எசுப்பானிய அமெரிக்கப் போர்

(எசுப்பானிய-அமெரிக்கப் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எசுப்பானிய அமெரிக்கப் போர் (Spanish-American War) 1898 இல் ஸ்பானியப் பேரரசிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் இடம்பெற்றது. ஸ்பானியப் பேரரசின் ஒரு அங்கமாகிய கியூபாவின் விடுதலைப் போராட்டத்தை, ஸ்பெயின் இரும்புக் கரம் கொண்டு நசுக்கியதைக் காரணம் காட்டி, அமெரிக்கா ஸ்பெயின் மீது போர் தொடுத்தது. பத்து வாரங்கள் பசிபிக் பெருங்கடல் மற்றும் கரிபியன் தீவுகள் பகுதிகளில் நடைபெற்ற இப்போரில் அமெரிக்கா எளிதாக வென்றது. கியூபா, புவேர்ட்டோ ரிக்கோ, குவாம், பிலிப்பைன்ஸ் ஆகிய பிரதேசங்கள் ஸ்பெயினிடமிருந்து அமெரிக்க கட்டுப்பாட்டில் வந்தன.

எசுப்பானிய அமெரிக்கப் போர்
பிலிப்பைன் புரட்சி மற்றும் கியூப விடுதலைப்போரின் பகுதி

சான் யுவான் குன்றின் மீது ”ரஃப் ரைடர்ஸ்” படைப்பிரிவின் தாக்குதல் (ஓவியர்: பிரடரிக் ரெமிங்டன்)
நாள் ஏப்ரல் 25 – ஆகஸ்ட் 12, 1898
இடம் கியூபா, and புவேர்ட்டோ ரிக்கோ (கரிபியன்)
பிலிப்பைன்ஸ், and குவாம் (பசிபிக் பெருங்கடல்)
அமெரிக்க வெற்றி
பாரிஸ் ஒப்பந்தம் (1898)
பிலிப்பைன்-அமெரிக்கப் போர்
நிலப்பகுதி
மாற்றங்கள்
கியூபா ஸ்பெயின் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டது, பிலிப்பைன்ஸ், குவாம், புவேர்ட்டோ ரிக்கோ ஆகிய பிரதேசங்களை 20 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அமெரிக்காவிடம் ஸ்பெயின் விற்று விட்டது
பிரிவினர்
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா
கூபா கியூபப் போராளிகள்
புவேர்ட்டோ ரிக்கோ புவேர்ட்டோ ரிக்கோ போராளிகள்
கடிபுனான் (பிலிப்பைன்ஸ்) போராளிகள் [1][2][3]
எசுப்பானியா எசுப்பானியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா வில்லியம் மெக்கின்லி
ஐக்கிய அமெரிக்கா நெல்சன் மைல்ஸ்
ஐக்கிய அமெரிக்கா வில்லியம் ஷாஃப்டர்
ஐக்கிய அமெரிக்கா ஜார்ஜ் டூவி
ஐக்கிய அமெரிக்கா வில்லியம் டி. சாம்சன்
கூபா மாக்சிமோ கோமேஸ்
எமீலியோ ஆகினால்டோ
அபொலினாரியோ மாபினி
எசுப்பானியா ப்ராக்சிடேஸ் மாடியோ சகாஸ்டா
எசுப்பானியா பாட்ரீசியோ மொன்டோஜோ
எசுப்பானியா பாஸ்குவேல் செர்வேரா
எசுப்பானியா ஆர்சீனியோ லினாரஸ் யி போம்போ
எசுப்பானியாமனுவேல் மாசியாஸ் யி கசாடோ
எசுப்பானியாரமோன் ப்ளான்கோ யி எரேனாஸ்
பலம்
கியூபக் குடியரசு:
30,000 துணைப்படையினர்[4]:19

ஐக்கிய அமெரிக்கா:

300,000 போர் வீரர்களும், தன்னார்வலர்களும்[4]:22
எசுப்பானியப் பேரரசு:

278,447 படையினரும் துணைப்படையினரும்[4]:20 (கியூபா),
10,005 படையினரும் துணைப்படையினரும்[4]:20 (புவேர்ட்டோ ரிக்கோ),
51,331 படையினரும் துணைப்படையினரும்[4]:20 (பிலிப்பைன்ஸ்)

இழப்புகள்
கியூபக் குடியரசு:
10,665 (மாண்டவர்)[4]:20

அமெரிக்கத் தரைப்படை:

345 (மாண்டவர்),
1,577 (காயப்பட்டவர்),
2,565 (நோய்வாய்ப்பட்டவர்)[4]:67

அமெரிக்கக் கப்பல்படை:

16 (மாண்டவர்),
68 (காயப்பட்டவர்)[4]:67
எசுப்பானிய கப்பல்படை:
560 (மாண்டவர்),
300–400 (காயப்பட்டவர்)[4]:67

எசுப்பானிய தரைப்படை:

3,000 (மாண்டவர்/காயப்பட்டவர்),
6,700 (சிறைபிடிக்கப் பட்டவர்),[5](பிலிப்பைன்ஸ்)
13,000 (நோய்வாய்ப்பட்டவர்)[4] (கியூபா)

பின்புலம்

தொகு

பத்தொன்பதாம் நூற்றாண்டில், அமெரிக்க ஐக்கிய நாடுகள், வட அமெரிக்க கண்டத்தில் பலம் பொருந்திய சக்தியாக உருக்கொண்டது. ஐரோப்பிய நாடுகளைப் போல தாங்களும் காலனிகளைக் கைப்பற்றி, தனிப் பேரரசை உருவாக்க அமெரிக்கர்கள் விரும்பினர். அக்காலத்தில் அமெரிக்க கண்டத்தில் ஸ்பானிஷ் பேரரசின் ஆதிக்கம் மிகுந்திருந்ததால், புதிய சக்தியான அமெரிக்காவிற்கும், பழைய பேரரசான ஸ்பெய்னுக்கும் இடையே உரசல்கள் உண்டாகின. பல நூற்றாண்டுகளாக அமெரிக்க கண்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஸ்பானிஷ் பேரரசு, வெளிநாட்டுப் போர்களாலும், உள்நாட்டு பூசல்களாலும் மெல்ல மெல்ல வலுவிழந்து வந்தது.

கரிபியன் கடற்பகுதியில் உள்ள கியூபா தீவு ஸ்பானிஷ் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. அடிக்கடி அங்கு விடுதலை வேண்டி கலகங்கள் வெடித்த வண்ணம் இருந்தன. ஸ்பெயின் அரசாங்கம் அக்கலகங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வந்தது. 1895 இல் ஹோசே மார்ட்டி என்பவரின் தலைமையில், புதிய கியூப விடுதலைப் போர் மூண்டது. இக்கலகத்தை ஒடுக்க, ஸ்பானிஷ் அரசு கையாண்ட கொடூர அடக்குமுறைகள் அண்டை நாடான அமெரிக்காவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. பொது மக்களின் கோபத்தாலும், வர்த்தக நிர்பந்தங்களாலும் உந்தப்பட்ட அமெரிக்க அரசாங்கம் அடக்கு முறைகளை உடனே நிறுத்தாவிட்டால், க்யூபாவை சுதந்திர நாடாக அங்கீகரித்து, ஹோசே மார்ட்டியின் வீரர்களுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப் போவதாக ஸ்பெயின் அரசாங்கத்தை மிரட்டியது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, கியூபாவின் தலைநகர் ஹவானாவின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல் மெய்ன், மர்மமான முறையில் தகர்க்கப்பட்டு மூழ்கியது. அமெரிக்கச் செய்தி ஊடகங்கள், இச்சம்பவத்திற்கு ஸ்பெயினே காரணம் என்று குற்றஞ்சாட்டின. அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து ஏப்ரல் 1898 இல் இரு நாடுகளும் போர் தொடுத்தன.

போர்

தொகு

சுமார் பத்து வாரங்கள் பசிபிக் பெருங்கடல் பகுதியிலும், கரிபியன் கடல் பகுதியிலும் இப்போர் நடை பெற்றது.

பசிபிக் போர்

தொகு

பசிபிக் பெருங்கடலில் உள்ள பிலிப்பைன்ஸ் தீவுக் கூட்டம் பதினாறாம் நூற்றாண்டு முதல் ஸ்பானிஷ் பேரரசின் ஆட்சியின் கீழிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அங்கு ஸ்பெயினுக்கு எதிராக புரட்சி வெடித்தது. 1896 ஆம் ஆண்டில் தொடங்கிய பிலிப்பைன் புரட்சிக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. மே 1, 1898 இல் கமடோர் டூவி தலைமையிலான அமெரிக்க கடற்படை, மணிலா குடாவில் ஸ்பானிஷ் கடற்படையை தோற்கடித்தது. இரண்டே மாதங்களில் அமெரிக்கப் படையினர் உள்ளூர் புரட்சிப் படையினரின் ஆதரவுடன் பெரும்பாலான பிலிப்பைன் தீவுகளை கைப்பற்றினர். ஆகஸ்ட் 13, 1898 இல் தலைநகர் மணிலாவும் அமெரிக்க படைகளுக்கு வீழ்ந்தது. இதே போல் மத்திய பசிபிக் பகுதியில் உள்ள மற்றொரு தீவான குவாமை அமெரிக்க கடற்படை ஜூன் 20, 1898 இல் ஸ்பெய்னிடமிருந்து கைப்பற்றியது.

 
மணிலா குடாவில் கடற்போர்.

கரிபியன் போர்

தொகு

ஜூன் 20 1898 இல் அமெரிக்காவின் ஐந்தாவது படைப் பிரிவு கியூபா மண்ணில் தரையிறங்கி சான் டியாகோ நகரை நோக்கி முன்னேறத் தொடங்கியது. குவாண்டானமோ, புவேர்ட்டோ ரிக்கோ முதலிய தீவுகளும் அமெரிக்க படைகளின் வசம் வந்ததன. அமெரிக்க தரைப் படையினர் ஸ்பெயின் படைகளின் கடும் எதிர்ப்பை முறியடித்து, பெரும் உயிர்ச் சேதத்துடன் ஜூலை மாதம் சான் டியாகோ நகரை அடைந்து அதை முற்றுகையிட்டனர். ஜெனரல் கார்சியா தலைமையிலான க்யூபா புரட்சிப் படையினர் அவர்களுடன் இணைந்து போரிட்டனர். இம்முற்றுகையால் ஸ்பெய்னின் கரிபியன் கடற்படை பிரிவு, சான் டியாகோ துறைமுகத்தில் சுற்றி வளைக்கப்பட்டது. ஜூலை 3 ஆம் நாள் அட்மிரல் சாம்சன் தலைமையிலான அமெரிக்கக் கடற்படை அப்பிரிவைத் தாக்கி அழித்தது. கடற் படையின் துணையிழந்த ஸ்பெயின் தரைப் படை வலுவிழந்து சரணடையும் நிலைக்குத் தள்ளப்பட்டது. க்யூபா, பிலிப்பைன்ஸ் தோல்விகள், கடற்படையின் இழப்பு இவற்றால் பலமிழந்த ஸ்பானிஷ் பேரரசு, அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியது. ஆகஸ்ட் 12, 1898 இல் இரு நாடுகளும் பாரிஸ் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. போர் முடிவுக்கு வந்தது.

விளைவுகள்

தொகு
 
ஒரு போர்க்கப்பல் அமெரிக்கப் பெண்ணின் புதுத் தொப்பியாக இருப்பது போல் போர் வெற்றியால் அமெரிக்காவிற்கு கிடைத்த பலன்களை சித்தரிக்கிறது பக் பத்திரிக்கை (ஏப்ரல் 6, 1901)

பாரிஸ் ஒப்பந்தத்தின் படி, க்யூபா, பிலிப்பைன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ, குவாம், குவாண்டானமோஆகிய பிரதேசங்கள் ஸ்பெய்னிடமிருந்து அமெரிக்காவிற்கு கை மாறின.[6] இதற்கு இழப்பீடாக அமெரிக்கா இரண்டு கோடி அமெரிக்க டாலர்களை ஸ்பெயினுக்கு வழங்கியது. இக்காலனிகளை பெற்றுக் கொண்டதன் மூலம், அமெரிக்கா உலக அளவில் ஆளுமை கொண்ட சக்தியாக அங்கீகாரம் பெற்றது. 1902 இல் க்யூபாவிற்கு அமெரிக்கா சுதந்திரம் வழங்கியது. ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அவ்வாறு விடுதலை வழங்க மறுத்து விட்டது. இதனால் அமெரிக்க-பிலிப்பைன் போர் மூண்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. The United States was informally allied with Katipunan forces under Emilio Aguinaldo from the time of Aguinaldo's return to Manila on May 19, 1898 until those forces were absorbed into a government proclaimed May 24, 1898, and continued to be informally allied with government forces until the end of the war.
  2. Guevara, Sulpico, ed. (2005), "Philippine Declaration of Independence", The laws of the first Philippine Republic (the laws of Malolos) 1898–1899., Ann Arbor, Michigan: University of Michigan Library (published 1972), பார்க்கப்பட்ட நாள் 2008-03-26. (English translation by Sulpicio Guevara)
  3. Guevara, Sulpico, ed. (2005), "Facsimile of the Proclamation of the Philippine Independence at Kawit, Cavite, June 12, 1898", The laws of the first Philippine Republic (the laws of Malolos) 1898–1899., Ann Arbor, Michigan: University of Michigan Library (published 1972), பார்க்கப்பட்ட நாள் 2008-03-26. (Original handwritten Spanish)
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 Dyal 1996
  5. Trask 1996, ப. 371.
  6. "Military Map, Island of Puerto Rico". World Digital Library. 1898. பார்க்கப்பட்ட நாள் 2013-10-23.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Spanish-American War
என்பதில் ஊடகங்கள் உள்ளன.