ஆஸ்கார் வைல்டு

(ஒஸ்கார் வைல்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆஸ்கார் வைல்டு (Oscar Wilde, 16 அக்டோபர் 1854 – 30 நவம்பர் 1900) ஒரு ஐரிய நாடகாசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைத்திறம் வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியாக் காலத்தில் இலண்டனில் மிகவும் வெற்றிகரமான நாடகாசிரியராக விளங்கியதுடன், அக்காலத்துப் பிரபலங்களுள் ஒருவராகவும் விளங்கினார். இவரது சில நாடகங்கள் இன்றும் அரங்கேறி வருகின்றன. இவர் மீது தொடுக்கப்பட்ட தொடர்ச்சியான பல வழக்குகளால் இவர் பெரும் வீழ்ச்சிக்கு உட்பட்டதுடன், பிற ஆண்களுடன் "நாகரிகமற்றமுறையில்" நடந்துகொண்டமைக்காக இரண்டு ஆண்டுக் கடூழியச் சிறைத் தண்டனையும் பெற்றார். சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் அவர் இரவோடு இரவாகப் படகு மூலம் பிரான்சிலுள்ள டியப் நகருக்கு சென்றுவிட்டார். அவர் பின்னர் பிரித்தானியாவுக்குத் திரும்பவே இல்லை.

ஆஸ்கார் வைல்டு
நெப்போலியன் சரோனி என்பவரால் 1882 இல் எடுக்கப்பட்ட நிழற்படம்.
நெப்போலியன் சரோனி என்பவரால் 1882 இல் எடுக்கப்பட்ட நிழற்படம்.
பிறப்புஆஸ்கார் வைல்டு
(1854-10-16)16 அக்டோபர் 1854
டப்ளின், அயர்லாந்து
இறப்பு30 நவம்பர் 1900(1900-11-30) (அகவை 46)
பாரிஸ், பிரான்ஸ்
தொழில்நாடகாசிரியர், எழுத்தாளர், கவிஞர்
தேசியம்ஐரியர்
காலம்விக்டோரியாக் காலம்
கையொப்பம்

பிறப்பும், இளமைக் காலமும்

தொகு

இவர் டப்ளினில், 21 வெஸ்ட்லண்ட் ரோவைச் சேர்ந்த ஆங்கில-ஐரியக் குடும்பம் ஒன்றில் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் சர். வில்லியம் வைல்ட், தாயார் ஜேன் பிரான்சிஸ்கா வைல்ட். ஜேன் ஒரு வெற்றிகரமான எழுத்தாளர், இவர் 1848 ஆம் ஆண்டில் புரட்சிகர இயக்கமாக விளங்கிய இளம் அயர்லாந்தின் கவிஞராகவும் விளங்கியதுடன் வாழ்நாள் முழுதும் ஐரியத் தேசியவாதியாகவும் திகழ்ந்தார். வில்லியம் வைல்ட், புகழ் பெற்ற காது, கண் மருத்துவராக விளங்கியதுடன், அவரது மருத்துவ சேவைக்காக 1864 இல் பிரபுப் பட்டமும் பெற்றுக்கொண்டார். வில்லியம் தொல்லியல், நாட்டாரியல் தொடர்பிலும் நூல்கள் எழுதியுள்ளார். வில்லியம் ஒரு பெயர்பெற்ற வள்ளலும் ஆவார்.

ஆஸ்கார், அவருக்கு ஒன்பது வயதாகும் வரை வீட்டிலேயே கல்வி கற்றார். பின்னர் பதினாறு வயது வரை என்னிஸ்கிலன், ஃபெர்மனாக் என்னும் இடத்திலுள்ள போர்ட்டோரா ராயல் பள்ளியில் கல்வி கற்றார். போர்ட்டோராவில் படிப்பை முடித்துக் கொண்டதும் டப்ளினில் உள்ள டிரினிட்டிக் கல்லூரியில் 1871 ஆம் ஆண்டிலிருந்து 1874 ஆம் ஆண்டு வரை இலக்கியம் பயின்றார். அங்கே ஆஸ்கார் ஒரு தலைசிறந்த மாணவனாக விளங்கினார். அவருக்கு பேர்க்லே தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட் மக்தலன் கல்லூரியில் படிப்பதற்காக ஆஸ்காருக்குப் புலமைப்பரிசும் கிடைத்தது. அங்கே 1874 தொடக்கம் 1878 வரை பயின்றார்.

திருமண வாழ்க்கை

தொகு

இவர் 29 மே 1884ல் கான்ஸ்டன்ஸ் லாயிடு என்பவரை மணந்தார். இவருக்கு சிரில்(1885) மற்றும் விவியன்(1886) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

குயின்ஸ்பெர்ரி குடும்பம்

தொகு

லியொனல் ஜான்சன் என்றவர் ஆல்பிரட் டக்ளஸ் என்பவரை ஆஸ்காரிடம் அறிமுகம் செய்துவைத்தார். அப்போது டக்ளஸ் ஆக்ஸ்ஃபோர்டில் இளங்கலை மாணவராகப் பயின்று வந்தார். இவரை போசி என்று நண்பர்கள் அன்புடன் அழைப்பர். ஆஸ்கார் டக்ளஸை காதலித்தார். பின்னர் இருவரும் 1893ல் ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டனர். இதனால் 1895ல் நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பின் இவர் இரு வருடம் சிறை தண்டனைப் பெற்றார். 19 மே 1897ல் சிறை தண்டனையிலிருந்து விடுதலைப்பெற்ற பின் அவர் இரவோடு இரவாகப் படகு மூலம் பிரான்சிலுள்ள டியப் நகருக்கு சென்றுவிட்டார். அவர் பின்னர் பிரித்தானியாவுக்குத் திரும்பவே இல்லை. பின்னர் இருவரும் நேப்பிள்ஸில் ஒன்றுசேர்ந்தனர்.

இறப்பு

தொகு

இவர் தனது நாற்பத்தி ஆறாம் வயதில் 30 நவம்பர் 1900ல் மூளைக்காய்ச்சலால் பாதிக்கபட்டு இறந்தார். இவரை முதலில் சிமெடியெர் டெ பாக்னுஸ் என்கிற இடுகாட்டில் புதைத்தனர். பின்பு பேர் லாசைஸ் இடுகாட்டில் புதைத்தனர். இவரது சமாதியை சர்.ஜாக்கோப் எப்ச்டெயின் என்பவர் வடிவமைத்தார்.

இயற்றிய நூல்கள்

தொகு
  • கவிதைகள்(1881)
  • ஹேப்பி பிரின்ஸ் அன்ட் அதர் ஸ்டோரீஸ்(1888)
  • லார்ட் ஆர்தர் சவில்ஸ் க்ரைம் அன்ட் அதர் ஸ்டோரீஸ்(1891)
  • ஹவுஸ் ஆஃப் போமோகிரானேட்ஸ்(1891)
  • இன்டென்ஷன்ஸ்(1891)
  • த பிக்சர் ஆஃப் டோரியன் கிரே(1891)
  • த சோல் ஆஃப் மேன் அன்டர் சோஷியலிசம்(1891)
  • லேடி வின்டெர்மேன்ஸ் ஃபான்(1892)
  • அ வுமன் ஆஃப் நோ இம்பார்டன்ஸ்(1893)
  • ஆன் ஐடியல் ஹஸ்பன்ட்(1895)
  • த இம்பார்டன்ஸ் ஆஃப் பீயிங் ஏர்னெஸ்ட்(1895)
  • த ப்ரோஃபன்டிஸ்(1897)
  • த பால்லட் ஆஃப் ரீடிங் கஒல்(1898)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்கார்_வைல்டு&oldid=3609237" இலிருந்து மீள்விக்கப்பட்டது