ஓரிக்கை காஞ்சிப் பெரியவர் மகா மண்டபம்
காஞ்சிப் பெரியவர் மகா மண்டபம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நகராட்சியின் ஓரிக்கைப் பகுதியில் பாயும் பாலாற்றங்கரையில் காஞ்சி சங்கர மடத்தின் 68-வது மடாதிபதியான சந்திரசேகர சரசுவதி நினைவாக 2011-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கருங்கல் மண்டபம் ஆகும். இம்மண்டபத்தில் காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதியின் கருவறை அமைந்துள்ளது. மகா மண்டப வளாகம் 12 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இம்மகா மண்டபம் முதல் குடமுழுக்கு 3 பிப்ரவரி 2011 அன்று காஞ்சி சங்கர மடத்தின் 69-வது மடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. [1]இரண்டாவது குடமுழுக்கு காஞ்சி சங்கர மடத்தின் 70-வது மடாதிபதி விசயேந்திர சரசுவதி தலைமையில் 22 சூன் 2018 அன்று நடைபெற்றது.[2]
முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட மகா மண்டபம், 100 அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய கல் துாண்களைக் கொண்டது. இது மகா சுவாமியின் 100 வயதை குறிப்பிடுவதாக உள்ளது. சேர, சோழ, பல்லவர் கால கட்டக்கலை முறைப்படி இரண்டு குதிரை, சிங்கம், அதன் வாயில் உருளும் பந்து உள்ளது. மகா மண்டபத்தின் பாவுக் கற்களின் நடுவில் கற்சங்கிலியும் தொங்கவிடப்பட்டுள்ளது. மகா மண்டபத்தின் சந்திரசேகர சரசுவதியின் கருவறை மேல் 100 அடி உயர விமானம் கொண்டுள்ளது.[3][4]
இங்குள்ள நந்தி மண்டபம் 16 தூண்களைக் கொண்டது. இந்த மண்டபத்தில் 50 டன் எடையில் ஒரே கல்லால் ஆன நந்தி சிலை உள்ளது. நந்தி மண்டபம் அருகே 45 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன தீப ஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மகா மண்டபத்தின் முகப்பில் உள்ள 48 அடி உயரம் கொண்ட ராஜகோபுரமும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது.
மகா மண்டபத்தை சுற்றி 12 அடி அகலத்திற்கு கருங்கல் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மகா மண்டப குளம் எண்கோணத்தில் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. அதன் நடுவே யாழி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
மணி மண்டபம் தர்சன நேரம்
தொகு- காலை: 8 மணி முதல் மதியம் 12.30 வரை
- மாலை: 4.00 மணி முதல் 7.30 மணி வரை
மகா மண்டபம் அடையும் வழி
தொகுகாஞ்சிபுரத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உத்திரமேரூர் சாலையில் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ளது. அஞ்சல் சுட்டு எண் 631601