கடையர் (Kadaiyar) எனப்படுவோர் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் ஒரு பட்டியல் சாதியினர் ஆவர். இச்சமூகம் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் ஒரு உட்பிரிவாக கருதப்படுகின்றனர். இவர்கள் கடைசியர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

சொற்பிறப்பியல்

கடையர் என்பது "குறைந்த" அல்லது "குறைந்தது" என்று பொருள்படும். இது கடை என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.[1]

வரலாறு

கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் கடையர், கடைசியர், கடசர், கடைஞர் என இம்மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு பட்டங்கட்டியர் என்ற குலப்பெயரும் உண்டு. பாரம்பரியமாக மருத நிலத்திலும், ஆறுகளின் கடைமடைப் பகுதிகளில் மீன்பிடித்து வாழ்ந்த இம்மக்கள், தங்கள் நாடோடிப் பண்பால் கடற்புரம் நோக்கி நகர்ந்திருக்க வேண்டும் என கருதப்படுகின்றனர்.

தொழில்

இவர்கள் பாரம்பரியமாக கரையோர மீன்பிடித்தலோடு, முத்துக் குளித்தல், சங்கு குளித்தல், கடற்பாசி சேகரித்தல், சுண்ணாம்பு நீற்றல், கடலோர விவசாயம், சுண்ணாம்பு எடுத்தல் மற்றும் சங்கு தொடர்பான தொழில்கள், கடல் பூச்சிகளை காயவைத்து விற்பனை செய்தல் போன்ற கடலோர தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், சுளவு(முறம்), பனை ஓலை தொழில் செய்தும் வருகின்றனர்.

ஊர்களும் சமயங்களும்

ஆதிக் கிறித்தவர்களாக வேர்க்கோடு, ஓலைக்குடா, ஆத்தக்காடு, செம்மடம், அரியான்குண்டு, நொச்சிவாடி, தங்கச்சிமடம், அக்காள்மடம், தண்ணீர்ஊற்று, போன்ற ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, முள்ளிமுனை, க. கொ. பட்டிணம், மு. வ. பட்டிணம், தொண்டி, தீா்த்தாண்டதாணம் ஆகிய ஊர்களில் இந்து மதத்தை தழுவி வாழ்ந்து வருகின்றனர்.

காரங்காடு கிராமத்தில் கிறித்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். காரங்காடு கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்து கண்கொள்ளான் பட்டிணம் மற்றும் தஞ்சை மாவட்டம் கொள்ளிக்காடு கிராமத்திலும் வசித்து வருகின்றனர்.[சான்று தேவை]

உட்பிரிவில் சேர்க்க எதிர்ப்பு

இவர்கள் தேவேந்திரகுல வேளாளர் சாதியில் ஒரு பிரிவினர் எனக்கூறி இம்மக்களின் ஒப்புதல் இல்லாமலேயே, தேவேந்திர குல வேளாளர் பிரிவில் இணைப்பதற்கான முயற்சியில் சில மாற்றுச் சமூகத்தலைவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், அரசும் இந்த இணைப்பை பரிசீலனை செய்து வருவதை இம்மக்கள் எதிர்த்து வருகின்றனர்.[2]

மேற்கோள்கள்

  1. "கடையர் | அகராதி | Tamil Dictionary". University of Madras Lexicon.
  2. ஜோ டி குருஸ் (2019 மார்ச் 18). "சமூகக் கடத்தலுக்குள்ளாக்கப்படும் கடையர் இனமக்கள்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 21 மார்ச் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடையர்&oldid=3135044" இருந்து மீள்விக்கப்பட்டது