குற்றால அருவிகள்

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள அருவிகள்
(குற்றாலம் அருவிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குற்றால அருவிகள் என்பன இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்ட குற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. இது தென்னகத்தின் "மருத்து நீருற்று" (ஆரோக்கிய நீருற்று) என்றழைக்கப்படுகிறது.

குற்றால அருவிகள்
குற்றால அருவிகள் is located in தமிழ் நாடு
குற்றால அருவிகள்
Map
அமைவிடம்குற்றாலம், தென்காசி மாவட்டம், தமிழ்நாடு
வகைSegmented Plunges
மொத்த உயரம்167 m (548 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கைஒன்பது
நீர்வழிசிற்றாறு

மேற்குத் தொடர்ச்சி மலை சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.

குற்றால அருவி நீர் பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

அருவிக்கரையில், குற்றாலநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று உள்ளது.

அமைவிடம்

தொகு

இது தென்காசியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் திருநெல்வேலியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

சுற்றுலா

தொகு

ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழும். இவ்வாறு சுற்றுலா மக்களைக் கவரும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன. முக்கிய அருவி எனப்படும் பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து

தொகு

தென்காசி ரயில் நிலையம் இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து குற்றாலத்திற்கு பேருந்து வசதி உண்டு. மதுரையிலிருந்து நிறைய பேருந்துகள் குற்றாலம் வரை செல்கிறது.

ஒன்பது அருவிகள்

தொகு

குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.

 
பேரருவி

1. பேரருவி[1] - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பதற்கு தடைக்காலம் அவ்வப்போது பிறப்பிக்கப்படும். தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
ஐந்தருவி

5. ஐந்தருவி [2]- [3] குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க இரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளன.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்) - இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அருவி செல்லும் பகுதி தோட்டக்கலைத்துறையினரால் இயற்கைப் பூங்காவாக உருவாக்கப்பட்டு பொதுமக்கள் சிறுவர் பொழுது போக்கு இடமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு தோட்டக்கலைத் துறையினரால் பூஞ்செடிகளும், மரக் கன்றுகளும் விற்கப்படுகின்றன.

7. புலியருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. சிறுவர்கள் குளிக்க புலி அருவி மிகவும் பாதுகாப்பானது.

 
பழைய குற்றாலம் அருவி

8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.

9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது. இது ஆற்றின் தொடக்கமே ஆனாலும் மக்களால் அருவி என்றே அழைக்கப்படுகிறது. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

10. கண்ணுப்புளி மெட்டு - இது செங்கோட்டை தாலுகா அலுவலகத்திலிருந்து மேற்கு திசையில் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள குண்டாறு நீர் தேக்கத்தின் மேலமைந்துள்ளது.

ஆய்வு

தொகு

1811 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியினர் ஒரு மருத்துவக்குழு அமைத்து இந்த அருவியின் பெருமைகளையும் மருத்துவச் சிறப்புகளையும் குறித்த அறிக்கையை வெளியிட்டது. திருக்குற்றால குற்றாலநாதர் திருக்கோயில் தலவரலாறு மூலம் தெரியவருகின்றது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை - ஐந்தருவி பேரருவியில் குளிக்க தடை". ThanthiTV.com. 2018-08-09. பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
  2. "குற்றாலத்தில் அருவி கொட்டுது ஐந்தருவி தண்ணீரில் சிக்கி காட்டுப்பன்றி பலி - தினமலர்". www.dinamalarnellai.com (in ஆங்கிலம்). Archived from the original on 2021-12-07. பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
  3. "இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
  4. திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வரலாறும் பண்பாடும்; முனைவர் சொ.சுப்பிரமணிய கவிராயர்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்; பக்கம் 43-53

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்றால_அருவிகள்&oldid=4150627" இலிருந்து மீள்விக்கப்பட்டது