கயா மடா எனும் கஜமதன் (ஆங்கிலம்: Gajah Mada ஜாவா மொழி: ꦓꦗꦃꦩꦢ); என்பவர், பொ.பி 1290 முதல் 1364 வரை வாழ்ந்த தலைநிறந்த அரசுசூழ் மதியூகியும் சாவகப் பேரமைச்சரும் ஆவார். இவரின் அசல் பெயர் சிரனோதரன் (Jirnnodhara).

கயா மடா
மயபாகித்தின் பேரமைச்சர்
கயா மடா எனக் கருதப்படும் சுடுமண் சிற்பம்
ஆட்சிபொ.பி1329 - 1364 வரை
இறப்புபொ.பி 1364

இவருக்கு "ஆனைத் தளபதி" (Mahapatih) எனும் அடைமொழிப் பெயரும் உண்டு. மயபாகித் பேரரசை அதன் உன்னத நிலைக்கு இட்டுச் சென்றவர் எனப் போற்றப் படுகின்றார்.[1]:234,239

புகழ்பெற்ற "பலபா சூளுரை" (Sumpah Palapa) இவருக்குப் பெரும் புகழை ஏற்படுத்தித் தந்தது. இன்றைய இந்தோனேசியாவில், கயா மடா, மாபெரும் தேசிய வீரர்களுள் ஒருவராக மதிக்கப் படுகின்றார்.[2]

வாழ்க்கை

தொகு

கயா மடாவின் முற்கால வாழ்க்கை பற்றி போதுமான தரவுகள் கிடைக்கவில்லை. "பயங்கரம்" எனும் மயபாகித் அரச காவலர் படையின் தளபதியாகவே அவர் முதன்முதலாக அறியப் படுகின்றார். "ராக்கிரியன் குதி" என்பவன், மயபாகித் அரசன் செயநகரனுக்கு (பொ.பி 1309–1328) எதிராக கிளர்ச்சி செய்த போது, கயா மடாவும், அவருக்கு முந்திய மகாபதி ஆரிய தடாவும் மன்னன் தப்பிச் செல்ல உதவியதையும், பின்பு கயா மடா அக்கிளர்ச்சியை அடக்கியதையும் அறிய முடிகின்றது.

செயநகரன், ராக்கிய்ரியன் குதியின் கையாளான தங்கன் எனும் அரசவை மருத்துவன் ஒருவனால் ஏழாண்டுகளுக்குப் பின், அறுவைச் சிகிச்சை என்ற பெயரில், செயநகரன் கொல்லப் படுகின்றான்.

நகரகிரேதாகமம்

தொகு

நகரகிரேதாகமம் எனும் சாவக நூலொன்று, அந்தக் கொலைக்கு கயா மடாவே உடந்தையாக இருந்ததாகச் சொல்கின்றது. தான் விசுவாசமாக இருந்த அரசி தியா தேவி காயத்திரியின் புத்திரிகளுக்கும் மேலாக, அவர்களின் முத்த சகோதரன் செயநகரன் அடக்குமுறையைப் பாவித்ததே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.

செயநகரனுக்குப் பின் அவன் தமக்கை திரிபுவன விஜயதுங்கதேவி (பொ.பி 1328–1350) ஆட்சிப்பீடம் ஏறினாள். 1329இல் அப்போதைய மகாபதியாக விளங்கிய ஆரிய தடா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கயா மடா மகாபதியாக பதவி அமர்த்தப்பட்டார். இக்காலவேளையில், சடெங், கேடா ஆகிய இடங்களில், 1331இல் ஏற்பட்ட வேறு இரு கலகங்களையும், மடா அடக்கவேண்டி நேர்ந்தது.

பலாபா சூளுரை

தொகு
 
பலாபா சூளுரை செய்யும் கயா மடா - இந்தோனேசிய தேசிய நினைவுச் சின்னச் சிற்பம்

திரிபுவதுங்கதேவியின் கீழ், மகாபதியாக கயா மடா பதவியேற்றபோது, புகழ்பெற்ற சபதமொன்றை அவர் சூளுரைத்ததாகச் சொல்லப்படுகின்றது. " மலாயத் தீவுகள், செரம், தஞ்சாங்கபுர, கரு, பகாங், டொம்பு, பாலி, சுண்டா, பலம்பெங், துமாசிக் முதலான நுசாந்தரங்கள் (இந்தோனேசிய தூரதேச எல்லைகள்) மயபாகித்தின் ஆளுகையின் கீழ் இருக்கும் வரை தான் பழங்களையோ சுவையூட்டிகளையோ உணவாக உள்ளெடுக்கப் போவதில்லை" என்பதே கயா மடாவின் "பலாபா சூளுரை" ஆகும். மறைமுகமாக, இச்சூளுரையானது, மயபாகித்துக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, உலகியல் இன்பங்களை கயா மடா வெறுத்தொதுக்கி இருந்ததையே இச்சூளுரை சுட்டிக் காட்டுவதாகச் சொல்லப்படுகின்றது.

தன் சூளுரைப்படியே, பெடுலு, பாலி, லொம்பொக் பகுதிகளையும் பின் சிறிவிசயத்தையும் கைப்பற்றிய கயா மடா, அங்கு, மயபாகித் இளவரசர்களில் ஒருவனான ஆதித்தியவர்மனை உபராசனாக அமர்த்தினார். பின், தென்கிழக்காசியாவின் முதலாவது முகம்மதிய சுல்தானமாகிய பசாயுடன் மோதிய அவர், பின் விந்தன், துமாசிக்(சிங்கப்பூர்), மலாயு (இன்றைய யம்பி) முதலான தேசங்களையும் மயபாகித்தின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தார்.

துங்கதேவி 1350இல் அரச பதவியைத் தன் மகன் ஹயாம் வுரூக்கிற்கு விட்டுக்கொடுத்த பின், மிகக் கடுமையாக உழைத்த கயா மடா, இந்தோனேசியாப் பகுதியை மாத்திரமன்றி, இந்நாளில், சிங்கப்பூர், மலேசியா, புரூணை, பிலிப்பைன்சு, கிழக்குத் தீமோர் முதலான இன்றைய நாடுகளின் பெரும்பாகத்தையும் மயபாகித் சாம்ராச்சியத்தின் ஆளுகையின் கீழ் வைத்திருப்பதில் வெற்றிகண்டார்.

புபாத் போர்

தொகு

1357இல், மயபாகித்தின் மேலாதிக்கத்தை எதிர்த்த ஒரேயொரு நாடாக, அதன் எல்லையிலிருந்த சுண்டா நாடு மட்டுமே விளங்கியது. பேரழகியாகப் புகழ்பெற்று விளங்கிய சுண்டா இளவரசி "டியா பிதாலோக சித்திரரேஷ்மி"யை மணம்புரிய, மயபாகித் பேரரசன் ஹயாம் வுரூக் பேராவல் கொண்டிருந்தான். அதற்கு சுண்டாவும் சம்மதிக்கவே, மயபாகித்தின் வடவெல்லையில் இருந்த புபாத் சதுக்கத்தில், பிதாலோகாவையும், சுண்டா அரசகுடும்பத்தையும் திருமணத்துக்கு வரவேற்று அழைத்துவரும் பொறுப்பு, கயா மடாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாய்ப்பை, சுண்டாவை அடிபணியச் செய்யச் சிறந்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்த நினைத்தார் கயா மடா. ஹயாம் வுரூக்கின் ஆசைக்கு மாறாக, சுண்டா இளவரசி ஹயாம் வுரூக்கின் மகாராணியாக அல்ல, ஆசைநாயகியாகவே விளங்க முடியும் என்று பொய்சொன்னார் கயா மடா. மயபாகித்துடன் நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்று திருமணத்துக்குச் சம்மதித்திருந்த சுண்டா அரசருக்கும் அவர் குடும்பத்தவருக்கும் இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமண ஏற்பாடுகளை நிறுத்திய சுண்டா நாட்டினர், கயா மடாவின் தலைமையிலான மயபாகித் படை கொலைமிரட்டல் விடுத்த போதும் அஞ்சவில்லை. புபாத் சதுக்கத்தில் இருதரப்பினருக்கும் சிறுபோர் ஒன்று இடம்பெற்றது. சுண்டா அரசர் பிரபு மகாராச இலிங்கபுவனரும், ஏனைய அரச குடும்பத்தாரும் செத்தொழியும் வரை போர் தொடர்ந்தது. ஹயாம் வுரூக் மீது நேசம் கொண்டிருந்த இளவரசி பிதாலோகா, இந்த அடுத்தடுத்த அதிர்ச்சிகளால் மனமுடைந்துபோய், தற்கொலை செய்துகொண்டாள்.

எதிர்பாராத இந்நிகழ்வுகளால், ஹயாம் வுரூக் பேரதிர்ச்சியுற்றான். மயபாகித் அவைத்தலைவர்களும் அமைச்சர்களும், கயா மடாவின் இந்தப் பொறுப்பற்ற போக்கால் நிகழ்ந்த துன்பியல் நிகழ்வுகளுக்காக வருந்தியதுடன், கயா மடாவையும் கடுமையாகக் கடிந்து கொண்டனர். உடனடியாகப் பதவிநீக்கப்பட்ட கயா மடா, தன் எஞ்சிய வாழ்க்கையை, கிழக்கு சாவகத்திலிருந்து மடகாரிபுரம் எனும் தோட்டத்திலேயே கழிக்கும்படி ஆயிற்று. வரலாற்றிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில், 1364இல் கயா மடா மரணத்தைத் தழுவினார்.[1]:240

கயா மடாவிடம் இருந்த அதிகாரக் குவிப்பால் நிகழ்ந்த அனர்த்தங்களை ஆய்ந்து பார்த்த ஹயாம் வுரூக், "மகாபதி" என்ற மயபாகித்தின் மாபெரும் பதவியையே இல்லாதொழித்து, பதிலாக நான்கு "மகாமந்திரிகள்" எனும் புதிய பதவிகளை ஏற்படுத்தினான். புத்திக்கூர்மை நிறைந்தவனாக விளங்கிய ஹயாம் வுரூக்கால், கயா மடா பதவிநீக்கப்பட்ட பின்னும், அவரால் ஏற்படுத்தித் தரப்பட்ட புதிய அரசியல் எல்லைகளையும் நாடுகளையும் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. எனினும் ஹயாம் வுரூக்கின் மறைவுக்குப் பின், மயபாகித்தின் வீழ்ச்சி மெல்ல மெல்ல ஆரம்பிக்கலாயிற்று.

மக்கள் வழக்கு

தொகு

பாலியிலுள்ள பிலாபாது எனும் அரச வீட்டில், கயா மடாவுக்கான தோபெங் எனும் முகமூடிச் சடங்கு ஆண்டாண்டாய் இடம்பெற்று வருகின்றது. கயா மடாவின் முகமூடி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதுடன், அது பாலிக்கு அமைதியையும் வளத்தையும் ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.[3]

கயா மடா, 20ஆம் நூற்றாண்டளவில் எழுச்சியுற்ற இந்தோனேசிய தேசியவாத இயக்கத்தால் முன்னிலைப்படுத்தப்பட்டார். கயா மடாவின் ஆட்சியைச் சுட்டிக்காட்டி, மேலைத்தேய ஆதிக்கத்துக்கு முன்பிருந்தே தாம் ஒத்த கலாச்சாரத்தைக் கொண்டிருந்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, இந்தோனேசியர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த, அவர்களால் முடிந்தது.[4] இவ்வாறு, நெதர்லாந்திலிருந்து இந்தோனேசியா விடுதலை பெறுவதற்கு, கயா மடா, மாபெரும் உந்துசக்திகளுள் ஒன்றாக விளங்கினார்.

இந்தோனேசியருக்கு முதலாவது இலவசக்கல்வியை வழங்கிய அரச பல்கலைக்கழகமானது, கயா மடாவைக் கௌரவிக்கும் வகையில், "கயா மடா பல்கலைக்கழகம்" எனப் பெயர்சூட்டப்பட்டது. 1945இல் முழுமையடைந்த இப்பல்கலைக்கழகமே, இந்தோனேசியாவின் முதலாவது இலவச மருத்துவக் கற்கையை அறிமுகப்படுத்திய பல்கலைக்கழகம் ஆகும்.[5][6][7] இந்தோனேசியாவின் முதலாவது தொடர்பாடல் செய்மதி கூட, அவரது சூளுரையை நினைவுகூரும் வண்ணம், "பலாபா செய்மதி" என்றே பெயர்சூட்டப்பட்டது. "கயா மெடா தெரு" எனப் பெயர் சூட்டப்பட்ட நூற்றுக்கணக்கான சாலைகள் சாவகத்தில் காணக் கிடைக்கின்றன.

மேலும் பார்க்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824803681.
  2. Majapahit Story : The History of Gajah Mada
  3. Sertori, Trisha (16 June 2010). "The mask of unity". The Jakarta Post. http://www.thejakartapost.com/news/2010/06/16/the-mask-unity.html. பார்த்த நாள்: 4 May 2015. 
  4. Wood, Michael. The Borderlands of Southeast Asia Chapter 2ː Archaeology, National Histories, and National Borders in Southeast Asia. p. 36. http://mercury.ethz.ch/serviceengine/Files/ISN/142914/ichaptersection_singledocument/54578174-4114-4470-a6d4-6fe4a4b376e3/en/Chapter+2.pdf. பார்த்த நாள்: 4 May 2015. 
  5. Stephen Lock, John M. Last, George Dunea. The Oxford illustrated companion to medicine Oxford Companions Series-Oxford reference online. Oxford University Press US: 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-262950-6. 891 pages: pp. 765
  6. James J. F. Forest, Philip G. Altbach. Volume 18 of Springer international handbooks of education: International handbook of higher education, Volume 1. Springer: 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-4011-3. 1102 pages. pp772
  7. R. B. Cribb, Audrey Kahin. Volume 51 of Historical dictionaries of Asia, Oceania, and the Middle East: Historical dictionary of Indonesia. Scarecrow Press: 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-4935-8. 583 pages. 133

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயா_மடா&oldid=3478836" இலிருந்து மீள்விக்கப்பட்டது