கனிம நீர்
கனிம நீர் (Mineral water) என்பது ஒரு கனிம நீரூற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீராகும். தாதுக்கள், உப்புகள் மற்றும் கந்தகச் சேர்மங்கள் போன்ற பல்வேறு கனிமங்கள் இதில் சேர்ந்திருக்கும். கனிம நீரூற்றில் கிடைக்கும் கனிம நீரில் ஏராளமான வாயுக்களும் இடம்பெற்றிருக்கலாம். இவ்வாயுக்களின் இருப்பு அல்லது இல்லாமைக்கு ஏற்ப கனிமநீரின் தோற்றம் மாறுபடலாம்.
பாரம்பரியமாக கனிம நீர் அவற்றின் நீரூற்று மூலங்களில் பயன்படுத்தப்பட்டது அல்லது நுகரப்பட்டது. குளியல், குளியல் சிகிச்சை அல்லது பொழுதுபோக்கிற்காக இக்கனிமநீர் முதன்மையாக பயன்படுத்தப்பட்டது. நிலத்திலிருந்து கனிம நீர் வெளிப்படுவதும், அந்நீரை உடல் நலத்திற்கு ஏற்றதாகக் கருதி மக்கள் அதை அருந்தச் செல்வதும் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டது. இவ்விடங்கள் மருந்து நீரூற்றுகள் என்றும், இங்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை குளியல் மருத்துவம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டன.
இன்று, நுகர்வுக்காக கனிமநீர் புட்டிகளில் அடைக்கப்படுவது மிகவும் பொதுவான நடைமுறையாகி உள்ளது. தண்ணீரை நேரடியாக அணுகுவதற்காக கனிமநீர் தளத்திற்கு பயணம் செய்வது இப்போது அசாதாரணமானதாக மாறியுள்ளது. மேலும் பல சந்தர்ப்பங்களில் பிரத்தியேக வணிக உரிமை, உரிமைகள் காரணமாக சாத்தியமில்லாமலும் போகிறது. கனிமநீர் என்ற பெயரில் 4,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட வணிகப் பெயரில் தண்ணீர் உலகளவில் வணிக ரீதியாக கிடைக்கின்றன.[1]
பல இடங்களில் "கனிம நீர்" என்பது குழாய் நீருக்கு மாறாக, புட்டிகளில் கார்பனேற்றம் செய்யப்பட்ட நீர் அல்லது சோடா தண்ணீரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
உட்கூறுகள்
தொகுதண்ணீரில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அயனிகள் அதிகமாகக் கலந்திருந்தால் அது கடினநீர் எனப்படுகிறது. குறைவாக கால்சியம் மற்றும் மக்னீசியம் அயனிகள் கரைந்திருந்தால் அந்நீர் மென்மையாக இருப்பதாகவும் விவரிக்கப்படுகிறது. [2]
ஒரு மில்லியனுக்கு குறைந்தது 250 பாகங்கள் திடப்பொருட்கள் கரைந்திருக்கும் நீர் கனிம நீராகும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கனிமநீரை வகைப்படுத்துகிறது.[3]
ஐரோப்பிய ஒன்றியத்தில், நீர் மூலத்தில் புட்டிகளில் அடைக்கப்படும் நீரை அல்லது குறைந்தபட்ச சிகிச்சைக்கும் உட்படுத்தப்படாத நீரை கனிம நீர் என்று கூறுகிறார்கள்.[4]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Mineral Waters of the World
- ↑ "Hard Water". USGS. 8 April 2014. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
- ↑ "CFR - Code of Federal Regulations Title 21". www.accessdata.fda.gov. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
- ↑ EU Directive 2009/54/EC
புற இணைப்புகள்
தொகு- Bottled Water of the World: Worldwide Bottled Water Brands Listed by Country
- Eupedia: List of European mineral water brands with mineral analysis
- "Mineral Waters". New International Encyclopedia. (1905).