காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்

காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ( டி.எஸ்.பி, Deputy superintendent of police ) என்பது பிரித்தானியப் பேரரசில் காவல்துறைப் படைகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு பதவியாகும். இது பொதுநலவாய நடுகளில் உள்ள பல காவல்துறைப் படைகளில் இன்னும் பயன்படுத்தப்படுகிறது. இப்பதவியின் தகுதி நிலையானது பொதுவாக உதவி கண்காணிப்பாளருக்கு மேலும் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு கீழேயும் இருக்கும்.

இந்தியா தொகு

 
இந்தியாவில் ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளரின் முத்திரை

பிரித்தானிய இந்தியாவில் இந்தியமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதால் [1] துணைக் கண்காணிப்பாளர் அல்லது காவல் ஆணையர் (ACP) பதவி 1876 இல் உருவாக்கப்பட்டது. இது முதலில் இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட பதவியும், அப்போது ஐரோப்பியர்கள் மட்டுமே பெற்ற பதவியான உதவிக் கண்காணிப்பாளர் பதவிக்கு இணையானது. துணை கண்காணிப்பாளர்கள் தற்போது மாநில காவல்துறை அதிகாரிகளாக உள்ளனர், இவர்கள் மாநில காவல் படைகளைச் சேர்ந்தவர்கள். இந்தப் பதவியில் நேரடியாக நுழைபவர்களும், ஆய்வாளராக இருந்து பதவி உயர்வு பெற்றவர்கள் இருப்பர். மாநிலக் காவல் படைகளைச் சேர்ந்தவர்களான காவல்துறை உதவி ஆணையர்கள், மாநிலத்தைப் பொறுத்து 8 முதல் 15 ஆண்டுகள் வரை மாறுபட்ட வரையறுக்கப்பட்ட சேவைக்குப் பிறகு இந்தியக் காவல் பணிக்கான பதவி உயர்வு பெறுவர்.[2] துணை கண்காணிப்பாளர்கள் பொதுவாக ஒரு மாவட்டத்தில் வட்ட அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில், இந்த தகுதி நிலையானது பொதுவாக வட்ட அதிகாரி (CO) என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும் CO என்பது ஒரு பதவியே தவிர ஒரு தகுதி நிலை அல்ல என்பதால் இது சரியான சொல்லாக இல்லை. மேற்கு வங்க மாநிலத்தில், டிஎஸ்பி என்பவர் துணைக் கோட்டப் பொறுப்பாளராக உள்ளார். மேலும் அங்கு பொதுவாக துணைக் கோட்ட காவல் அதிகாரி (SDPO) என்று அழைக்கப்படுகிறார்.

இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவராகவும், 21 முதல் 38 வயதுக்கு இடைப்பட்ட இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு 168 செமீ (5 அடி 6 அங்குலம்) உயரமும், பெண்களுக்கு 155 செமீ (5 அடி 1 அங்குலம்) உயரமும், மார்பு 84 செமீ (33 அங்குலம்) அளவிலும், விரிந்த நிலையில் 5 செமீ (2 அங்குலம்) கூடுதலாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 165 cm (5 அடி 5 அங்) குறைந்தபட்ச உயரம் இருக்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும், மாநில அரசுகள், இந்தியக் காவல் பணிக்கான பதவி உயர்வு பெறுவதற்கு ஏற்ற வகையில், மாநில காவல் பணியில் உள்ளவல்களின் பட்டியலைத் தயாரிக்கின்றன. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களால் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் நேரடியாக இந்தப் பதவியைப் பெறுகின்றனர். இதற்கு மேல் பதவியில் இருப்பவர் காவல் கண்காணிப்பாளர், கீழே இருப்பவர் ஆய்வாளர் ஆவார்.

குறிப்புகள் தொகு