எம். கே. கே. நாயர்

இந்திய ஆட்சிப்பணி அலுவலர்

எம். கே. கே. நாயர் (ஆங்கிலம்: M. K. K. Nair) என்று பொதுவாக அடையாளம் காணப்பட்ட மேப்பள்ளி கேசவப் பிள்ளை கிருட்டிணன்குட்டி நாயர் (1920 - 1987) என்பவர் ஒரு இந்திய அரசின் உயர் அதிகாரியாகவும், கலை இரசிகனாகவும் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகவும் இருந்துள்ளார். பிலாய் எஃகு ஆலை அமைப்பதிலும், திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியிலும் அவர் செய்த பணிக்களுக்காகவும், கேரள மாநிலத்தில் நுண்கலைகளை ஊக்குவிப்பதிலும், கதகளி போன்ற கலை நிகழ்ச்சிகளிலும் நாயரின் பங்களிப்புகளுக்காகவும் நன்கு அறியப்படுகிறார்.

சுயசரிதைதொகு

திரு எம். கே. கே. நாயர் 1920 டிசம்பர் 29, இல் தெற்கு இந்திய மாநிலமான கேரளாவின் திருவனந்தபுரத்தில், [1] கேசவப்பிள்ளை மற்றும் ஜானகி அம்மா ஆகியோருக்கு பிறந்தார். [2] 1939 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதல் தரத்துடன் பட்டம் பெற்ற பின்னர், திருவிதாங்கூரின் அரசுப்பணியில் ஒரு பிரிவு கணக்காளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு அப்போதைய திவானாக இருந்த சி.பி.ராமசாமி ஐயரின் கீழ் பணியாற்ற இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர், இவர் 1943 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆயுதத் தொழிற்சாலையில் சேர செகந்திராபாத் நகருக்குச் செல்வதற்கு முன்பு தொலைபேசித் துறையில் [3] ஒரு கணக்காளராகப் பணியாற்றினார். பிரிட்டிஷ் இராணுவத்தில் முதல் நான்கு அரசிதழ் அதிகாரிகளில் ஒருவராகவும், திட்டமிடல் அதிகாரியாக பணியாற்றினார். [4] 1949 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் கலந்துகொள்வதற்காக அவர் வேலையை விட்டு விலகும் வரை 1947 ஆம் ஆண்டு வரை அவர் ஆயுதத் தொழிற்சாலையில் பணியாற்றினார். இது அவரை மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், சர்தார் வல்லபாய் படேலின் நெருங்கிய நணபருமான வி. பி. மேனனுடன் தொடர்பு கொள்ள வைத்தது. [5]

1959இல் பிலாய் எஃகு ஆலையை இயக்குவது தாமதமாகி வந்தபோது, அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, அந்த நேரத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த தி. த. கிருஷ்ணமாச்சாரியின் ஆலோசனையின் பேரில், ஆலையின் இயக்குநராக நாயரை நியமித்தார். [4] பின்னர், திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு, அவர் தனது சொந்த மாநிலமான கேரளாவுக்குத் திரும்பினார். அங்கு இவர் 1971 ஆம் ஆண்டில் இந்தியத் திட்டக்குழுவின் இணைச் செயலாளராக நியமிக்கப்படும் வரை பணிபுரிந்து வந்தார்.

எம். கே. கே. நாயர் 1987 செப்டம்பர் 27, அன்று, தனது 66 வயதில், எர்ணாகுளத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். [3] அவரது மனைவி இவர்களது ஒரே மகன் கோபிநாத் கிருஷ்ணனுடன் வசித்து வருகிறார். [6]

ஆளுமை மற்றும் கௌரவங்கள்தொகு

கேரளாவிலுள்ள, திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தை முக்கிய தொழில்துறை பிரிவுகளில் ஒன்றாக கொண்டுவர அதன் வளர்ச்சியை நாயர் மேற்பார்வையிட்டார். இவரது ஆட்சிக் காலத்தில்தான் ஒரு புதிய அம்மோனியம் சல்பேட் ஆலை, திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவன பொறியியல் மற்றும் வடிவமைப்பு அமைப்பு (FEDO) மற்றும் திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவன பொறியியல் பணிகள் (FEW) ஆகியவை அமைக்கப்பட்டன. மேலும் அம்பலமேடுவில் மற்றொரு உற்பத்திப் பிரிவை நிறுவுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன. [7] அவர் திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தின் சமூகத்தை சொந்த பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை தன்னிறைவு பெற்றதாக உருவாக்கினார். [8] கதகளி கலைஞர்களான கலாமண்டலம் ஹைதரலி, கலாமண்டலம் சங்கரன் எம்ப்ராந்திரி, கலாமண்டலம் கேசவன் மற்றும் கலாமண்டலம் நீலகண்டன் நம்பீசன் ஆகியோருக்கு அவர் உதவி செய்தததன் மூலம் அறியப்படுகிறார். இவர்களில் ஹைதரலி திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தின் இன் கலாச்சார பிரிவில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

நாயர் தனது சுயசரிதையான, ஆரோடும்ம் பரிபவாமில்லாதே (வித் மாலிஸ் டுவார்ட்ஸ் நோன் : தி க்ரோனிகல் ஆஃப் எ எரா), கலாகௌமுதியில் வாராந்திர கட்டுரைத் தொடராக எழுதினார். அவரது நிர்வாக வாழ்க்கையின் போதும் மற்றும் அதற்குப் பிறகு ஏற்பட்ட அனுபவங்களையும் அக்கட்டுரையில் விவரித்தார். [5] [9] இந்நூல், அவரது ஆரம்ப நிர்வாக நாட்களை விவரிக்கும் போது, ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைப்பதற்காக எடுக்கபட்ட போலோ நடவடிக்கை என்று பெயரிடப்பட்ட நடவடிக்கைப் பற்றியும், ஜவகர்லால் நேருவிற்கும் சர்தார் வல்லபாய் படேலுக்கும் இடையிலான அரசியல் வேறுபாடுகளையும் விவரிக்கிறது. [6] [10] இந்த புத்தகத்தை பின்னர் திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த இவரது இளைய சகாக்களில் ஒருவரான கோபகுமார் எம். நாயர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். [11] இந்த புத்தகம் இது ஒரு அதிகாரத்துவத்தின் சுயசரிதை என்ற பெயரில் மற்றொரு ஆங்கில மொழிபெயர்ப்பிலும் வெளிவந்தது. எழுத்தாளரும், எம்.கே.கே நாயரின் மருமகளுமான மீனா தாஸ் நாராயண் என்பவர் இந்த மொழிபெயர்ப்பை செய்தார். [12] இவரது வாழ்க்கை ஸ்மிருதி என்ற தொலைக்காட்சி தொடராக 2017 இல் சஃபாரி தொலைக்காட்ட்சியில் ஒளிபரப்பப்பட்டது. [13] கேரள மேலாண்மைச் சங்கம் அவரது நினைவாக எம்.கே.கே நாயர் நினைவு சொற்பொழிவு என்ற பெயரில் ஒரு வருடாந்திர சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்தது. [14] இவர் தனது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதிகளை கழித்த இடமான கேரளாவின் ஏலூரில் உள்ள ஒரு சமூக மையத்திற்கு எம். கே. கே நாயர் நினைவு சமூக மண்டபம் என இவரது பெயரிடப்பட்டது [15] [16] இவரது பெயரில் பெயரிடப்பட்ட அமைப்பான எம். கே. கே நாயர் அறக்கட்டளை, கலை நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிப்பதற்காக எம். கே. கே நாயர் விருது என்ற ஆண்டு விருதை நிறுவியுள்ளது. [17]

சர்ச்சைதொகு

1974 ஆம் ஆண்டில், அவர் மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை மத்திய புலனாய்வுப் பிரிவு பதிவு செய்தது. [4] விசாரணை நீதிமன்றம் 1983 ஆம் ஆண்டில் அவரை விடுவித்தது. பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றம் 1987 ஆம் ஆண்டில் அவரை விடுவித்தது. [8] பல ஆண்டுகளுக்குப் பிறகு, எம். கே. கே. நாயர் நினைவஞ்சலி சொற்பொழிவை நிகழ்த்தியபோது , கேரள அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டி. பாபு பால், இந்தியாவின் முன்னாள் பிரதமரின் உத்தரவின் பேரில் நாயர் துன்புறுத்தப்பட்டதை வெளிப்படுத்தினார். இதைப்பற்றி நாயர் தனது தனிப்பட்ட நாட்குறிப்பில் பதிவு செய்த கருத்துக்களின் மூலம் தான் அறிந்து கொண்டதாகவும் குறிபிட்டார். [18]

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._கே._நாயர்&oldid=2880288" இருந்து மீள்விக்கப்பட்டது