கர்ட்லி அம்ப்ரோஸ்

(கேட்லி அம்ப்ரோஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கர்ட்லி அம்ப்ரோஸ் என்றழைக்கப்படும் சர் கர்ட்லி எல்கான் லின்வால் அம்ப்ரோஸ் (ஆங்கில மொழி: Sir Curtly Elconn Lynwall Ambrose பிறப்பு செப்டம்பர் 21, 1963) மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். வலதுகை வேகப்பந்தாளரான அம்ப்ரோஸ் அன்ரிகுவாவைச் சேர்ந்தவர். இவரும் கொட்னி வோல்ஷும் தொடக்கப் பந்தாளர்களாக இணைந்து விளையாடிய 49 ரெஸ்ற் போட்டிகளில் மொத்தமாக 421 இலக்குகளை வீழ்த்தியுள்ளனர். 98 ரெஸ்ற்களில் விளையாடிய அம்ப்ரோஸ் 405 இலக்குகளை 20.99 என்ற சராசரியுடன் வீழ்த்தினார். இந்தச் சராசரியை விடச் சிறந்த சராசரியை மேற்கிந்தியர்களான மல்கம் மார்ஷல் (20.94), ஜோல் கானர் (20.97) ஆகிய இருவரும் மட்டுமே கொண்டுள்ளனர்.[1][2]

ஆன்டிகுவாவின் ஸ்வெட்டஸில் பிறந்த அம்ப்ரோஸ் தனது இளமை பருவத்தில் கூடைப் பந்தாட்டத்தை விரும்பியதால், ஒப்பீட்டளவில் தாமதமான வயதில் துடுப்பாட்டத்திற்கு விளையாட வந்தார், ஆனால் விரைவில் ஒரு சிறந்த விரைவு வீச்சாளராக தனக்கான இடத்தினை ஏற்படுத்தினார். பிராந்திய மற்றும் தேசிய அணிகள் சார்பாக சிறப்பாக விளையாடி , 1988 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தனக்கான வாய்ப்பினை பயன்படுத்து சிறப்பாக விளையாடினார். அதிலிருந்து தான் ஓய்வு பெறும் வரை அணியில் நிலையான இடத்தினைத் தக்கவைத்துக் கொண்டார்.பல சந்தர்ப்பங்களில், கோர்ட்னி வால்ஷுடன் இணைந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கான போட்டிகளில் வெற்றிபெற இவரது பந்துவீச்சு காரணமாக இருந்தது. 1983 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஓர் ஓட்டத்தினை மட்டுமே விட்டுக் கொடுத்து 7 இழப்புகளைக் கைப்பற்றினார். வரலாற்றில் இது ஒரு சிறந்த பந்துவீச்சாகும்.1994 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 24 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இழப்புகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 46 ஓட்டங்களுக்கு அனைத்து இழப்புகளையும் இழந்தது. அனைத்துக் காலத்திற்குமான வெற்றிகரமான பந்துவீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

செப்டம்பர் 21, 1963 அன்று அன்டிகுவாவின் ஸ்வெட்டஸில் அம்ப்ரோஸ் பிறந்தார். ஏழு குழந்தைகளில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை கிராமத்தில் தச்சராகப் பணிபுரிந்தார். இவரது குடும்பத்திற்கும் துடுப்பாட்டத்திற்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை. ஆனால் இவரது தாயார் ஒரு துடுப்பாட்ட ரசிகர் ஆவார். மற்றும் ஆம்ப்ரோஸ் தனது இளமைக்காலத்தில் துடுப்பாட்டம் விளையாடினார். பள்ளிக் காலங்களில் முதன்மையாக மட்டையாட்டத்தில் கவன் செலுத்தினார். இவர் கல்வியில், குறிப்பாக கணிதம் மற்றும் பிரஞ்சு மொழிகளில் சிறப்பாக கற்றார். மேலும் 17 வயதில் பள்ளியில் இருந்து வெளியேறியபின் ஒரு பயிற்சி தச்சராக ஆனார். இவர் அமெரிக்காவுக்கு குடியேற வேண்டும் என நினைத்தார். அந்த நேரத்தில், இவருக்கு பிடித்த விளையாட்டு கூடைப்பந்து ஆகும். இவர் எப்போதாவது துடுப்பாட்டப் போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார். ஆம்ப்ரோஸ் தனது பதின்ம வயதினரை அடையும் வரை அதிக உயரமாக இருக்கவில்லை. இவரது உயரம் 6 அடிகள் 7 அங்குலங்கள் (2.01 m) ஆகும். இந்த நேரத்தில், இவரது தாயார் துடுப்பாட்டத்தில் அதிக ஈடுபாடு கொள்ள இவரை ஊக்குவித்தார். சாப்ட்பால் துடுப்பாட்டப் போட்டியில் விரைவு வீச்சாளராக வெற்றி பெற்றது, ஆம்ப்ரோஸை தனது 20 வயதில் சில சங்கத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் தூண்டியது. இவர் பயிற்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தார் மற்றும் சென் ஜோன்ஸ் துடுப்பாட்ட அணிக்கு விளையாடத் தேர்வானார். லீவர்ட் தீவுகள் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் செயின்ட் கிட்ஸுக்கு எதிராக ஆன்டிகுவா துடுப்பாட்ட அணிக்காக 67 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 7 இழப்புகளைக் கைப்பற்றினார். இவர் 1985-86ல் லீவர்ட் தீவுகளுக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார் . அந்தப் போட்டியில் இவர் நான்கு இழப்புகளைக் கைப்பற்றினார். ஆனால் அடுத்த ஆண்டு தனது இடத்தைத் தக்கவைக்கத் தவறிவிட்டார்.

சான்றுகள்

தொகு
  1. Selvey, Mike (30 August 2000). "Two-metre terminators final act: Mike Selvey salutes the demolition man, Curtly Ambrose". The Guardian (London): p. 26. (ஆங்கில மொழியில்)
  2. "Statsguru: Test matches: Bowling records". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012. (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ட்லி_அம்ப்ரோஸ்&oldid=3990795" இலிருந்து மீள்விக்கப்பட்டது