திரௌபதை இரதம், மாமல்லபுரம்

திரௌபதை இரதம் என்பது மாமல்லபுரத் தனிக்கற் தளிகளில் ஒன்று. உண்மையில் இது கொற்றவை அல்லது துர்க்கைக்கு உரிய தளியாகும். கருவறையின் உட்புறச் சுவரில் உள்ள பெண் தெய்வத்தின் சிற்பம் கொற்றவையைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. கோயிலுக்கு முன்னால் சிங்கத்தின் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. சிங்கம் துர்க்கையின் வாகனமாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.[1]

ஒரே தளத்தில் அருச்சுன இரதமும், திரௌபதி இரதமும். இடப்பக்கத்தில் இருப்பது திரௌபதி இரதம்.

அமைப்பு

தொகு
 
திரௌபதை இரதம், மாமல்லபுரம்

திரௌபதை இரதம் அருச்சுன இரதத்தோடு ஒரே மேடையில் அமைந்துள்ளது. அளவிற் சிறியதாகவும், வனப்புடையதாகவும் விளங்குகின்றது. மேற்கு நோக்கிய வாயிலுடன் அமைந்துள்ள இக்கோயில் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்த இரு தளங்களின் மேல் அமைந்தது. அடித்தளத்தினை யானைகளும், சிங்கங்களும் தாங்குவது போல அமைந்துள்ளது.

சிறிய சதுர வடிவமான இக்கோயில் வெளிப்புறம் வளைந்த நாற்பட்டைக் கூம்பு (பிரமிடு) வடிவிலான கூரையுடன் ஒரு குடிசை போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் "குச்சரக் குடிசை" எனக் குறிப்பிடப்படும் கோயில் இவ்வடிவினதாக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.[2] இக்கோயில் வாயிலின் இரண்டு பக்கங்களிலும் பெண் துவாரபாலகிகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கருவறையின் உட்புறச் சுவரில் காணப்படும் கொற்றவையின் சிற்பம் நான்கு கைகளுடன் தாமரைப் பீடத்தின் மீது நிற்கும் நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்துக்குக் கீழே வழிபடும் ஒருவரின் சிற்பமும், தன்னைத் தானே பலி கொடுத்துக்கொள்ளும் ஒருவரின் சிற்பமும் உள்ளன.

 
கருவறைப் உட்புறப் பின் சுவரில் காணப்படும் கொற்றவையின் சிற்பம்.

குறிப்புகள்

தொகு
  1. காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000. பக்.66.
  2. காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000. பக்.65.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு