ஹயாம் வுரூக்

ஹயாம் வுரூக் (Hayam Wuruk, 1334–1389) மயபாகித்தை ஆண்ட ஒரு சாவக இந்து மன்னார் ஆவார்.[1]:234 இவர் 1350 இற்குப் பின், இராயசநகரன் (Rajasanagara) அல்லது பதாரா பிரபு (Bhatara Prabhu) என்றும் அழைக்கப்பட்டவர். மயபாகித்தின் நான்காவது பேரரசரான இவர் தன் தானைத் தலைவன் கயா மடாவின் உதவியுடன், அப்பேரரசின் உன்னதமான காலகட்டத்தில் ஆட்சி புரிந்தார். தன் தாய் திரிபுவன விஜயதுங்கதேவிக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஹயாம் வுரூக்கிற்குப் பின், அவரது மருகன் விக்கிரமவர்தனன் ஆட்சிபுரிந்தார்.

ஹயாம் வுரூக்
மயபாகித் பேரரசன்
Illustration of Hayam Wuruk.jpg
ஆட்சிமயபாகித் பேரரசு: 1350–1389
முன்னிருந்தவர்திரிபுவன விஜயதுங்கதேவி
பின்வந்தவர்விக்கிரமவர்தனன்
அரசிபடுகா சோரி
துணைவர்இற்பரத்தை (வீரபூமியின் தாய்)
இராயசநகரன் செயவிஷ்ணுவர்த்தனன்
அரச குலம்இராயச வம்சம்
தந்தைசக்கரதாரன்
தாய்திரிபுவன விஜயதுங்கதேவி
பிறப்பு1334
மயபாகித் பேரரசு
இறப்பு1389 (அகவை 54–55)
சமயம்சைவம்
இராயச வம்சத்தின் வம்ச வரிப்படம், சிங்கசாரி மற்றும் மயபாகித் பேரரசுகளின் மன்னவர்கள்.

வாழ்க்கைதொகு

"நகரகிரேதாகமம்" எனும் சாவக நூலின் படி, ஹயாம் வுரூக், கெலுட் எரிமலை குமுற ஆரம்பித்த கிபி 1334ஆம் ஆண்டில் பிறந்தார். சாவக மன்னனாக, இறைவன் பதாரா குருநாதன் அவதரித்ததன் தெய்விக முன்னறிவிப்பே இவ்வெரிமலை வெடிப்பு என்கின்றது நகரகிரேதாகமம்.[2] இதே ஆண்டிலேயே கயா மடா, தன் புகழ்பெற்ற பலாப சபதத்தை சூளுரைத்ததாகவும் சொல்லப்படுகின்றது.

மயபாகித் பேரரசி திரிபுவன விஜயதுங்கதேவிக்கும் கர்த்தவர்த்தனன் எனும் சிங்கசாரி இளவரசனுக்கும் பிறந்தான் ஹயாம் வுரூக். ஹயாம் வுரூக் என்ற பெயர் சாவக மொழியில் "பேரறிவு நிறைந்த சேவல்" எனப் பொருள்படும். நகரகிரேதாகமமும் "பரராத்தன்" எனும் இன்னொரு சாவக வரலாற்று நூலும், ஹயாம் வுரூக்கின் கட்டழகையும், வாள்வீச்சு, வில்வித்தை என்பவற்றில் அவன் காட்டிய பெருவீரத்தையும், அரசுசூழ்கை, கலைகள், நுண்மதி என்பவற்றில் நிகரற்று விளங்கியதையும் கூறி மகிழ்கின்றன. "தோபெங்" எனும் சாவக மரபுவழி நடனத்தை ஆடக்கூடிய தலைசிறந்த ஆடற்கலைஞனாகவும் அவன் திகழ்ந்ததாக அவை மேலும் சொல்கின்றன.

ஆட்சிதொகு

1350இல், மயபாகித் பேரரசை அமைத்த ராடன் விஜயனின் அரசியும், ஹயாம் வுரூக்கின் பாட்டியும் ஆன இராசமாதா காயத்திரி பிக்குணியாகவே, தன் பௌத்த மடத்தில் மரித்துப் போனாள். அவளது கட்டளைகளுக்கேற்பவே நாட்டை ஆண்டுவந்த விஜயதுங்கதேவி, அதனால் அரசபதவியை விட்டுவிலகவேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. எனவே, அவள் மகன் ஹயாம் வுரூக், தன் பதினாறு வயதிலேயே ஆட்சிப்பீடத்தில் அமர்ந்ததுடன், தானைத் தலைவன் கயா மடாவின் அறிவுரைகளின் கீழ் இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களில் பெரும்பாகத்துக்கு மயபாகித் பேரரசு விரியும் வண்ணம் நல்லாட்சி புரியலானான்.

அரசியல் பலத்தைப் பெருக்குவதற்காக, சுண்டா நாட்டு இளவரசியான "டியா பிதாலோக சித்திரரேஸ்மி"யை, ஹயாம் வுரூக் மணப்பதாக இருந்தது. எனினும், கயா மடா சுண்டா நாட்டை, மயபாகித்தின் கீழ் அடங்கிருக்க வேண்டுமெனக் கட்டளையிட்டதால், திருமணம் நின்றுபோனதுடன், "புபாத் போர்" என்றழைக்கப்படும் வரலாற்றுத் துயர்மிகு நிகழ்வில், திருமணத்துக்கு வந்திருந்த சுண்டா அரசகுடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர், மயபாகித் மண்ணில் கொல்லப்பட்டனர். ஹயாம் வுரூக் மீது காதல் கொண்டிருந்த இளவரசி பிதாலோகாவும் மனமுடைந்துபோய், தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள். இதனால், சுண்டா மற்றும் மயபாகித் நாடுகளுக்கிடையிலான உறவு முற்றாக சீரழிந்து போனதுடன், இவ்வீனச் செயலுக்காக, மயபாகித் அரசவை ஆன்றோரால், கயா மடா கடுமையாக விமர்சிக்கப்பட்டான்.

பல ஆண்டுகளுக்குப் பின், தன் முறைமைத்துனியான படுகா சோரியை, ஹயாம் வுரூக் மணந்துகொண்டான். அரசி சோரிக்குப் பிறந்த "குசுமாவர்த்தனி" எனும் மகளொருத்தி, ஹயாம் வுரூக்கின் வாரிசாக விளங்கினாள். அவள் பிற்காலத்தில் விக்கிரமவர்தனன் எனும் உறவினன் ஒருவனை மணந்துகொண்டாள். எனினும் ஹயாம் வுரூக்கின் இற்பரத்தையொருத்திக்கு "வீரபூமி" எனும் மகன் ஒருவன் இருந்தான். ஹயாம் வுரூக் மறைந்த 1389இற்குப் பின், வீரபூமிக்கும் விக்கிரமவர்த்தனுக்கும், பலத்த அரியாசனப் போட்டி இடம்பெற்றது. பரெக்ரெக் எனுமிடத்தில் இடம்பெற்ற போரில் வீரபூமி தோற்றதைத் தொடர்ந்து, விக்கிரமவர்தனன் அரசுக்கட்டிலேறினான்.

பொ.பி 1365இல் இம்பு பிரபஞ்சன் எனும் சாவகக் கவிஞர், ஹயாம் வுரூக்கைக் கௌரவிக்கும் வகையில், அவன் வம்சவரலாற்றைப் பாடும் "நகரகிரேதாகமம்" எனும் சாவக வரலாற்று நூலை இயற்றினார்.[3] கிழக்கு சாவகத்தில் அவன் மேற்கொண்ட சுற்றுலாக்களையும், ஊர்கள், கோயில்கள், நாடுகள் என்று அவன் மேற்கொண்ட இரம்மியமான பயணங்கள் பற்றியும் அந்நூல் மேலும் விவரிக்கின்றது. 1370இலிருந்து 1381வரை அவன் சீன அரசுடன் வாணிப உறவைப் பேணியதை அறியமுடிகின்றது.[1]:240

மேலும் பார்க்கதொகு

அடிக்குறிப்புகள்தொகு

  1. 1.0 1.1 Georges Coedès (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780824803681. http://books.google.com.my/books?id=iDyJBFTdiwoC. 
  2. Mpu Prapanca, translated by Slamet Muljana. "Terjemahan Kakawin Dēśawarṇnana (Nāgarakṛtāgama)" (Indonesian). Jejak Nusantara. மூல முகவரியிலிருந்து 5 பிப்ரவரி 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 February 2015.
  3. Malkiel-Jirmounsky, Myron (1939). "The Study of The Artistic Antiquities of Dutch India". Harvard Journal of Asiatic Studies (Harvard-Yenching Institute) Vol 4 (Issue 1): pp.59–68. doi:10.2307/2717905. 

உசாத்துணைகள்தொகு

முன்னர்
திரிபுவன விஜயதுங்கதேவி
மயபாகித் பேரரசு
1350–1389
பின்னர்
விக்கிரமவர்தனன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹயாம்_வுரூக்&oldid=3229881" இருந்து மீள்விக்கப்பட்டது