கொண்டப்பள்ளி கோட்டீசுவரம்மா
கொண்டப்பள்ளி கோட்டீசுவரம்மா ( Kondapalli Koteswaramma ) (ஆகஸ்ட் 5, 1918 - செப்டம்பர் 19, 2018)[1] ஓர் இந்திய பொதுவுடைமைத் தலைவரும், பெண்ணியவாதியும், புரட்சிவாதியும், எழுத்தாளருமாவார். இவர் 1918இல் ஆந்திராவின் பாமர்ரு என்ற ஊரில் பிறந்தார்.[2] இவர் தனது வாழ்நாள் முழுவதும் பொதுவுடைமை, நக்சல்பாரி, பெண்ணியம், சுதந்திரம், சீர்திருத்த இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.
கொண்டப்பள்ளி கோட்டீசுவரம்மா | |
---|---|
விசாகப்பட்டினம் வீட்டில் கோட்டீசுவரம்மா | |
பிறப்பு | பாமர்ரு, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா | ஆகத்து 5, 1918
இறப்பு | செப்டம்பர் 19, 2018 | (அகவை 100)
தேசியம் | இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 1930–2018 |
அறியப்படுவது | பிரபல பொதுவுடைமைவாதி |
வாழ்க்கை
தொகுஇவரது நான்கு வயதில் தனது மாமாவுடன் திருமணம் நடந்தது. இரண்டு வருடங்களுக்குள் இவரது கணவர் இறந்துவிட்டார். பின்னர் இவர் இசையில் பயிற்சி பெற்றுக்கொண்டே தனது சொந்த ஊரிலிருந்து பள்ளிப் படிப்பையும் மேற்கொண்டார். 10 வயதில், பல்வேறு கூட்டங்களிலும் சபைகளிலும் தேசபக்தி பாடல்களைப் பாடி சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். தனது 18 வயதில் கொண்டப்பள்ளி சீதாராமையாவை மறுமணம் செய்து கொண்டார். அந்த கால கட்டத்தில், விதவை மறுமணத்தை சமூகம் ஏற்றுக்கொள்ளாததால் இவர் பல சமூகத் தடைகளை எதிர்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, இவர் தனது கணவருடன் ஜோனபாடுவில் சில ஆண்டுகள் இருந்தார். இந்த நேரத்தில், இவர் குடிவாடாவில் பொதுவுடைமைக் கட்சியில் பணியாற்றினார். விசயவாடா சென்ற பிறகு, இவர் பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டார். மேலும், பெண்கள் சங்கத்திலும் பணியாற்றினார்.[3]
இவர் தனது கணவர், புச்சப்பள்ளி சுந்தரய்யா போன்றவர்களுடன் இந்திய பொதுவுடைமைக் கட்சிக்காக தீவிரமாக பணியாற்றினார். தெலுங்கானா கிளர்ச்சியிலும் தீவிரமாக பங்களித்தார். இவர் தனது குடும்பத்திடமிருந்து விலகி தலைமறைவாக (பண்டார், ஏலூர், பூரி, ராய்ச்சூர்) சில ஆண்டுகள் கட்சிக்காக பணியாற்றினார். கலகத்திற்குப் பிறகு, பொதுவுடைமைக் கட்சி இரண்டாகப் பிரிந்தது. இவரது கணவரும் இவரை பிரிந்தார். தனது 35 வயதில், மெட்ரிகுலேசன் படிக்க ஐதராபாத்து வந்தார். அங்கு கதைகளை எழுதுவதன் மூலமும் வானொலியில் நிகழ்ச்சி வழங்குவதிலிருந்தும் சிறிய தொகையை சம்பாத்தார். வருமானம் குறைவாக இருந்தாலும், இவர் ஒவ்வொரு மாதமும் கட்சி (சிபிஐ மற்றும் சிபிஐ (எம்)) நிதிகளுக்கு தலா பத்து ரூபாய் அனுப்புவார். மெட்ரிகுலேசன் முடித்த பிறகு, காக்கிநாடாவில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதித்தலைவியாகச் சேர்ந்தார். காக்கிநாடாவில் இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கத் தொடங்கினார். பின்னர், மாநிலம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் பணிபுரிந்தார்.
குடும்பம்
தொகுஇவருக்கு கருணா என்ற ஒரு மகளும், சந்திரசேகர் என்ற ஒரு மகனும் இருந்தனர். கருணா மருத்துவராக இருந்தார். சந்திரசேகர் வாரங்கல் பிராந்திய பொறியியல் கல்லூரியில் படித்தார். இருவரும் எதிர்பாராத சூழ்நிலையில் இறந்தனர். இந்த சமயத்தில், இவரது கணவர் "இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிச-லெனினிச) மக்கள் போர் " என்ற கட்சியை நிறுவி அதில் தீவிரமாக பணியாற்றினார். ஆனால் அவர் பின்னர் தனது சொந்த கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆல்சைமர் நோயால் அவதிப்பட்டு, 12 ஏப்ரல் 2002 அன்று விசயவாடாவில் உள்ள தனது பேத்தி வீட்டில் தனது 87 வயதில் இறந்தார். கோடீசுவரம்மா சில வருடங்கள் விஜயவாடாவில் வசித்து வந்தார். பின்னர் ஐதராபாத்தில் உள்ள சந்திர ராஜேஸ்வர ராவ் முதியோர் இல்லத்திற்கு மாற்றப்பட்டார்.
இலக்கியப் படைப்புகள்
தொகுகோடீசுவரம்மா பல்வேறு புத்தகங்களையும், கட்டுரைகளையும், பாடல்களையும் எழுதியுள்ளார். இதில் அம்மா செப்பின ஆய்டு கேயலு (1972), அஷ்ரு சமீக்சணம் (1991), சங்கமித்ரா கதலு (1991) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவரது சுயசரிதை நிரஞ்சனா வாரதி (2012) என்ற பயரில் ஐதராபாத் புத்தக அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது. இது ஆங்கிலத்தில் "தி ஷார்ப் நைஃப் ஆஃப் மெமரி"[4] என மொழிபயர்க்கப்பட்டது. மேலும், பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இறப்பு
தொகுதனது பேத்தியுடன் விசாகப்பட்டினத்தில் வசித்து வந்த இவர் சமீபத்தில், செப்டம்பர் 19, 2018 அன்று தனது 100 வயதில் மறைந்தார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Revolutionary Communist leader Kondapalli Koteswaramma passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 19 September 2018.
- ↑ "తొలితరం కమ్యూనిస్ట్ నేత, కొండపల్లి సీతారామయ్య సతీమణి కన్నుమూత". telugu.samayam.com (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 17 September 2018.
- ↑ "Woman extraordinaire".
- ↑ Sowmya, V.B. "The sharp knife of memory, a memoir". UCP. Archived from the original on 2018-09-20.
- ↑ "Koteswaramma's life was like her writings, honest and balanced".
Nirjana Vaaradhi (lit. Deserted Bridge), Autobiographical memoir of Kondapalli Koteswaramma.