திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்
(கழுக்குன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் வட்டத்தின் தலைமையிடமான திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1] திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தளமாகும்.[2]

தேவாரம் பாடல் பெற்ற
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் is located in தமிழ் நாடு
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்
வேதகிரீஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம்
புவியியல் ஆள்கூற்று:12°36′36″N 80°03′33″E / 12.609920°N 80.059230°E / 12.609920; 80.059230
பெயர்
பெயர்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்
ஆங்கிலம்:Thirukkallhukkundram Vedhagireeswarar Temple
அமைவிடம்
ஊர்:திருக்கழுக்குன்றம்
மாவட்டம்:செங்கல்பட்டு மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
பாடல்
பாடல் வகை:தேவாரம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள்

விபரம்

தொகு
 • இறைவர் திருப்பெயர்:
  • வேதகிரீஸ்வரர் (மலைமேல் இருப்பவர்)
  • பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோயிலில் இருப்பவர்)
 • இறைவியார் திருப்பெயர்:
  • சொக்கநாயகி (மலைமேல் இருப்பவர்)
  • திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்)
 • தல மரம்:
  • வாழை
 • தீர்த்தம்:
  • சங்குத் தீர்த்தம்
 • வழிபட்டோர்:
  • மார்க்கண்டேயர்
 • தேவாரப் பாடல்கள்:
  • சம்பந்தர் - தோடுடையானொரு காதில்
  • அப்பர் - மூவிலைவேற் கையானை
  • சுந்தரர் - கொன்று செய்த கொடுமை
  • மாணிக்கவாசகர் - பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான்
 
சங்குத் தீர்த்தம்

தல வரலாறு

தொகு
 • இத்தலம் வேதமே, மலையாய் இருத்தலின் 'வேதகிரி' எனப் பெயர் பெற்றது; வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.
 • மலைமேல் ஒரு கோயில்; ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே திருமலை, தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது.
 • 500 அடி உயரமுள்ள இம்மலையில் நாள் தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' என்றும்; திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று.
 • தாழக்கோயில் - மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அது முதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.[3]

சிறப்புகள்

தொகு
 
கழுகு உணவு பெறுதல்

இத்தலத்திற்கு வரும் வடநாட்டு யாத்ரிகர்களுக்குப் 'பட்சி தீர்த்தம் ' என்று சொன்னால்தான் புரியும். மலைமீது ஏறிச் செல்ல நன்கமைக்கப்பட்ட மலைப்பாதை - செம்மையான படிகளுடன் உள்ளது. இம்மலையை வலம் வருதல் சிறப்புடையது.

தாழக்கோயில், கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்ட மிகப் பழமையான கோயில். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோயிலுக்கு வெளியே ஐந்து தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சந்நிதிக்கு எதிரில் உள்ள மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்த'த்தில்[4] பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'சங்கு' பிறக்கின்றது. இதில் கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வரின் உடற்பிணி நீங்கும். (இதைச்சில மருத்துவர்களே மேற்கொண்டு அனுபவத்தும் உணர்ந்துள்ளனர்.)

அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. நாடொறும் பாத பூஜை மட்டுமே நடக்கின்றது.

ஆலயத்தை வலம் வரும்போது நந்தி தீர்த்தத்தையடுத்து, அலுவலகச் சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது; இதன் கலையழகு கண்டுணரத்தக்கது. இங்கு பைரவர் வாகனமின்றி உள்ளார். பிரகாரத்தில் ஆத்மநாதத் சந்நிதி - பீடம் மட்டுமே உள்ளது; பாணம் இல்லை. எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது.

மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம்; அப்பெருமான் வாக்கிலும், திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. இத்தலத்திற்கு அந்தகக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.

மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் எனப்படுகிறது.

தொன்மை

தொகு

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் 1400 ஆண்டுகால தொன்மை வாய்ந்தது. திருக்கழுக்குன்றம் திருமலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (பொ.ஊ. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

தீர்த்தங்கள்

தொகு

திருமலையைச் சுற்றி பன்னிரு தீர்த்தங்கள் உள்ளன. அவை: 1. இந்திர தீர்த்தம், 2. சங்கு தீர்த்தம் (மார்க்கண்டேய தீர்த்தம்), 3. சம்பு தீர்த்தம், 4. நந்தி தீர்த்தம், 5. ருத்ர தீர்த்தம், 6. வஷிஷ்ட தீர்த்தம், 7. அகத்திய தீர்த்தம், 8. மெய்ஞ்ஞான தீர்த்தம், 9. கௌசிக தீர்த்தம், 10. வருண தீர்த்தம், 11. அகலிகை தீர்த்தம், 12. பக்ஷி தீர்த்தம்.

இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள்) விடியற்காலையில் நீராடி திருமலையை வலம் வருவோருக்கு மனநோய்கள் அகலும் என்பது இங்குள்ள மக்களின் தீவிர நம்பிக்கை.

திருவிழாக்கள்

தொகு
 
கோயில் வளாகத்தின் பரந்த தோற்றம்

தேர்த் திருவிழா

தொகு

ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் சித்திரை மாத தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா, திருமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதில் ஏழாம் நாள் தேர்த்திருவிழாவில் பல ஊர்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் வந்திருந்து வடம் பிடித்து இழுக்கும் போது தேர் அசைந்து வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.

பத்து நாட்கள் திருவிழாவிற்கு பிறகு, பதினோராம் நாள் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த வணிகர்கள் அனைவரும் பட்டாசு, வாணவேடிக்கை என சித்திரை திருவிழாவை நிறைவு செய்து வைப்பர்.

சங்காபிஷேகம்

தொகு

திருக்கழுக்குன்றம் திருமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்) கடைசி திங்கள் கிழமையில் 1008 சங்குகளால் வேதகிரீசுவரருக்கு அபிஷேகம் நடைபெறும். அங்குள்ள சங்குகளில், இதற்கு முந்தய காலங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றிய அதிசய சங்குகளும் இடம் பெற்றிருக்கும்.கடந்த 01.09.2011 அன்றும், பிறகு 07.03.2024 அன்றும் இங்குள்ள சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்தது. சங்கு தீர்த்தக்குளத்திலிருந்து கொண்டுவரப்படும் புனித நீர் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும்.

இந்திர வழிபாடு

தொகு

புராணங்களின் படி, தேவர்களின் தலைவனான இந்திரன் இடி மின்னல் வடிவில் வந்து இங்குள்ள இறைவனை வழிபாடு செய்வதாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, 1930ம் ஆண்டு நவம்பர் 10ம் நாள் மிகப்பெரிய இடி ஒன்று திருமலைக் கோயில் கலசத்தை தாக்கி அந்த துளை வழியாக கருவறையில் நுழைந்து சிவனை அடைந்ததாகவும், அதனால் உருவான தாங்கமுடியாத வெப்பம் மற்றும் அதிர்வுகளை மறுநாள் கோயில் கதவை திறந்ததும் உணர்ந்ததாகவும் கூறுகின்றனர். இப்பொழுதும் இந்த வழிபாடு நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

சங்குதீர்த்த புஷ்கரணி

தொகு

12 வருடங்களுக்கு ஒரு முறை குருபகவான் மகர ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கும் நேரத்தில் இங்குள்ள சங்குதீர்த்தத்தில் இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகள் சங்கமிப்பதாக ஐதீகம். அதுசமயம் உற்சவர் இங்குள்ள சங்குதீர்த்தத்தில் நீராடுவர். லட்சகணக்கில் பக்தர்கள் அதுசமயம் புனிதநீராடுவார்கள்.

லட்ச தீபம்

தொகு

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாளன்று மாலையில் லட்சதீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், சங்குதீர்த்த குளக்கரையிலும் லடச்க் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்த திருவிழாவானது வட இந்தியாவில் கொண்டாடப்படும் புஷ்கரமேளா, கும்பமேளாவிற்கு இணையானது. கடைசியாக 02.08.2016 அன்று லட்சதீப பெருவிழா கொண்டாடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
 1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
 2. வீ. ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28, அம்மையப்பா இல்லம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014, ப.10
 3. Akilan, Mayura (2016-07-26). "திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சங்கு புஷ்கர மேளா: ஆகஸ்ட் 2ல் கோலாகலம்". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-17.
 4. "வேதகிரீஸ்வரர் கோயில் சங்குதீர்த்த குளத்தின் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு: கனமழை பெய்தும் பயனில்லையென பக்தர்கள் வேதனை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-05-17.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vedagiriswarar Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
திருக்கழுக்குன்றம்.

படத்தொகுப்பு

தொகு