கிளினோகிளேசு

ஆர்சனேட்டு கனிமம்

கிளினோகிளேசு (Clinoclase) என்பது Cu3AsO4(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். நீரேறிய தாமிரம் ஆர்சனேட்டு கனிமமாக இக்கனிமம் கருதப்படுகிறது. கிளினோகிளேசு ஓர் அரிதான இரண்டாம் நிலை தாமிரத் தாது ஆகும். வெப்ப முறிவு மண்டலத்தில் உள்ள தாமிர சல்பைடு படிவுகளுக்கு மேலே ஊசிவடிவ படிகங்களாக கிளினோகிளேசு உருவாகிறது. கண்ணாடி போன்ற பளபளப்புடன் அடர் நீல நிறத்திலும் அடர் பச்சை கலந்த நீலத்திலும் ஒளிபுகும் தன்மையுடன் இக்கனிமம் திராட்சைக் கொத்துகள் போன்ற படிகங்களாகத் தோன்றுகிறது. 2/m என்ற ஒற்றைச்சரிவச்சு படிகவமைப்பில் கிளினோகிளேசு காணப்படுகிறது. மோவின் அளவுகோலில் இதன் கடினத்தன்மை மதிப்பு 2.5 முதல் 3 எனவும் ஒப்படர்த்தி 4.3 எனவும் அடையாளப்படுத்தப்படுகிறது. மாலகைட்டு, ஓலிவெனைட்டு, குவார்ட்சு, இலிமோனைட்டு, அடாமைட்டு, அசூரைட்டு, புரோசேன்டைட்டு போன்ற கனிமங்களுடன் கலந்து கிளினோகிளேசு கனிமம் காணப்படுகிறது.

கிளினோகிளேசு
Clinoclase
கிளினோகிளேசு கனிமத்தின் மாதிரி
பொதுவானாவை
வகைஆர்சனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCu3AsO4(OH)3
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மேற்கோள்கள்[1][2][3]

இங்கிலாந்தின் கோர்ன்வால் மாகாணத்தில் 1830 ஆம் ஆண்டு கிளினோகிளேசு கண்டறியப்பட்டது. ஆத்திரேலியாவின் நியூசவுத் வேல்சிலும், அமெரிக்காவின் அரிசோனா, கலிபோர்னியா, மொன்டானா, நியூ மெக்சிகோ, நெவாடா, யூட்டா மாநிலங்களின் தாமிரத்தாது படிவுகளில் இக்கனிமம் காணப்படுகிறது. பிரான்சு, செருமனி, செக் குடியரசு, ஆத்திரியா, உருமேனியா, உருசியா மற்றும் சையர் குடியரசு போன்ற நாடுகளிலும் கிளினோகிளேசு கனிமத்தைக் காணலாம் [4]. கிளினோகிளேசை அபிகைட்டு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். இங்கிலாந்தின் கோர்ன்வால் மாகானத்திலுள்ள ஒரு சென் டே என்ற கிராமத்தில் அமைந்துள்ள வீல் கார்லேன்டு சுரங்கத்தை கிளினோகிளேசு அமைவிடமாகக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளினோகிளேசு&oldid=2591008" இலிருந்து மீள்விக்கப்பட்டது