ஒருங்கிணைந்த வேளாண்மை
ஒருங்கிணைந்த வேளாண்மை (Integrated farming) என்பது விவசாயப் பொருட்களின் தரம் அல்லது அளவை சமரசம் எதுவும் செய்யாமல் நிலையான விவசாயத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முழு பண்ணை மேலாண்மை அமைப்பாகும். இது நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஒரு குறிப்பிட்ட இடம், சூழ்நிலைக்கு ஏற்ப பாரம்பரிய நடைமுறைகளுடன் ஒருங்கிணைத்து, பெரும்பாலும் குறுகிய இடத்தில் பல சாகுபடி நுட்பங்களைப் பயன்படுத்தி நிலையான சிறந்த பலனைப் பெற உதவுகிறது.
பால் பண்ணை, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, வேளாண் காடுகள் வளர்ப்பு மற்றும் சாண எரிவாயு போன்றவற்றை விவசாயத் தொழிலோடு தொடர்புபடுத்தி விவசாயத்தை இலாபகரமான தொழிலாக மாற்றுவதற்கு ஒருங்கிணைந்த வேளாண்மை உதவும். ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மை, கால்நடை வளர்ப்பு, பேண்தகு விவசாயம், காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்றவை ஒருங்கிணைந்த வேளாண்மைக்கான முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.
வரைவிலக்கணம்
தொகுசர்வதேச உயிரியல் கட்டுப்பாட்டு அமைப்பு (IOBC) UNI 11233-2009 ஐரோப்பிய தரத்தின்படி ஒருங்கிணைந்த வேளாண்மையை கீழ்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகிறது. இயற்கையுடன் கூடிய மண், நீர், காற்று போன்ற வளங்களைப் பயன்படுத்தி, நிலையான உற்பத்தி தரக்கூடியவாறு காரணிகளை ஒழுங்கமைத்து, மிகக் குறைந்தளவு மாசுபடுத்தும் உள்ளீடுகளின் பயன்பாட்டுடன் உயர்தர கரிம உணவு, தீவனம், நார் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றை உற்பத்தி செய்வதே ஒருங்கிணைந்த வேளாண்மையாகும்.[1]
ஒருங்கிணைக்கப்பட்ட கரிம மேலாண்மை அணுகுமுறைக்கு குறிப்பாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, சமச்சீரானதும், பயிர்களின் தேவைக்கு ஏற்றபடியானதுமான ஊட்டக்கூறு சுழற்சிகள், மற்றும் பண்ணையில் உள்ள அனைத்து கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் நலன் போன்றவற்றில் வேளாண் - சுற்றுச்சூழலின் அடிப்படை பங்கும் செயல்பாடும் இருக்கும்படியான ஒரு முழு இயற்கைப் பண்ணையையும் குறுக்கு - இணைக்கப்பட்ட அலகாகப் பார்க்கிறது. மண் வளத்தைப் பாதுகாத்தலும் அதிகரித்தலும், பல்வேறு சூழலைப் பராமரித்தலும் மேம்படுத்தலும், நெறிமுறை, சமூக அளவுகோல்கள் ஆகியவற்றைப் பின்பற்றுதல் ஆகியவை தவிர்க்க முடியாத அடிப்படைக் கூறுகளாகும். ஒருங்கிணைந்த வேளாண்மையில், பயிர் உற்பத்தியானது அனைத்து உயிரியல், தொழில்நுட்ப மற்றும் வேதியியல் முறைகளையும் கணக்கில் எடுத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் கவனமாக சமநிலையில் வைத்து, வணிகத்தில் இலாபத்தை ஈட்டவும் மற்றும் சமூக தேவைகளை பூர்த்தி செய்யவும் கூடியதாகப் பராமரிக்கப்படுகிறது.[2]
நஞ்சை நிலத்து ஒருங்கிணைந்த பண்ணை திட்டம்
தொகுநஞ்சை நிலத்தில் சாகுபடி செய்யக்கூடிய முக்கிய பயிர்கள் நெல், வாழை, கரும்பு, மஞ்சள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள். இதனோடு தொடர்புடைய தொழில்கள் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு. இவற்றை தகுந்த முறையில் இணைத்து அவற்றிலிருந்து கிடைக்ககூடிய கழிவு மற்றும் உப பொருட்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி பண்ணையின் இடுபொருள் செலவைக் குறைக்க முடியும் மற்றும் தானியம், இறைச்சி, பால், முட்டை மற்றும் உணவுக்காளான் ஆகியவற்றின்முலம் இலாபத்தை அதிகரிக்கலாம்.
தோட்டக்கால் நிலத்தில் பருத்தி, எண்ணெய்வித்துக்கள், பயறு வகைகள், மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் போன்றவை முக்கிய பயிர்கள் ஆகும். இதனுடன் தொடர்புடைய தொழில்கள் பால்பண்ணை, சாணஎரிவாயு, தேனீ வளர்ப்பு போன்றவை ஆகும். கறவை மாடுகளுக்கு உரிய தீவனம், தீவனப்பயிர் சாகுபடி மூலம் பெறப்படுகிறது. கால்நடையிலிருந்து கிடைக்கும் சாணம் சாணஎரிவாயு தயாரிக்க பயன்படுகிறது.
புஞ்சை நிலத்து ஒருங்கிணைந்த பண்ணைத்திட்டம்
தொகுஒருங்கிணைந்த பண்ணைத்திட்டம் மானாவாரி நிலத்தில் சோளம் பருத்தி பயறு வகை எண்ணெய் வித்துகள் வேளாண் காடுகள் ஆகியவை முக்கிய பயிர்கள் ஆகும் இதனுடன் இணைத்த தொழில் ஆடு வளர்ப்பு கோழி வளர்ப்பு சாண எரிவாயு ஆகும்
மேற்கோள்கள்
தொகு- ↑ "as of 25.07.2014" (PDF). Archived from the original (PDF) on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2014-10-08.
- ↑ "Stand 25. Juli 2014" (PDF). Archived from the original (PDF) on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2014-10-08.
மேலும் வாசிக்க
தொகு- Boller, E.F.; Avilla, J.; Joerg, E.; Malavolta, C.; Esbjerg, P.; Wijnands, F.G., eds. (2004), "Integrated Production Principles and Technical Guidelines" (PDF), IOBC WPRS Bulletin, vol. 27, no. 2, p. 54, archived from the original (PDF) on 2007-09-29
- Lütke Entrup, N., Onnen, O., and Teichgräber, B., 1998: Zukunftsfähige Landwirtschaft – Integrierter Landbau in Deutschland und Europa – Studie zur Entwicklung und den Perspektiven. Heft 14/1998, Fördergemeinschaft Integrierter Pflanzenbau, Bonn. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-926898-13-5. (Available in German only)
- Oerke, E.-C., Dehne, H.-W., Schönbeck, F., and Weber, A., 1994: Crop Production and Crop Protection – Estimated Losses in Major Food and Cash Crops. Elsevier, Amsterdam, Lausanne, New York, Oxford, Shannon, Tokyo. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-82095-7