர். அவர்கள் வெளியே பதுங்கியிருந்தால் மட்டுமே (அவர்களின் மனைவிமார் போன்றோரை) தங்கள் குடும்பங்களைச் சென்று பார்ப்பார்கள். வலுவான, ஆரோக்கியமான பெற்றோரே வலிமையான, ஆரோக்கியமான குழந்தைகளை பெறுவார்கள் என்று எசுபார்த்தன்கள் நம்பியதால், எசுபார்டியேட் பெண்களும், தடகள தகுதியுடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எசுபார்டியேட்டுகள் போர் வீரத்தை இலட்சியமாக கடைபிடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது டைர்டேயசின் கவிதைகளால் அறியப்படுகிறது. அவர் போரில் வீழ்ந்தவர்களை புகழ்ந்து பாடியும், புறமுதுகிட்டு ஓடியவர்களை ஏளனம் செய்துள்ளார்.

எசுபார்த்தாவின் தனி அம்சமாக அதன் பொது உணவுச் சலை இருந்தது. முப்பது வயதுக்கு மேல் அறுபது வயதுக்குட்பட்ட எசுபார்டியேட்டுகள் அனைவரும் இதில்தான் உண்ணவேண்டும். ஒவ்வொரு எசுபார்டியேட் ஆடவனுக்கும் நிலமும் அதில் வேலை செய்த ஹெலட்களும் ஒதுக்கப்பட்டனர். போர்த் தொழிலைத் தவிர அவர் எந்த கைத்தொழிலோ அல்லது வணிகமுமோ செய்யாததால் அதுவே அவரகளது வருமானத்திற்கான ஆதாரமாக இருந்தது. அந்த வருமானத்தின் முதன்மைப் பயன்பாடானது, பொது உணவுச் சாலைக்கான தனது பங்கை செலுத்துவதாகும். இந்த நிலுவைத் தொகையைச் செலுத்த முடியாத எந்த ஒரு எசுபார்டியேட்டும் அவரது குமுகாயத்திலிருந்து தரமிறக்கப்பட்டுவார்.

அரசியல் ரீதியாக, எசுபார்டியேட் ஆடவர் இராணுவ சட்டசபையை உருவாக்கினர். இது அரசர்களுக்கு அடுத்து எசுபார்த்தாவின் மிகவும் சக்திவாய்ந்த நீதிபதிகளான எபோர்களைத் தேர்ந்தெடுக்கும் அமைப்பாகும். மேலும் எசுபார்டியேட்டுகள் கிரிப்டியாவின் மூல ஆதாரமாக இருந்தனர், இது ஒரு வகையான இரகசிய காவல்படை, இது படுகொலை, கடத்தல் போன்ற நடவடிக்கைகளில், ஈடுபட்டு எலட்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவதை தடுக்க முயன்றது.

எசுபார்டியேட்டுகளின் சரிவு தொகு

கிமு 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 4 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், எசுபார்ட்டியேட் வகுப்பினர் பல காரணங்களினா எசுபார்த்தன் இராணுவ வலிமையுடன் சேர்த்து படிப்படியாக எண்ணிக்கையில் சுருங்கினர். முதலாவதாக, 5 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து எசுபார்த்ததா அடிக்கடி போர்களில் ஈடுபட்டதால் எசுபார்ட்டியேட் வகுப்பு சிதையத் துவங்கியது. மேலும் எசுபார்டியேட்டுகள் முப்பது வயதுக்குமேல்தான் தாமதமாகத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டி இருந்ததால், பிறப்பு விகிதம் குறைவாக இருந்தது. இதனால் இந்த வகுப்பில் இழப்புகளை ஈடுகட்டுவது கடினமாக இருந்தது. போரில் புறமுதுகிடுதல் மற்றும் தாங்கள் உறுப்பினராக உள்ள குமுகாய உணவகங்களுக்கு தங்கள் பங்கை செலுத்த இயலாமை போன்ற பல காரணங்களுக்காக எசுபார்டியேட் அந்தஸ்தில் இருந்து தரமிறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அந்த சிக்கலை மோசமாக்கின. ஒரு கட்டத்தில் எசுபார்த்தாவில் வணிக நடவடிக்கைகள் பெருகத் தொடங்கியதால், சில எசுபார்டியேட்டுகள் தங்கள் வருமானத்துக்கு ஆதாரமாக இருந்த நிலத்தை விற்றுவிட்டனர். மேலும் மீண்டும் எசுபார்ட்டியேட் அந்தஸ்துக்கு மீண்டும் உயர்வதற்கான தெளிவான விதிகள் எதுவும் அரசியலமைப்பில் சேர்க்கப்படவில்லை என்பதால், எசுபார்ட்டியேட்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது.

கிமு 4 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஸ்பார்ட்டியேட்டுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வந்தது. இருப்பினும் எசுபார்த்தா கிரேக்கத்தின் பெரும்பகுதியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்தது. இறுதியாக, கிமு 371 இல் லுக்ட்ராவில், தீப்ஸ் படைகள் எசுபார்த்தன் படையை தீர்க்கமாக தோற்கடித்தது. இப்போரில் 700 பேர் கொண்ட படையில் இருந்த 400 எசுபார்டியேட்கள் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வு எசுபார்த்தன் படைபலத்தின் முதுகெலும்பை உடைந்தது. கிமு 370 இல், மெசேனியா பகுதி தீப்ஸ் இராணுவத்தால் எசுபார்த்தன் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது, எலட்களுக்கு விடுதலை அளித்தது போன்றவை எசுபார்த்தன் சமூக அமைப்பின் அடிப்படையை அழித்தது. அதன்பிறகு எசுபார்த்தன் அரசு அதன் முந்தைய சக்தியை பெற முடியாமல் போனது. மேலும் கிமு 3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எசுபார்த்தன் இராணுவம் கிரேக்கத்தில் உள்ள மற்ற படைகளை விட குறிப்பாக எந்த விதத்திலும் உயர்ந்த நிலையை அடையவில்லை.

குறிப்புகள் தொகு

  1. Harley, T. Rutherford. The Public School of Sparta, Greece & Rome, Vol. 3, No. 9 (May 1934) pp. 129-139.). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுபார்டியேட்&oldid=3504488" இலிருந்து மீள்விக்கப்பட்டது