கூட்டாண்மை

கூட்டாண்மை என்பது, தனியார் வணிகத்திலுள்ள குறைகளை நீக்க ஏற்பட்டது. இதனையே நாம், கூட்டு வணிக அமைப்பு என்கிறோம். தனியாள் வணிகத்தில் முதலீடும், மேலாண்மைத் திறனும் ஒரு வரம்புக்குட்பட்டது. தனி ஒரு நபரால் வியாபார நடவடிக்கைகள் அனைத்தையும், நேரடியாக கண்காணிக்க இயலாது. மேலும் வியாபார இடர்கள் அனைத்தையும், தனி நபரே ஏற்க வேண்டி உள்ளது. இச்சூழலில் மற்றவர்கள் துணையின் தேவை உணரப்படுகிறது. எனவே, அதிக நபர்கள் வியாபாரத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற நிலை உருவாகிறது. இவ்வாறு அதிக நபர்களை இணைத்துக் கொண்டு நடத்தப்பட்ட வியாபாரம், கூட்டாண்மை என்றும், கூட்டாண்மைத் தொழில் என்றும் அழைக்கப்படுகிறது.

கூட்டாண்மையின் வரைவிலக்கணம்தொகு

1932 ஆம் ஆண்டு, இந்திய கூட்டாண்மை சட்டத்தின் 4-வது பிரிவின்படி, கூட்டு வணிகம் என்பது எல்லோரும் சேர்ந்தோ, அல்லது எல்லோருக்குமாக ஒருவரோ, நடத்தும் தொழிலின் இலாபத்தைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டவர்களிடையே நிலவும் உறவு என்று கூறுகிறது.

கூட்டாண்மை பதிவுதொகு

இந்தியாவில் கூட்டாண்மை நிறுவன பதிவு கட்டாயமில்லை. இது கூட்டாளிகளின் விருப்பத்திற்குட்பட்டது. கூட்டாளிகள் விருப்பப்பட்டால், நிறுவன பதிவாளரிடம், அவர்கள் நிறுவனத்தை பதிவுசெய்து கொள்ளலாம் என இந்திய கூட்டாண்மைச் சட்டம் 1932 வகைசெய்கிறது.

கூட்டாண்மை ஒப்பாவணம்தொகு

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கிடையே எழும் உடன்பாட்டின் காரணமாக உருவாக்கப்படுவதுதான் கூட்டாண்மை ஆகும். இந்தியாவில் இந்த உடன்பாடு பேச்சளவிலோ அல்லது எழுத்து வடிவத்திலோ இருக்கலாம். கூட்டாண்மை உடன்பாடு எழுத்து வடிவத்தில் இருந்தால், பிற்காலத்தில் தவறான கருத்துக்களினால் ஏற்படும் தகராறுகளைத் தவிர்க்கலாம். கூட்டாண்மை பற்றிய விவரங்கள் மற்றும் நிபந்தனைகள் கூட்டாண்மை ஒப்பாவணத்தில் அடங்கியிருக்க வேண்டும்.

கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கம்தொகு

கீழ்கண்ட செய்திகள் ஒரு கூட்டாண்மை ஒப்பாவணத்தில் (agreement) வழக்கமாக காணப்படும்.

  • நிறுவனத்தின் பெயர்
  • ஒப்பந்த நாள் மற்றும் தொழில் புரியும் இடம்
  • அனைத்து கூட்டாளிகளின் பெயர் மற்றும் முகவரி
  • நிறுவனம் மேற்கொள்ள இருக்கம் தொழிலின் தன்மை
  • கூட்டாண்மையின் கால வரையறை
  • ஒவ்வொரு கூட்டாளியும் வழங்கிய முதலீட்டுத் தொகை
  • ஒவ்வொரு கூட்டாளியும் நிறுவனத்திலிருந்து எடுக்கும் தொகை
  • இலாப பகிர்வு விகிதம்
  • உழைக்கும் கூட்டாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியம்
  • முதல் மற்றும் எடுப்பு மீது வட்டி
  • கூட்டாளிகள் சேரும்போது அல்லது விலகும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை
  • நிறுவனத்தைக் கலைக்கும் முறையும், அக்கலைப்பின்போது கணக்குகளைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறையும்.
  • கணக்கு ஏடுகளை பராமரித்தல் மற்றும் தணிக்கை
  • கூட்டாளிகள் நிறுவனத்திற்குத் தந்திடும் கடன்கள் மற்றும் முன்பணம் ஆகியவற்றின் மீதான வட்டி.
  • கூட்டாளிகள் சேரும்பொழுது, விலகும்பொழுது, மற்றும் இறக்கும்பொழுதும் வாணிக நற்பெயரை மதிப்பிடும் முறை.
  • கூட்டாளிகளிடையே உண்டாகும் தகராறுகளை தீர்க்க நடுவர் தீர்ப்பிற்கு விடும் நடைமுறை.

கூட்டாண்மை ஒப்பாவணத்தில் கண்டுள்ள செய்திகளை அனைத்துக் கூட்டாளிகளின் இசைவுடன் தான் மாற்ற முடியும்.

உரிமைகளும், பொறுப்புகளும்தொகு

கூட்டாளிகளின் உரிமைகள்தொகு

  • ஒவ்வொரு கூட்டாளிக்கும், தொழிலை நடத்தவும் மேலாண்மையில் பங்கேற்கவும் உரிமை உண்டு.
  • ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிறுவன தொடர்பான பிரச்சனைகளுக்கு தங்கள் கருத்தினை தெரிவிக்க உரிமையுண்டு.
  • முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர், ஒவ்வொரு கூட்டாளிக்கும் தங்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக்கோர உரிமை உண்டு.
  • ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிருவன ஏடுகளையும், கணக்குகளையும் கண்காணித்து நகலெடுக்கும் உரிமை உண்டு.
  • ஒவ்வொரு கூட்டாளிக்கும் தொழிலுக்கு வழங்கிய கடன் மற்றும் முன்பனம் மீது 6 சதவிகிதம் வட்டி பெற உரிமை உண்டு.
  • ஒவ்வொரு கூட்டாளிக்கும் தொழிலுக்காக நிறுவன சொத்துக்களை பயன்படுத்த உரிமை உண்டு.
  • ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற உரிமை உண்டு.

கூட்டாளிகளின் பொறுப்புகள்தொகு

  • ஒவ்வொரு கூட்டாளியும், நிறுவனத்தின் கடன்களுக்கு கூட்டாகவும் தனித்தனியாகவும் வரையுறா பொறுப்பேற்கவேண்டும்.
  • கூட்டாண்மையிலிருந்து விலகும் ஒரு கூட்டாளி, தான் விலகும் முன் ஏற்பட்ட அனைத்துக் கடன்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
  • ஒரு உள்வரும் கூட்டாளி, தான் கூட்டாண்மையில் சேர்ந்தப்பிறகு ஏற்படும் கடன்களுக்கு மட்டும் பொறுப்பேற்கிறார்.
  • கூட்டாளி ஒருவர் மரணம் அடைய நேரிடின், தான் இறப்பதற்கு முன் ஏற்பட்ட கடன்களுக்கு மட்டும் அவரது சட்டப் பிரதிநிதிகள் பொறுப்பாகிறார்கள்.
  • கூட்டாளி ஒருவர் இளவராக இருந்தால்,அவர் நிறுவன கடன்களுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பாக மாட்டார். அவரது இலாப பங்கு மற்றும் நிறுவன சொத்துக்களில் அவரது பங்கு ஆகியவை மட்டும் நிறுவன கடன்களுக்கு பொறுப்பாகும்.
  • ஒவ்வொரு கூட்டாளியும் நிறுவனத்துக்கோ அல்லது பிற கூட்டாளிகளுக்கோ, தங்களுடைய கவனக்குறைவால் ஏற்படும் நட்டங்களை. ஈடுசெய்ய வேண்டும்.

நன்மைகளும், குறைபாடுகளும்தொகு

கூட்டாண்மையின் நன்மைகள்தொகு

  1. அமைத்தல் எளிது: கூட்டாண்மையை அமைப்பது எளிது. கூட்டுப்பாங்கு நிறுமத்தில் சட்ட முறைப்படி பல ஆவணங்கள் தயார் செய்வதுபோல் கூட்டாண்மையில் இல்லை. கூட்டாண்மையைத் துவங்க கூட்டாளிகளிடையே ஒரு உடன்பாடே போதுமானது.
  2. பதிவு கட்டாயமில்லை: கூட்டாண்மையை பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அது கூட்டாளிகளின் விருப்பத்திற்குட்பட்டது.
  3. அதிக நிதி ஆதாரங்கள்: ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் முதல் வழங்குவதால், தனிநபர் வணிகத்தைவிட அதிக முதல் திரட்ட வாய்ப்பு உள்ளது.
  4. கூடுதல் மேலாண்மை திறன்: கூட்டாளிகளின் திறமைக்கேற்ப பணிகள் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே பல்வேறு பணித்துறைகளையும் கூட்டாளிகள் மேற்பாற்வையிட்டு கட்டுப்படுத்த முடியும். கூட்டாளிகளின் திறமை, மற்றும் தொழிள் சார்ந்த அனுபவம் முதலியன வியாபார வளர்ச்சியை அதிகரித்து அதிக இலாபம் ஈட்ட வழி வருகிறது.
  5. அதிக நிதி தர மதிப்பீடு: தனியார் வணிகத்தைவிட கூட்டாண்மையில் கூட்டாளிகளின் வரையுறாப்பொருப்பினால் அதிக கடன் பெற வாய்ப்பு உள்ளது.
  6. தொழிலில் விரைந்த முடிவுகள் : கூட்டாண்மையில் பல கூட்டாளிகள் இருப்பதால், தொழில் பிரச்சனைகளுக்குக் கலந்து ஆலோசித்து நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.
  7. எளிதான கலைப்பு: கூட்டாளிகளின் நொடிப்பு நிலை, புத்தி நலமின்மை, இறப்பு முதலியவற்றால் கூட்டாண்மையை கலைக்க நேரிடும். சட்டப்படியான நடவடிக்கைகள் எதுவும் அவசியம் இல்லை.

கூட்டாண்மையின் குறைபாடுகள்தொகு

  1. வரையறாப் பொறுப்பு : கூட்டாளிகளின் பொறுப்பு வரையுறுக்கப்படாதது. மேலும் அது கூட்டுப்பொறுப்பாகவும் தனித்தனிப் பொறுப்பாகவும் திகழ்கிறது. ஒரு கூட்டாளி செய்யும் தவறுக்கு, மற்ற கூட்டாளிகளும் இழப்பை ஏற்க வேண்டியுள்ளது.
  2. குறைவான நிதி வளங்கள்: கூட்டாண்மையில் அதிக முதல் திரட்டும் வாய்ப்பு குறைவு. கூட்டாளிகளின் கடன் வழங்கும் திறனும் குறைவு. எனவே மிக அதிக அளவில் முதல் தேவைப்படும் தொழில்களுக்கு கூட்டாண்மை அமைப்பு பொருந்தாது.
  3. அவநம்பிக்கை: கூட்டாளிகளிடையே ஏற்படும் நம்பிக்கையின்மை கூட்டான்மைக் கலைப்பிற்கு ஒரு முக்கிய காரணம். கூட்டாளிகள் ஒற்றுமையாக இருப்பது கடினம். கூட்டாளிகளுக்கிடையே ஏற்படும் நம்பிக்கையின்மை, தவறான கருத்து, சச்சரவு போன்றவை கூட்டாண்மை கலைப்பிற்கு வழிவகுக்கும்.
  4. நீடித்த வாழ்வின்மை: கூட்டாண்மையில் ஒரு கூட்டாளியின் மரணம், விலகல், நொடிப்பு போன்றவை, கூட்டாண்மை அமைப்பை முடிவிற்கு கொண்டு வரும். நம்பிக்கையின்மை போன்றவை கூட, கூட்டாண்மையை முடிவிற்கு கொண்டு வந்து விடும்.

கூட்டாண்மை நிறுவனக் கலைப்புதொகு

கூட்டாண்மை நிறுவனக்கலைப்பு என்பது, கூட்டாளிகளுக்கிடையே நிலவும் உறவை முடிவுக்கு கொண்டு வருதலைக் குறிக்கும். இதனை இரு வகைகளாக பிரிக்கலாம்.

  1. நிறுவனக் கலைப்பு : இது கூட்டாளிகளுக்கிடையே நிலவும் உறவு முறிந்து விடுவதாகும். நிறுவனக் கலைப்பினால் கூட்டாண்மைத் தொழில் முடிவுக்கு வந்துவிடும். அதன் சொத்துக்கள் விற்கப்படும், கடனீந்தோர் கணக்குகள் முடிக்கப்படும். இதன் பிறகு, தொழில் தொடரந்து நடைபெறாது.
  2. கூட்டாண்மைக் கலைப்பு: இது கூட்டாளிகளின் உடன்பாடு முடிவுக்கு வருவதாகும். கூட்டாளியின் நொடிப்பு நிலை, விலகல், கூட்டாண்மைக் கால முடிவு முதலியவற்றால் கூட்டாண்மைக் கலைப்பு நேரிடும். ஆனால் தொழில், கூட்டாண்மைக் கலைத்த பிறகும், தொழில் தொடர்ந்து நடைபெறலாம்.

இக்கட்டுரைகளையும் காணவும்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டாண்மை&oldid=2756325" இருந்து மீள்விக்கப்பட்டது