கதரீன் சில்லு (வாணவெடி)
கதரீன் சில்லு (Catherine wheel) என்பது ஒரு வகை வாணவெடி ஆகும். இது, வெடிமருந்து நிரப்பப்பட்ட ஒரு சுருள் வடிவக் குழாயாக இருக்கும் அல்லது அதன் நடுப்பகுதியூடாகச் செல்லும் ஊசியொன்றால் சரிவான நிலையில் பொருத்தப்பட்டுச் சுழலும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு வாணத்தைக் கொண்டிருக்கும். இதைப் பற்றவைக்கும் போது இது வேகமாகச் சுழல்வதனால் வாணத்தில் இருந்து வெளியேறும் வண்ணத் தீச்சுவாலையும், தீப்பொறிகளும் சுருள் வடிவான அழகுக் கோலத்தை உருவாக்குகின்றன. மத்தியகால ஐரோப்பாவில், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கும், வதைப்பதற்கும் "உடைக்கும் சில்லு" என்னும் கருவி பயன்பட்டது. இக் கருவியிலேயே புனித கதரீன் உயிர்த் தியாகம் செய்தார். இதனால் இக் கருவிக்கும், அதைப் போன்ற இந்த வாணவெடிச் சில்லுக்கும் "கதரீன் சில்லு" என்னும் பெயர் ஏற்பட்டது.
மால்ட்டா நாட்டில் கதரீன் சில்லு பரவலாகப் புழக்கத்தில் உள்ளது. அந்நாட்டிலுள்ள அசு-செபுக் என்னும் நகரம் இதற்குப் பெயர் பெற்றது. அங்கே ஒரு முழுத் தெருவையுமே இந்தக் கதரீன் சில்லுகளால் நிரப்பியிருப்பர். எளிமையான சிறிய சில்லுகளில் இருந்து, பற்சில்லுகளுடன் கூடிய சிக்கலான அமைப்புடையன வரை பல விதமான சில்லுகள் இங்கே இருக்கும். 2011, சூன் 18 ஆம் நாள் இது வரை இல்லாத அளவுக்கு 105 அடி விட்டம் கொண்ட மிகப்பெரிய கதரீன் சில்லு, மால்ட்டாவில் உள்ள இம்காப்பா நகரத்தில் உருவாக்கி இயக்கினர். அது ஒரு உலக சாதனையாக விளங்குகிறது[1][2].
கதரீன் சில்லுகள் பல்வேறு கோலங்களில் அமைவது உண்டு. "ஐந்து சில்லு அமைப்பு" என்னும் வகையில், நடுவில் ஒரு சில்லும், அதைச் சுற்றி சிலுவை வடிவில் அமையும்படி நான்கு சில்லுகளும் இருக்கும். நான்கு மீட்டர்கள் வரை விட்டம் கொண்டனவும், 8 முதல் 10 வரையான சில்லுகளைக் கொண்டனவுமான வகை "விண்மீன் அமைப்பு" எனப் பெயர் பெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ World's biggest Catherine Wheel is fired in Malta பரணிடப்பட்டது 2011-06-26 at the வந்தவழி இயந்திரம், Guinness World Records, சூன் 21, 2011
- ↑ Jubilation at world's biggest Catherine Wheel is fired in Mqabba, டைம்ஸ் ஆஃப் இந்தியா, சூன் 18, 2011