கி. ஸ்ரீதரன்
கி.ஸ்ரீதரன், இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், முடிகண்டநல்லூர் (அஞ்சல் குறியீட்டு எண் 609109) கிராமத்தில் எம்.ஆர்.கிருஷ்ணப்பா, பங்கஜவல்லி இணைக்குப் பிறந்தவர் ஆவார். 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். திருவரங்கம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில், தனது பள்ளிப்படிப்பையும், பின்னர் திருச்சியில் பி.எஸ்.சி புவியியல் படிப்பையும் முடித்த இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பிரிவில் எம்.ஏ., பட்டம் பெற்றார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் 1974 ஆம் ஆண்டில் தொல்லியல் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். அகழாய்வாளர் (1977 - 81); பதிவு அலுவலர் (1981 - 2007) ஆகிய பதவிகளை வகித்த இவர் தொல்லியல் துணை கண்காணிப்பாளராக (துணை இயக்குநர்) பணி ஒய்வு பெற்றார்.[1][2][3]
ஆற்றிய பணிகள்
தொகுதருமபுரி மாவட்டம், ஓசூர், அரூர் மற்றும் தஞ்சை மாவட்டம், ஆகிய பகுதிகளில் ஒரு தொல்லியல் ஆய்வாளராகச் சிறப்பாகக் களப்பணியாற்றியுள்ளார்.[1]
கரூர், கங்கைகொண்ட சோழபுரம், பனையகுளம், மோதூர் (தருமபுரி மாவட்டம்), கொடுமணல் (ஈரோடு மாவட்டம்), மாங்குடி (திருநெல்வேலி மாவட்டம்), ஆண்டிபட்டி (திருவண்ணாமலை மாவட்டம்) ஆகிய தொல்லியல் களங்களில், தொல்லியல் துறை இயக்குநர். இரா.நாகசாமி வழிகாட்டுதலில், நடைபெற்ற அகழாய்வுகளில் ஒரு அகழாய்வாளராக முக்கியப் பங்கு வகித்தார்.[1][3]
பதிவு அலுவலராக பல கோவில்கள் மற்றும் தனியாரிடம் இருந்த 3000 க்கும் மேற்பட்ட தொல்பொருட்களை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் பணியினை மேற்கொண்டார். செப்பேடுகள், ஓவியங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற தொல்பொருட்கள் கண்டறியப்பட்டு தொல்லியல் துறையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. போதிய பராமரிப்பும் வழிபாடும் இல்லாத நிலையில் இருந்த சில கோவில்கள் இவரது முயற்சியால் வரலாற்றுச் சின்னமாக மாற்றப்பட்டு மாநில தொல்லியல் துறை சிறப்பாகப் பராமரித்து வருகிறது.[1][3]
இராஜராஜன் அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம், கரூர் சேரர் வரலாற்று அருங்காட்சியகம் ஆகிய அருங்காட்சியகங்களை அமைக்கும் பணியில் முக்கிய பங்கு வகித்தார். இவரது முயற்சியால் தென்னிந்திய செப்புத திருமேனிகளின் கண்காட்சி, 1983 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இடம்பெற்று சிறப்பாக நடைபெற்றது.[1][3]
இயற்றிய நூல்கள்
தொகுதொல்லியல்துறை வெளியீடுகள்
தொகு- தமிழ்நாடு கல்வெட்டுகள் 2004. தொல்லியல்துறை வெளியீடு
- கரூர் அகழ்வைப்பகம் - கையேடு. தொல்லியல்துறை வெளியீடு
- இராஜராஜன் அகழ்வைப்பகம் - கையேடு. தொல்லியல்துறை வெளியீடு
- கங்கைகொண்ட சோழபுரம் - கையேடு. தொல்லியல்துறை வெளியீடு
- மரக்காணம் அகழாய்வு அறிக்கை. தொல்லியல்துறை வெளியீடு
- பரிக்குளம் அகழாய்வு அறிக்கை. தொல்லியல்துறை வெளியீடு
- கரூர் அகழாய்வு அறிக்கை. தொல்லியல்துறை வெளியீடு [1]
பிற வெளியீடுகள்
தொகு- தொல்லியல் நோக்கில்
- தொல்லியல் பார்வையில் திருக்கோயில்கள்
- வழிகாட்டும் கல்வெட்டுகள்[2]
கட்டுரைகள்
தொகுதொல்லியல் துறை வெளியிட்டுள்ள நூல்கள் மற்றும் 'கல்வெட்டு' இதழில் இவர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இடம்பெற்றுள்ளன. கல்கி,அமுதசுரபி, கலைமகள், தினமலர், தினமணி ஆகிய இதழ்களிலும் தொல்லியல், வரலாறு, கோயில்கலை ஆகிய தலைப்புகளில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.[1]
கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள்
தொகுபல வரலாற்றுக் கருத்தரங்குகளில் பங்கேற்று கல்வெட்டு, தொல்லியல், வரலாறு தொடர்புடைய தலைப்புகளில் உரையாற்றியுள்ளார். மாணவர்களுக்கு தொல்லியல் மற்றும் கல்வெட்டு குறித்த பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தியுள்ளார்.[1]
விருதுகள்
தொகு- 'தொல்பொருளியல் செல்வர்' என்ற சிறப்பு விருதினை திருவாடுதுறை ஆதீனம் 22 மார்ச் 2009 அன்று இவருக்கு வழங்கிச் சிறப்பித்தது.
- 'மாமன்னன் ராஜராஜன் விருது' தஞ்சாவூரில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாமன்னன் ராஜராஜ சோழனின் 1028 ஆம் சதய விழாவில் இவருக்கு வழங்கப்பட்டது.[1]
குடும்பம்
தொகுமனைவி திருமதி.எஸ்.மைதிலி. மகன்கள் எஸ்.கார்த்திகேயன் மற்றும் எஸ்.தியாகராஜன். தற்போது சென்னை விருகம்பாக்கம், நடேசன் நகரில், குடும்பத்துடன் வசித்து வருகிறார்.[1]