கலேப் கத்தேக்னோ

கலேப் கத்தேக்னோ (Caleb Gattegno) (1911–1988) ஒரு எகிப்திய உளவியலாளர், கணிதக் கல்வியாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் எழுத்தாளர்.[1] இவர் இருபதாம் நூற்றாண்டின் முக்கியக் கணிதக் கல்வியாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார்.[2] கணிதம் மற்றும் அந்நிய மொழிகளைப் பயிற்றுவிப்பதற்கு மௌன வழி, வண்ணச் சொற்கள் போன்ற புதிய முறைகளை அறிமுகப்படுத்தியவர். இந்த அணுகுமுறைகளுக்குத் தேவைப்பட்ட கருவிகளையும் உருவாக்கியதோடு, கல்வி மற்றும் மனித மேம்பாடு தொடர்பான 120 க்கும் மேற்பட்ட நூல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். [3]

கலேப் கத்தேக்னோ
Caleb Gattegno
பிறப்பு(1911-11-11)நவம்பர் 11, 1911
அலெக்சாந்திரியா, (அன்றைய உதுமானியப் பேரரசின் கீழிருந்த எகிப்து)
இறப்புசூலை 28, 1988(1988-07-28) (அகவை 76)
பாரிஸ், பிரான்சு
கல்விபேசெல் பல்கலைக்கழகம், இலண்டன் பல்கலைக்கழகம், லீல் பல்கலைக்கழகம்
பணிஉளவியலாளர், கணிதக் கல்வியாளர், கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர்
அறியப்படுவதுகண்டுபிடிப்பாளர்: மௌன வழி, வண்ணச் சொற்கள், கண்கூடான, தெளிவான கணிதம் கற்பிக்கும் அணுகுமுறைகள்

பின்னணி தொகு

எகிப்தின் அலெக்சாந்திரியாவில் நவம்பர் 11, 1911 இல் கத்தேக்னோ பிறந்தார். இவருடைய தந்தை ஒரு எசுப்பானிய வணிகர். கத்தேக்னோவுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது குழந்தைகள். வறுமையின் காரணமாக கத்தேக்னோவும் அவருடன் பிறந்தவர்களும் இளமையிலேயே வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. கத்தேக்னோ முறையானப் பள்ளிக்கல்வியைப் பெற முடியவில்லை. அவரது 14 ஆவது வயதில் அவராகவே கற்றுக்கொள்ளத் துவங்கினார்.[4] அவரது 20 ஆவது வயதில் கெய்ரோவின் மார்செய்லீ பல்களைக்கழகத்தில் தேர்வுகள் எழுதி, இயற்பியல் மற்றும் வேதியியலில் ஆசிரியப்பணிக்கானத் தகுதியைப் பெற்றார்.[4]

பின்னர் இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்தார். அங்கு ஆசிரியர் கல்வியில் ஈடுபாட்டார். அத்துடன் கணிதக் கற்றலுக்கும் மேம்பாட்டுக்குமான பன்னாட்டு ஆணையத்தையும் (International Commission for the Study and Improvement of Mathematics Education (CIEAEM)) கணித ஆசிரியர்களின் சங்கத்தையும் துவங்கினார்.[5] லிவர்பூல் பல்கலைக்கழகம், இலண்டன் பல்கலைக்கழகம் உட்பட்டப் பல பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தார்.[3]

கற்பிக்கக்கூடியது விழிப்புணர்வு மட்டுமே தொகு

கத்தேக்னோவின் கருத்துப்படி மனிதர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டியது, விழிப்புணர்வு மட்டுமே. கற்றல் பாதையில் பலவிதமான விழிப்புணர்களைப் பெறவேண்டும். கற்றுக் கொள்ள வேண்டிய புதியதொன்று உள்ளது என்பதை அறிந்துகொள்வதே முதாலது விழிப்புணர்வாகும். புதிய கருத்து தொடர்புடைய விவரங்களை அனுபவிப்பதன் மூலம் தெரிந்து கொள்வதே இரண்டாவதாகும்.

எடுத்துக்காட்டாக, "2+2=4," என்று மாணவர்களை எழுதமட்டுமே கூறாமல், கோல்களைக் கொண்டு எண் 4 ஐ வெவ்வேறுவிதங்களில் அமைக்குமாறு செய்தால் அவர்கள் 4 என்ற எண் எவ்வாறு எண்களின் சேர்ப்பாக அமையும் எண்பதை எளிதாகப் புரிந்துகொள்வார்கள். இதேபோல பிற எண்களையும் எவ்வாறு பகுப்பது, சேர்ப்பது என்பதையும் தெரிந்து கொள்வார்கள்.

புதுப்புது கருத்துகள் மற்றும் பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். முக்கியமான சிலவற்றைப் புரிந்துகொள்ளும்போது அந்த உணர்வானது "ஆ!" என்ற சத்தத்தின் மூலமாக வெளிப்படும். வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பலப்பல விவரங்களை மிகவும் விரைவாக நாம் உணர்கிறோம். நமது வாழ்க்கை முழுவதுமே தொடரும் விழிப்புணர்வுகளால் ஆனதாக உள்ளது. ஏதேனுமொன்றைப் பற்றி உணரும்வரை அது தெரியாத ஒன்றாகவே இருக்கிறது. அறிந்த பின்னர் அதற்கு நாம் அதிகம் கவனம் தருவதில்லை. உணர்தலும் கற்றுக்கொள்ளலும் விழிப்புணர்வின் செயல்களாகும். கற்றலின்போது ஒரு ஆசிரியரின் பங்கு மானவர்களுக்கு விவரங்களைத் தருவதல்ல; மாறாக அவர்களே அதனை உய்த்துணர்ந்து அறியச் செய்தலேயாகும்.

காத்தேக்னோவின் கருத்துப்படி, நான்கு படிநிலைகளில் நடைபெறுகிறது. இந்நான்கு நிலைகளையும் விழிப்புணர்வு வாயிலாக விளக்கமுடியும்.

முதல் நிலை விழிப்புணர்வின் ஒரேயொரு செயலைக்கொண்டது: கண்டறியப்படவேண்டிய புதியதொன்று உள்ளது என்பதை உணர்தல். தெரிந்துகொள்ள வேண்டியது உள்ளது என்பதை உணரும்வரை நமக்குள் கற்றலே துவங்காது.

இரண்டாம் நிலை: கற்கத் துவங்கியதும் சூழலைப் புரிந்துகொள்வதற்கான தேடல் துவங்கும். நாம் தெரிந்துகொள்ள முயல்வதில் நாம் புதியவர்களாக இருப்பதாலும் வல்லுநர்கள் அல்ல என்பதாலும் நிறையப் பிழைகள் நேரக்கூடும். ஆனால் இப்பிழைகளே நாம் மீண்டும் சரியான புரிதலைப் பெறுவதற்கு உதவிசெய்யும். நாம் என்ன செய்யவேண்டும் என்பதை அறியும்போதுதான் இந்த இரண்டாம் நிலை முடிவடையுமென்றாலும் நாம் என்ன செய்கிறோமென்பதில் தெளிவு பெறும்போதுதான் வெற்றிபெறும்.

மூன்றாவது நிலை ஒரு மாறுநிலையாக இருக்கும். துவக்கத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் புதிதை முழுமையாகக் கற்றுக்கொண்டு தன்னிச்சையாகச் செய்யக்கூடிய திறனை அடைந்தபின்னர் கவனத்தோடு செய்யவேண்டியிருக்காததோடு பிறவற்றைக் கற்கவும் முடியும்.

நான்காம் நிலை மாற்றல் நிலையாக இருக்கும். இதுவரை கர்றுக்கொண்டவற்றை பின்வரும் நாட்களில் நாம் கற்க விரும்பும் புதுப்புது திறன்களைக் கற்பதற்குப் பயன்படுத்தும் நிலையாகும். நடக்க மர்றும் ஓடக் கற்றுக்கொண்டது சறுக்காட்டத்தைக் கற்கும்போது பயனுள்ளதாக இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Caleb Gattegno - Biography". Maths History (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-14.
  2. Alsina, Claudi; Nelson, Roger (2011). Icons of mathematics : an exploration of twenty key images. [Washington, D.C.]: Mathematical Association of America. பக். 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0883853528. 
  3. 3.0 3.1 "Caleb Gattegno". www.atm.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
  4. 4.0 4.1 "Caleb Gattegno (1911 - 1988)". mathshistory.st-andrews.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
  5. Johnston-Wilder, Sue; Mason, John (2004). Fundamental Constructs in Mathematics Education. Oxon: Routledge. பக். 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-134-33890-0. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலேப்_கத்தேக்னோ&oldid=3937362" இலிருந்து மீள்விக்கப்பட்டது