கொழுக்கட்டை
கொழுக்கட்டை என்பது இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் உண்ணப்படும் ஒரு இனிப்பு வகை. பச்சரிசி மாவு மற்றும் கரும்புச் சர்க்கரை வெல்லத்தினால் இது செய்யப்படுகிறது. அரைத்து வறுத்த பச்சரிசி மாவை ஆவியில் வேகவைத்து வட்டமாகத் தட்டி, நடுவே வெல்லத்தூள் வைத்து மூடிய பின்னர் மறுபடியும் ஆவி கட்டி இறக்கி இது செய்யப்படுகிறது.[1]
கொழுக்கட்டை | |
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா |
முக்கிய சேர்பொருட்கள் | வெல்லம், துருவிய தேங்காய் |
கொழுக்கட்டை வகைகள்
தொகுஇந்தக் கொழுக்கட்டையில் பல வகைகள் இருக்கின்றன. பால் கொழுக்கட்டை, பூரணக் கொழுக்கட்டை என்பது போன்ற கொழுக்கட்டையுடன் சேர்க்கக் கூடிய பொருளுடன் தொடர்புடைய பல வகை கொழுக்கட்டைகள் இருக்கின்றன. இலங்கையின்
- யாழ்ப்பாணத்தில் உள்ளே சேர்வை இல்லாத கொழுக்கட்டை செய்கின்றனர்.
- சேலம் மாவட்டத்தில் சேர்வையுடன் இருப்பதையும் கொழுக்கட்டை என்றே சொல்கின்றனர்.
மோதகம்
தொகுஇலங்கையில் உண்ணப்படும் கொழுக்கட்டையில் பயறு முக்கிய பங்கு வகிக்கின்றது. வறுத்த அரிசிமா அல்லது அவித்த கோதுமைமாவை சுடுநீரில் கிண்டி பதமாகக் குழைத்தெடுத்து சிறு சிறு வட்டமாகத் தட்டி அதனுள்ளே வறுத்து அவித்த பயறு, தேங்காய்ப்பூ, சர்க்கரை ஆகியவை கலந்த கலவையை இட்டு மூடி ஆவியில் அவிக்கப்படும் இந்த உணவு உருண்டையாகச் செய்யப்படும் போது சமஸ்கிருத மொழியில் மோதகம் எனப்படுகிறது.
பல்லு கொழுக்கட்டை
தொகுஒருவிதமான நீள் வடிவில் செய்யப்படும் போது இது கொழுக்கட்டை எனப்படுகிறது. கொழுக்கட்டையினுள் உள்ளீட்டை வைத்து மூடும் போது அதன் நுனியை விரல்களால் பல்வடிவில் நெளித்து நெளித்து அமர்த்தி விடுவதால் அது பல்லு கொழுக்கட்டை என்றும் சொல்லப்படுகிறது.
பிடிகொழுக்கட்டை
தொகுஇதே மாவையும் சர்க்கரை, பயறு, தேங்காய்ப்பூ கலந்த உள்ளீட்டையும் ஒன்றாகப் பிசைந்து ஒரு கையால் அமர்த்திப் பிடித்து ஆவியில் அவித்தெடுப்பது பிடிகொழுக்கட்டை எனப்படும்.
பால் கொழுக்கட்டை
தொகுநீள வடிவிலும் உருண்டையாகவும் உருட்டி வெல்லம், பால் அல்லது தேங்காய்ப் பால் கலந்த கலவையில் வேகவைத்துச் செய்யப்படும் ஒரு வகையான கொழுக்கட்டையாகும். இதைத் தென் மாவட்டங்களில் காலை உணவாகத் தயாரிப்பது உண்டு.
சடங்கில் கொழுக்கட்டை
தொகுசைவ சமயத்தவர்களின் முக்கிய நிகழ்வுகளில் பழம், பாக்கு, வெற்றிலை போல கொழுக்கட்டைக்கும் ஒரு தனியிடம் இருக்கிறது. திருமணம், சாமத்தியச்சடங்கு, விரதம், கோயில் திருவிழா போன்ற பல சமயநிகழ்வுகளிலும் சம்பிரதாய நிகழ்வுகளிலும் கொழுக்கட்டை முக்கிய இடத்தை வகிக்கின்றது. குழந்தைகளுக்கு முதல் பல் முளைத்ததும் பல்லுக்கொழுக்கட்டை என்ற பெயரில் கொழுக்கட்டை அவித்து, அவர்களின் தலையில் கொட்டி கொண்டாடுவார்கள்.
வழிபாட்டில் கொழுக்கட்டை
தொகுஇந்து சமய வழிபாடுகளில் கொழுக்கட்டை சிறப்பு உணவாகப் பூசைக்குப் பயன்படுத்தப்பட்டு அதன் பிறகு அனைவருக்கும் உண்ண கொடுக்கப்படுகிறது.
விநாயகர் வழிபாடு
தொகுஇந்து சமயக் கடவுள்களில் ஒருவரான விநாயகர் வழிபாட்டின் போது கொழுக்கட்டை சிறப்பு உணவாக (நைவேத்தியமாக) பூசையில் வைக்கப்படுகிறது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஔவையார் வழிபாடு
தொகுதமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தை , ஆடி மாதங்களில் பெண்கள் மட்டும் சேர்ந்து ஏதாவது ஒரு வீட்டில் கொண்டாடும் ஔவையார் வழிபாட்டிற்காக உப்பில்லாமல் நீள வடிவில் செய்யப்படும் கொழுக்கட்டை, “அவ்வையார் கொழுக்கட்டை” எனப்படுகிறது. இக்கொழுக்கட்டையை ஆண்கள் தின்பதற்கோ, பார்ப்பதற்கோ பெண்கள் அனுமதிப்பதில்லை.
வெளி இணைப்புகள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "கொழுக்கட்டை செய்முறை". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2015.