கீழடி அருங்காட்சியகம், கொந்தகை

சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் அமைந்துள்ள அருங்காட்சியகம்

கீழடி அகழ்வைப்பகம் (Keezhadi museum) என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள கொந்தகை கிராமத்தில் அமைந்த ஒரு தொல்லியல் அகழ்வைப்பகம் ஆகும்.

கீழடி அருங்காட்சியகம்

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 2018[1] முதல் நடந்த எட்டு கட்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருட்கள் இந்த அகழ்வைப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது 2023 மார்ச் 5 அன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் திறந்தவைக்கபட்டது.

அமைவிடம்

தொகு

கீழடி அகழ்வைப்பகம் அமைந்துள்ள கொந்தகை ஊரானது மதுரைக்கு தென்கிழக்காக 12 கிலோமீட்டர் தொலைவிலும்[2], மாவட்ட தலைநகரான சிவகங்கையிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 495 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[3]

அமைப்பு

தொகு

கீழடி அகழ்வைப்பக கட்டடம் சுமார் 18.43 கோடி மதிப்பிட்டில் செட்டிநாட்டுக் கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ளது.[4] இந்த வளாகம் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

காட்சிக்கூடங்கள்

தொகு

இந்த அகழ்வைப்பகத்தில் ஆறு காட்சிக்கூடங்கள் அமைக்கபட்டுள்ளன.[5] மதுரையும் கீழடியும் என்பது முதல் காட்சிக்கூடமாகும். இதில் பழங்காலம் முதல் வரலாற்றின் துவக்ககாலம் வரையிலான மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் ஓவியங்கள் அமைந்துள்ளன. மேலும் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தொல்லியல் தளங்கள், மதுரையின் பழமை, கீழடி அகழாய்வின் வரலாறு போன்றவற்றை விளக்கும் வகையிலான 15 நிமிட ஒலிவடிவ காட்சியகம் அமைந்துள்ளது. இரண்டாம் காட்சிக் கூடத்தில் வைகைக் கரையில் வாழ்ந்த மக்களின் நீர் மேலாண்மை, வேளாண்மை குறித்த தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. மூன்றாம் காட்சிக்கூடத்தில் பண்டைத் தமிழர்கள் எழுத்தறிவு பெற்று விளங்கியதற்கு சான்றாக உள்ள ஓட்டுச் சில்லைகள், மட்பாண்டத் தொழில் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நான்காம் காட்சிக்கூடத்தில் பண்டைத் தமிழகத்தில் இரும்பு, நெசவு, கைவினைத் தொழில்கள் சிறந்திருந்ததற்கான சான்றுகள் இடம்பெற்றுள்ளன. ஐந்தாம் காட்சிக் கூடத்தில் தமிழரின் கடல் வணிகம் குறித்த சான்றுகள் இடம்பெற்றுள்ளன. ஆறாம் காட்சிக்கூடத்தில் பண்டைத் தமிழரின் பொழுதுபோக்கு, வாழ்வியல் கலைகள், எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. "CM Stalin inaugurates Keezhadi museum: Six special features to look out for". The News Minute (in ஆங்கிலம்). 2023-03-06. பார்க்கப்பட்ட நாள் 2023-03-07.
  2. "சொல்… பொருள்… தெளிவு - கீழடி: துலங்கும் தமிழ் வரலாறு!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-03-09.
  3. "Kondagai Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-07.
  4. சின்னதுரை, அருண் (2023-01-02). "Keezhadi excavation: விரைவில் திறக்கப்படும் கீழடி அகழ்வைப்பக கட்டடம்". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-07.
  5. "சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் ரூ.18.80 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம்: முதல்வர் திறந்தார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-03-07.

வெளி இணைப்புகள்

தொகு