உயிரியலில், கலப்பினம் (hybrid) என்பது பல்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது. பொதுவாகக் கூறுவதானால், மரபியல் அடிப்படையில் வேறுபட்ட இரு உயிரினங்களின் பெற்றோர்களுக்கு இடையில் ஏற்படும் இனச்சேர்க்கையினால் பெறப்படும் சந்ததியே கலப்பினம் எனப்படும். குறிப்பிடும்படியாக, வெவ்வேறு பேதங்கள், இனங்கள், சாதிகளுக்கிடையில் செய்யப்படும் தாவர, விலங்கு இனவிருத்தியின்போது உருவாக்கப்படும் சந்ததிகளைக் குறிக்கும் பதமே கலப்பினம் ஆகும்[1].

எர்க்குலிசு இலிகர் கலப்பினத் தனியனும், அதன் பயிற்சியாளரும்

சொல்லியல் தொகு

உயிரியல் வகைப்பாட்டியல் அடிப்படை தொகு

உயிரியல் வகைப்பாட்டியல் கண்ணோட்டத்தில், கலப்பினம் என்பது வெவ்வேறு வகை இனச்சேர்க்கையிலிருந்து பெறப்படும் சந்ததிகளைக் குறிக்கின்றது.

பேதங்களுக்கிடையிலான கலப்பினம் தொகு

 
கத்தரியின் ஒரு கலப்பினவகை

ஒரே இனத்தைச் சேர்ந்த இருவேறுபட்ட பேதங்கள் அல்லது குலவகையைச் சேர்ந்த தனியன்கள் (individuals) அல்லது இனத்தொகைகள் (populations) அல்லது வர்க்கங்கள் (breeds) அல்லது பயிரிடும்வகைகளுக்கு (cultivars) இடையில் இனச்சேர்க்கை நிகழும்போது/நிகழ்த்தப்படும்போது, அதன் மூலம் உருவாகும்/பெறப்படும் புதிய பேதம் அல்லது குலவகை கலப்பினம் எனப்படுகின்றது.

இது பொதுவாக தாவர அல்லது விலங்கு வர்க்கவிருத்தியில் (Animal or Plant Breeding) பயன்படுத்தப்படும் அர்த்தமாகும். இதன் மூலம் பெற்றோரில் இல்லாத விரும்பத்தக்க இயல்புகள், அல்லது இரு பெற்றோரிலிருக்கும் விரும்பத்தக்க இயல்புகள் இணைந்த புதிய பேதம் உருவாகும். வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு துறைகளில் செயற்கையாக கலப்பின உருவாக்கம் (Hybridization) செய்யப்பட்டு சிறந்த பலன்களைப் பெறும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலப்பினம் மூலமாக புதிய வகை வீரியமான உயிரினங்களை உருவாக்க முடியும். சாதாரணமானவைகளை விட கலப்பினங்கள் வீரியமுடையவையாகவும் அதிகப் பலன் தரக்கூடியவைகளாகவும் அமைகின்றன.

நெல், சோளம், கம்பு, கோதுமை போன்ற தானிய வகைகள், தக்காளி, கத்தரி போன்ற மரக்கறி வகைகள், வேறும் பழப் பயிர்கள் போன்றவற்றில் விரும்பத்தக்க இயல்புகள் கொண்ட புதிய கலப்பின வகைகள் பெறப்பட்டன. எடுத்துக்காட்டாக இலங்கையில், பன்னிற சித்திரவடிவ நோயைத் தாக்குப்பிடிக்கக் கூடிய இந்திய வெண்டி இனமான 'கரித்த' வெண்டி, உள்ளூர் பால்வெண்டியுடன் கலக்கப்பட்டது.

அறிவியலறிஞர்கள் பயிர்வகைகள், கனிவகைகள் மட்டுமல்லாது விலங்கினங்களிலும் கலப்பின வகைகள் பலவற்றை உருவாக்குகின்றனர். இதே போன்று பசு வகைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. கலப்பின விலங்குகள் உருவில் பருமனும், திடத்தில் வலிமையும் கொண்டவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக பசுக்களில் ஐரோப்பிய இனமான பிறிசியன் உள்ளூர் இனங்களுடன் இனங்கலக்கப்படும்போது, வெப்பவலயத்தை சகித்து வாழக்கூடியதான அதிக பால் உற்பத்தியைத் தருவதுமான கலப்பினம் பெறப்படுகிறது.

துணை இனங்களுக்கிடையிலான கலப்பினம் தொகு

ஒரே இனத்தைச் சேர்ந்த இருவேறுபட்ட துணை இனங்களுக்கு (subspecies) இடையிலே நிகழும் இனப்பெருக்கத்தால் கலப்பினங்கள் உருவாகலாம். எடுத்துக்காட்டாக வங்காளப் புலிக்கும் Seberian புலிக்கும் இடையில் இனச்சேர்க்கையால் தோன்றும் கலப்பினம். இவை இனங்களுக்குள்ளான (Intra-specic) கலப்பினம் எனப்படும்.

இனங்களுக்கிடையிலான கலப்பினம் தொகு

 
கலப்பினத்தால் உருவான கோவேறு கழுதை

பொதுவாக ஒரே இனத்தைச் சேர்ந்தவைகளுக்கிடையிலேயே கலப்பினம் உருவாகும். வேறுபட்ட இனங்களை இணைத்துக் கலப்பினம் உருவாக்குவது கடினமான ஒன்றாகும். ஆனாலும், நெருங்கிய வேறுபட்ட இனங்கள் சிலவற்றுக்கிடையே இனச்சேர்க்கை நிகழ்ந்து, அப்படியான சில கலப்பினங்கள் உருவாகின்றன அல்லது உருவாக்கப்பட்டுள்ளன. இது இனங்களுக்கிடையிலான (Inter-specic) கலப்பினம் எனப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக சிங்கத்திற்கும், புலிக்கும் இடையிலான கலப்பினம் உருவாகியுள்ளது. ஆண் சிங்கத்திற்கும், பெண் புலிக்கும் இடையில் நிகழ்ந்த இனச்சேர்க்கையால் உருவாகிய புதிய உயிரினம் இலிகர் என்றும், ஆண் புலிக்கும், பெண் சிங்கத்திற்கு இடையில் நிகழ்ந்த இனச்சேர்க்கையால் உருவாகிய புதிய உயிரினம் திகோன் என்றும் அழைக்கப்படுகின்றது. கழுதைக்கும், குதிரைக்கும் இடையில் இனச்சேர்க்கையால் உருவாகும் தனியன்கள் கோவேறு கழுதை என அழைக்கப்படுகின்றது.

பொதுவாக இவ்வாறு உருவாகும் தனியன்கள் மலட்டுத்தன்மையைக் கொண்டிருக்கின்றன. இவை மலட்டு எச்சங்கள் எனப்படுகின்றன. இவ்வகை மலட்டு எச்சங்களை வீரியமான எச்சங்கள் என உயிரியல் நோக்கில் கூறிவிட முடியாது. ஆனாலும் இவ்வாறு உருவாகிய அனைத்துத் தனியங்களும் மலட்டு எச்சங்களாக இருக்கவில்லை[2][3]. சில பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளில் உருவாகிய சில கலப்பினங்களின் பெண் தனியன்களில் கருக்கட்டும்தன்மை (Fertility) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 1943 ஆம் ஆண்டில், Munich Hellabrunn Zoo இல், ஒரு சிங்கத்திற்கும் புலிக்கும் இடையிலான இனச்சேர்க்கையால் உருவாகிய கலப்பின உயிர், அதன் 15 ஆவது வயதில், வேறொரு சிங்கத்துடன் இனச்சேர்க்கைக்கு உட்பட்டு, ஒரு குட்டியை ஈன்றது. அந்தக் குட்டியானது ஆரம்பத்தில் உடல்நலத்தில் வலுவற்றதாக இருந்தாலும், அதனது வளர்பருவம்வரை உயிர் வாழ்ந்தமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது[3]. 2012 செப்டம்பர் மாதத்தில், உருசியாவிலுள்ள Novosibirsk Zoo இல் இலிகர் கலப்பினம் ஒன்றுக்கும், சிங்கத்துக்கிமிடையிலான இனச்சேர்க்கையில் ஒரு "இலிலிகர்" உருவாகியது அறிவிக்கப்பட்டது[2]. அந்தக் குட்டிக்கு பிரபலமான அமெரிக்க அசைபடம் தி லயன் கிங் - 2 இல் வரும் சிங்க அரசனான சிம்பாவின் மகளின் பெயரான கியாரா என்ற பெயர் வைக்கப்பட்டது.

பேரினங்களுக்கிடையிலான கலப்பினம் தொகு

சில சமயங்களில் பேரினங்களைச் சேர்ந்த தனியன்களுக்கிடையேயும் கலைப்பினங்கள் உருவாகின்றன. இவை பேரினங்களுக்கிடையிலான (Inter-genic) கலப்பினங்கள் எனப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வளர்ப்புச் செம்மறியாட்டுக்கும், ஆட்டுக்கும் இடையிலான இனச்சேர்க்கையால் உருவாகும் கலப்பினம்.

வேறு கலப்பினம் தொகு

 
வீட்டுக்கோழி x கினிக்கோழி கலல்ப்பினம் (இடம்), கினிக்கோழி x மயில் கலப்பினம் (வலம்), Rothschild Museum, Tring

மிகவும் அரிதாக வேறுபட்ட குடும்பங்களைச் சேர்ந்த தனியன்களுக்கிடையில் இனச்சேர்க்கை ஏற்பட்டு கலப்பினங்கள் உருவாவதுண்டு. கினிக்கோழி கலப்பினம் இவ்வகையான ஒரு கலப்பினமாகும்[4].
. இவை குடும்பங்களுக்கிடையிலான (Inter-familial) கலப்பினம் என அழைக்கப்படுவதுண்டு.

வேறுபட்ட வரிசைகளில் உள்ள உயிரினங்களுக்கிடையில் இனச்சேர்க்கை மூலம் உருவான கலப்பினம் எதுவும் அறியப்படவில்லை. அதாவது வரிசைகளுக்கிடையிலான (Inter-ordeal) கலப்பினம் அறியப்படல்லை.

மரபியல் அடிப்படை தொகு

குறிப்பாக மரபியலில் அடிப்படையில் கலப்பினம் என்ற பதத்திற்கு பல அர்த்தங்கள் இருப்பினும், அனைத்துமே பாலியல் இனப்பெருக்கத்தில் பெறப்படும் சந்ததியைக் குறிக்கின்றது[5].

 1. பொதுப் பயன்பாட்டில், ஒரு கலப்பினம் எனப்படுவது, மரபியலில் வேறுபட்ட இரு தனியன்களின் புணர்ச்சி அல்லது இனச்சேர்க்கையினால் உருவாகும் இதரநுக அல்லது கலப்பினக் கருவணுவைக் (heterozygous) கொண்ட சந்ததியைக் குறிக்கும்.
 2. மரபியல் கலப்பினம் (genetic hybrid) என்பது ஒரு குறிப்பிட்ட மரபணுவானது, இரு வேறு எதிருருக்களைக் கொண்ட நிலையைக் குறிக்கும்.
 3. நிறப்புரியின் அமைப்பில் ஏற்படும் அசாதாரண மாற்றத்தினால், ஏதாவது ஒரு நிறப்புரியிலாவது வேறுபாட்டைக் காட்டும் இரு பாலணுக்களின் இணைவினால் தோன்றும் விளைவைக் குறிப்பது அமைப்புக் கலப்பினம் (structural hybrid) எனப்படும்.
 4. ஒருமடிய நிலையிலிருக்கும் இரு பாலணுக்கள், வேறுபட்ட எண்ணிக்கையிலான நிறப்புரிகளைக் கொண்ட நிலையில் இணைந்து உருவாகும் விளைவைக் குறிப்பது எண்ணுக்குரிய கலப்பினம் எனப்படும்.
 5. சமநுகம் அல்லது ஓரினக் கருவணுவைக் (homozygous) கொண்டிருக்கையில் சிலசமயம் அவை இறப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்[6]. அவ்வாறான நிலையில் இதரநுக அல்லது கலப்பினக் கருவணு மரபணுவமைப்பு கொண்ட சந்ததி மட்டுமே உயிர்வாழும் இயல்பைக் கொண்டிருக்கும். எனவே அவை நிரந்தர கலப்பினம் எனப்படும்.

மேற்கோள்கள் தொகு

 1. The Free Dictionary
 2. 2.0 2.1 Katia Andreassi (21 September 2012). ""Liliger" Born in Russia No Boon for Big Cats". National Geographic.
 3. 3.0 3.1 Guggisberg, C. A. W. "Wild Cats of the World." (1975).
 4. Ghigi A. 1936. "Galline di faraone e tacchini" Milano (Ulrico Hoepli)
 5. Rieger, R.; Michaelis A.; Green, M. M. (1991). Glossary of Genetics (5th ed.). Springer-Verlag. ISBN 0-387-52054-6 page 256
 6. Lobo, Ingrid (2008). "Mendelian Ratios and Lethal Genes". நேச்சர் (Nature Publishing Group). http://www.nature.com/scitable/topicpage/mendelian-ratios-and-lethal-genes-557. பார்த்த நாள்: 21 திசம்பர் 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலப்பினம்&oldid=2917711" இலிருந்து மீள்விக்கப்பட்டது