1956 கல்லோயா படுகொலைகள்

(கல்லோயாப் படுகொலைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கல்லோயா கலவரம் அல்லது கல்லோயா படுகொலைகள் என்பது விடுதலை பெற்றபின்னர் இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மை இலங்கைத் தமிழர் மீதான முதலாவது பெரும் இனவெறித்தாக்குதல் ஆகும்[3]. கலவரம் 1956 ஆம் ஆண்டில் ஜூன் 11 ஆம் நாள் ஆரம்பித்து தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்றது. உள்ளூர் பெரும்பான்மையின சிங்களக் குடியேற்றவாதிகள், மற்றும் கல்லோயாக் குடியேற்றத்திட்ட அவையின் ஊழியர்களும் இணைந்து அரச வண்டிகளில் வந்து நூற்றுக்கணக்கான தமிழரைக் கொன்றனர். 150 க்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பாராமுகமாக இருந்த காவல்துறையினரும் இராணுவத்தினரும், பின்னர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கல்லோயா கலவரம்
இடம்இலங்கை
நாள்ஜூன் 11–16, 1956 (+6 GMT)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
முக்கியமாக இலங்கைத் தமிழ் பொதுமக்கள்
தாக்குதல்
வகை
படுகொலைகள், எரிப்பு, கத்திக்குத்துகள்
ஆயுதம்கத்திகள், பொல்லுகள், நெருப்பு
இறப்பு(கள்)150[1][2][3]
காயமடைந்தோர்100+
தாக்கியோர்சிங்களக் காடையர்[4]

கலவரங்களின் பின்னணி

தொகு

பிரித்தானியக் குடியேற்றக் காலப் பகுதியில் இலங்கையில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டு அரச சேவையாளர்கள் சிறுபான்மையினரான தமிழர்களாக இருந்தனர். தமிழர் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலைத்தேய முறையிலான கல்வி அமெரிக்க இலங்கை மடத்தினராலும், ஏனைய மதப் பரப்புரையாளர்களாலும் வழங்கப்பட்டதே இதன் முக்கிய காரணமாகும். சிங்களத் தேசியவாதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கை சுதந்திரக் கட்சி 1956 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் ஆட்சியைக் கைப்பற்றி சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்க உறுதி பூண்டது[5]. சிங்களம் மட்டும் என்ற ஆட்சியாளரின் கொள்கையை எதிர்த்து இலங்கை தமிழரசுக் கட்சியினர் 1956, ஜூன் 5 ஆம் நாள் கொழும்பில் இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னால் அமர்ந்து அமைதியான முறையில் அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்நிகழ்வில் கிட்டத்தட்ட 200 தமிழ் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் பங்கு பற்றினர். எனினும், அரசு அமைச்சர் ஒருவரின் தலைமையில் சிங்களக் காடையர்கள் இவர்களைத் தாக்கினர். பல தலைவர்கள் படுகாயமடைந்தனர்[6]. அவர்கள் பின்னர் தமிழர்களின் வணிகத்தலங்களைத் தாக்கத்தொடங்கினர்[6]. தமிழருக்குச் சொந்தமான 150 க்கும் மேற்பட்ட கடைகள் தாக்கப்பட்டு பலர் காயமடைந்தனர். ஆனால் இத்தாக்குதல்கள் காவல் துறையினரால் உடனடியாகவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது[7].

கல்லோயா குடியேற்றத் திட்டம்

தொகு

கல்லோயா குடியேற்ற திட்டம் என்பது நிலங்களற்ற உழவர்களை முன்னர் காடுகளாக இருந்த சில இடங்களில் குடியேற்றுவதற்காக 1949 ஆம் ஆண்டு தொடங்கிய திட்டம். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஓடிய கல்லோயா ஆறு அணைக்கட்டு ஆக்கப்பட்டு, 40,000 ஏக்கர் நிலம் கமத்தொழிலுக்காக மாற்றப்பட்டது. 1956 ஆம் ஆண்டுக்குள் இக்குடியேற்றத் திட்டத்தில் 50 புதிய ஊர்கள் நிறுவப்பட்டிருந்தன. இவற்றில் தமிழர்கள், சிங்களவர்கள், இசுலாமியர்கள், மற்றும் சில வேடர்களும் குடியேற்றப்பட்டனர். இவர்களில் 50% சிங்களவர்களாக இருந்தனர். முன்னர் தமிழ்ப் பகுதிகளாக இருந்த இடங்களில் பெரும்பான்மையான சிங்களவர்கள் குடியேற்றப்பட்டதனால் இரு பகுதிகளுக்கும் இடையில் அங்கு ஆங்காங்கே சிறு சிறு கலவரங்கள் தொடங்கி இருந்தன[8].

படுகொலைகள்

தொகு

நாடாளுமன்றத்திலும், கொழும்பின் சுற்றுவட்டத்திலும் தமிழருக்கு எதிரான கலவரங்கள் இடம்பெற்றமை கல்லோயாப் பகுதியை எட்டியதை அடுத்து, 1956 ஜூன் 11 ஆம் நாள் மாலை அங்கும் கலவரங்கள் வெடித்தன. சிங்களக் காடையர் தமிழர்களைத் தேடி கல்லோயா பள்ளத்தாக்கின் வீதிகளில் அலைந்தார்கள். இந்தியத் தமிழர் உட்படத் தமிழருக்குச் சொந்தமான பல சொத்துக்கள் சேதமாக்கப்பட்டு எரிக்கப்பட்டன. சிங்களப் பெண் ஒருத்தி தமிழர்களால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதாகவும், ஆயுதம் தாங்கிய 6,000 தமிழர்கள் சிங்களக் குடியேற்றத் திட்டத்தை நோக்கி வருவதாகவும் பொய் வதந்திகளை சிங்களவர் பரப்பினர்[8]. இதனை அடுத்து உள்ளூர் சிங்களவர்கள் அரச வண்டிகளில் ஏறி தமிழர் குடியேற்றங்களை நோக்கிக் கிளம்பினர்[9]."இங்கினியாகல" என்ற குடியேற்றத்திட்ட ஊரிலும் அதனைச் சுற்றியுள்ள கரும்புத் தோட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்[10]. உள்ளூர் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்தனர். பின்னர் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது[11].

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "An evolving army and its role through time". Sunday Times. 2005-10-16. http://sundaytimes.lk/051016/plus/4.html. பார்த்த நாள்: 2008-10-29. "Following the 1956 elections and the introduction of Sinhala as the country’s official language, the first major outbreak of ethnic violence occurred leading to the deaths of around 150 people." 
  2. Vittachi, T. Emergency '58: The Story of the Ceylon Race Riots , p. 8
  3. 3.0 3.1 Chattopadhyaya, H. Ethnic Unrest in Modern Sri Lanka: An Account of Tamil-Sinhalese Race Relations, p. 52
  4. Horowitz, D. The Deadly Ethnic Riot, p. 181
  5. Vittachi, T. Emergency '58: The Story of the Ceylon Race Riots , p. 6-8
  6. 6.0 6.1 DeVotta, N. Blowback: Linguistic Nationalism, Institutional Decay, and Ethnic Conflict in Sri Lanka , p. 86
  7. Vittachi, T. Emergency '58: The Story of the Ceylon Race Riots , p. 7-8
  8. 8.0 8.1 தம்பையா, ஸ்டான்லி. Leveling Crowds: Ethnonationalist Conflicts and Collective Violence in South Asia , p. 83
  9. தம்பையா, ஸ்டான்லி. Leveling Crowds: Ethnonationalist Conflicts and Collective Violence in South Asia , p. 91
  10. Tambiah, Stanley. Leveling Crowds: Ethnonationalist Conflicts and Collective Violence in South Asia , p. 85-86
  11. Tambiah, Stanley. Leveling Crowds: Ethnonationalist Conflicts and Collective Violence in South Asia , p. 92

மேலும் பார்வைக்கு

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=1956_கல்லோயா_படுகொலைகள்&oldid=4092751" இலிருந்து மீள்விக்கப்பட்டது