ஒற்றைக் கற்றளி
ஒற்றைக் கற்றளி (அ) ஒற்றைக்கல் தளிகள் (monolithic architecture) என்பது நிலத்திலிருந்து துருத்திக் கொண்டிருக்கும் பெரிய/சிறிய பாறைகளை அல்லது குன்று ஒன்றை வெளிப்புறமாக மேலிருந்து கீழாகக் குடைந்து அமைக்கப்படும் கோயில் ஆகும்.[2] தளி என்பது கோயில் என்ற பொருள் தரும். எனவே கற்றளி (கல் + தளி) என்பது ஓர் ஒற்றைக்கல் கோயில் ஆகும். ஆரம்ப காலத்தில் கற்களால் அமைக்கப்பட்ட கோயில்கள் குடைவரை கோயில்களாகவே இருந்தன. இவை பாறைகளை உட்புறமாகக் குகைபோல் குடைந்து செய்யப்பட்டனவாகும். இதனைத் தொடர்ந்தே ஒற்றைக் கற்றளித் தொழில் நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தது. இவை இந்திய இந்துக் கோயில் கட்டடக்கலை மரபில் ஓர் அம்சமாகும். குறிப்பாக திராவிட கலைப் பாணியில் அமைந்த பல்லவர் கோயில்களில் இம் மரபைக் காணலாம்.
இவற்றை தனிக்கற் தளிகள், தனிக்கற் கோயில்கள், இரதக் கோயில்கள், மலைத்தளி, செதுக்குத் தளிகள் என்றும் பல்வேறு பெயர்களால் குறிப்பிடலாம்.
தமிழ் நாட்டில் ஒற்றைக் கற்றளிகளை முதலில் அமைத்தவர்கள் பல்லவர்கள் ஆவர்.[3] மாமல்லபுரத்தில் அமைந்துள்ள இரதக் கோயில்கள் ஒற்றைக் கற்றளிகளுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். ஒற்றைக் கற்றளிகள் செதுக்குவதற்குச் சிரமமானவை. இதனால் அமைப்பதற்கு இலகுவான கட்டுமானக் கோயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஒற்றைக் கற்றளிகள் வழக்கிழந்து போயின. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னர் இத்தகைய கோயில்கள் எதுவும் கட்டப்படவில்லை.
பல்லவர் காலத்தில் ஒன்பது ஒற்றைக்கல் தளிகள் அமைக்கப்பட்டன என்பர். அவை,
- தர்மராஜ இரதம்
- அருச்சுன இரதம்
- வீம இரதம்
- நகுல சகாதேவ இரதம்
- திரௌபதை இரதம்
- கணேச இரதம்
- வலையான் குட்டை இரதம்
- வடக்குப் பிடாரி இரதம்
- தெற்குப் பிடாரி இரதம்
முதலானவையாகும். இவை பொதுவாக வெளிப்புறத் தோற்றத்தில் கோயில் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தாலும் அனைத்திலும் கருவறை எனும் அமைப்பு காணப்படுவதில்லை. திரெளபதை இரதம், தருமராஜ இரதம் என்பவற்றிலே தான் கருவறை அமைந்திருக்கும்.
எல்லோரா கைலாசநாதர் குடைவரைக்கோயில்
தொகுஒற்றைக் கற்றளி அமைப்பில், இந்தியாவின் எல்லோரா பகுதியின் கைலாசநாதர் குடைவரைக்கோயில் சிறப்புடையது. ஒற்றைக்கல்லில் மேலிருந்து கீழான சிரமமான வேலைப்பாடமைந்தது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://www.dinamani.com/life-style/travellogue/2016/aug/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2557408.html.
- ↑ "இந்தப் பாடம் இனிக்கும் 03: உலகம் போற்றும் அற்புதம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
- ↑ "கருவறையின் ஒளியில் காணக்கிடைக்கும் வெட்டவெளி(விஷ்ணுபுரம் கடிதம் பதினேழு)". www.jeyamohan.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.