கிலிஸ் மாகாணம்

கிலிஸ் மாகாணம் ( Kilis Province, துருக்கியம்: Kilis ili ) என்பது சிரியாவின் எல்லையில் தென்-மத்திய துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும். இது காசியான்டெப் மாகாணத்தின் தெற்கு பகுதியில் இருந்து 1994 இல் உருவாக்கப்பட்டது. மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் கிளிஸ் நகரில் சுமார் 67% மக்கள் வசிக்கின்றனர். மாகாணத்தின் உள்ள மற்ற நகரங்கள் மற்றும் கிராமங்கள் மிகச் சிறியவை ஆகும்.

வரலாறு

தொகு

இந்த மாகாணத்தில் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு, நடு வெண்கலக் காலத்தில் மனித குடியேற்றங்களுக்கான சான்றுகள் உள்ளன. இப்பகுதியை ஹுரியர்கள், அசிரிய சாம்ராஜ்யம், ஹிட்டிட் பேரரசு, பாரசீகப் பேரரசு, மாசிடோனிய பேரரசு, உரோமைப் பேரரசு ( பைசாந்தியப் பேரரசு உட்பட), ஆர்மீனிய இராச்சியம் மற்றும் இறுதியாக உதுமானியப் பேரரசு ஆகியவை ஆட்சி செய்துள்ளன. இங்கு தொல்லியல் சிறப்புமிக்க இடங்களாக ஏராளமான புதைமண்மேடுகள், அரண்மனைகள் மற்றும் மசூதிகள் போன்றவை உள்ளன.

கிலிஸ் என்ற பெயரானது இரண்டு மூலங்களிலிருந்து தோன்ற சாத்தியமுள்ளதாக கருதப்படுகிறது. முதல் காரணமாக கூறப்படுவதானது சுண்ணாம்புக்கான அரபு வார்த்தையான "கில்சே" என்ற சொல்லானது சுருக்கப்பட்டு கிலிஸ் என்று ஆனது எனப்படுகிறது. காரணம், கிலிஸ் பகுதியின் மண்ணில் அதிக அளவு சுண்ணாம்பு உள்ளது. இப்பெயருக்கு காரணமாக இரண்டாவதாக கூறப்படும் காரணமாக கூறப்படுவது தேவாலயத்திற்கான துருக்கிய வார்த்தை எனப்படுவதாகும், இது "கிலிஸ்" (கிரேக்க சொல்லான ekklesia, εκκλησία) என்பதில் இருந்து தோன்றி இருக்கலாம் எனப்படுகிறது. காரணம் 16 ஆம் நூற்றாண்டில் கிலிஸில் உள்ள புனித ஹோவன்னஸ் மடாலயத்திற்குச் சென்ற ஆர்மீனிய பயணிகள் அருகிலுள்ள துருக்கிய கிராமவாசிகளின் கவனத்தைக் கவர்ந்தனர். ஆர்மீனியர்களை எங்கே செல்கிறீர்கள் என்று துருக்கியர்கள் கேட்டபோது, அவர்கள் "கிளிசே கிடியோருஸ், கிளிசிடென் டெனியோருஸ்" என்று பதிலளித்தனர்; அதன் பொருள் "நாங்கள் தேவாலயத்திற்கு முன்னும் பின்னுமாக பயணிக்கிறோம்" என்பதாகும்.   [ மேற்கோள் தேவை ]

மக்கள்தொகை

தொகு

கிலிஸில் வாழும் இனத்தவரில் பெரும்பான்மையானவர்கள் துருக்கியர்கள் ஆவர்.[1] என்றாலும் கிளிஸ் மாகாணத்தில் துர்க்மென் பழங்குடியினரும் உள்ளனர்

நிலவியல்

தொகு

சிரியா சமவெளியின் வடக்கு விளிம்பில் யூப்ரடீஸ் ஆற்றின் மேற்கே தாரஸ் மலைகளின் தெற்கு அடிவாரத்தில் கிலிஸ் அமைந்துள்ளது. இதன் மாவட்டங்களில் நல்ல விவசாய நிலங்கள் உள்ளன. அவை சிறிய ஆறுகளால் பாசன வசதி பெறுகின்றன. கிளிஸின் 68% நிலப்பரப்பு பயிரிடப்பட்டுள்ளது. துருக்கியின் திராட்சை உற்பத்தியில் கிட்டத்தட்ட 4% கிலிசில் விளைகிறது. ஆலிவ், பழம், கோதுமை, பார்லி மற்றும் புகையிலை ஆகியவை மற்ற முக்கியமான விவசாய பொருட்கள் ஆகும். கடலில் இருந்து 60 முதல் 80 கி.மீ வரையிலான தொலைவில் உள்ள பிராந்தியத்தில் நடுநிலக் கடல் காலநிலை நிலவுகிறது. குளிர்காலம் குளிர்ச்சியாகவும் மழைக்காலமாகவும் இருக்கும். வசந்த காலம் மற்றும் இலையுதிர் மாதங்கள் சூடாகவும், கோடை காலம் வெப்பமாகவும் இருக்கும். குளிர்காலத்தின் சராசரி வெப்பநிலை 4 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், கோடையில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸுக்கு கீழ் வராது.

சிரியாவின் எல்லை பகுதியில் உள்ள மாகாணப் பகுதியியல் இருந்து தெற்கே சிரிய நகரமான அலெப்போவுக்கு ஒரு சாலை செல்கிறது.

கிளிஸ் சமமான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகளின் வடகிழக்கு கோட்டால் பயணிக்கிறது.

இந்த மாகாணம் 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை எல்பேலி, கிலிஸ் (தலைநகர் மாவட்டம்), முசாபெய்லி மற்றும் பொலடெலி ஆகியவை ஆகும்.

கல்வி

தொகு

கிலிஸ் 7 அராலாக் பல்கலைக்கழகம் கிலிஸில் அமைந்துள்ளது. இங்கு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 8000 இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்களைக் கொண்டுள்ளது.

 
கிலிஸ் 7 அராலாக் பல்கலைக்கழக பிரதான வாயில்

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலிஸ்_மாகாணம்&oldid=3345009" இலிருந்து மீள்விக்கப்பட்டது