கோபிநாத் பர்தலை

இந்திய விடுதலைப் போராட்டத் அசாமியர்
(கோபிநாத் போர்டோலாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோபிநாத் பர்தலை (Gopinath Bordoloi, 6 சூன் 1890–5 ஆகத்து 1950) இந்திய மாநிலமான அசாமின் முதலாவது முதலமைச்சராகப் பணியாற்றியவரும், இந்திய விடுதலை இயக்கத்தில் பெரும் பங்காற்றியவரும் ஆவார். அரசியல் கோட்பாடாக காந்தியின் வன்முறை தவிர்த்த வழியை ஏற்றுக்கொண்டவர். அசாம் மாநிலத்திற்கும் மக்களுக்கும் இவராற்றியப் பணியைப் பாராட்டி இவர் முதலமைச்சராக இருந்தபோது அசாமின் ஆளுநராக இருந்த ஜயராம் தாஸ் தௌலத்ராம் இவருக்கு "லோகபிரியா" என்றப் பட்டத்தை வழங்கினார். 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா இவருக்கு மரணத்திற்குப் பின்பு வழங்கப்பட்டது.

இளமையும் கல்வியும்

தொகு

கோபிநாத் ராகாவில் 1890ஆம் ஆண்டின் சூன் 6 அன்று புத்தேசுவர் பர்தலைக்கும் பிராணேசுவரி பர்தலைக்கும் மகனாகப் பிறந்தார். பன்னிரெண்டாவது அகவையிலேயே தனது தாயை இழந்தார். 1907ஆம் ஆண்டில் மெட்றிக்கில் தேர்வானபிறகு காட்டன் கல்லூரியில் சேர்ந்தார். தனது இடைநிலை பட்டப்படிப்பை 1909ஆம் ஆண்டு முடித்து கொல்கத்தாவிலுள்ள இசுகாட்டிஷ் சர்ச் கல்லூரியில் பட்டப்படிப்பை 1911இல் முடித்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து 1914ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்று சட்டம் படிக்கத் தொடங்கினார். ஆனால் மூன்றாண்டுகளிலேயே இறுதித் தேர்வு எழுதாது குவஹாத்தி திரும்பினார். சோனாராம் உயர்நிலைப்பள்ளியில் தற்காலிக தலைமையாசிரியராகப் பணியாற்றியபடியே தமது சட்ட படிப்பை 1917ஆம் ஆண்டு முடித்தார்; குவஹாத்தியில் வழக்கறிஞராகப் பணி புரியத் தொடங்கினார்.

அரசியல் வாழ்வு

தொகு

1922 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் அங்கமாக அசாம் காங்கிரசு உருவானபோது இவரது அரசியல் வாழ்வு துவங்கியது. அந்த ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று ஓராண்டு சிறை சென்றார். வெளிவந்தபிறகு தமது வழக்கறிஞர் தொழிலுக்குத் திரும்பினார்.

1936 ஆம் ஆண்டு பிராந்திய சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரசு பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்தபோதும் அமைச்சர்களுக்கு அதிகாரம் வழங்கப்படாத நிலையில் எதிர்கட்சியாகவே செயலாற்ற முடிவு எடுத்தது. போர்டோலாய் எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுபான்மை கட்சிகள் அமைத்த அரசு கவிழ்ந்தநிலையில் இவர் செப்டம்பர் 21, 1938ஆம் ஆண்டில் முதல்வராக பொறுப்பேற்றார்.[1] மகாத்மா காந்தியின் ஆணைப்படி 1940ஆம் ஆண்டில் தமது பதவியை துறந்தார். 1946ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்தியப் பிரிவினைக்கு முன்பாக நடந்த உரையாடல்களில் அசாமை வங்காளத்துடன் இணைத்து கருதப்படுவதை காங்கிரசுக்கு உள்ளேயும் பிரித்தானிய அரசினரிடத்தும் இவர் எதிர்த்தமையாலேயே பின்னாளில் அசாம் கிழக்கு வங்காளத்துடன் பாக்கித்தானின் பகுதியாக இணைக்கப்படாமல் இருந்தது எனச் சில அரசியலாளர்கள் கருதுகின்றனர்.[2]

1999ஆம் ஆண்டு இவருக்கு மரணத்துக்குப் பிறகான பாரத ரத்னா வழங்கப்பட்டது.[3]

குவஹாத்தியில் உள்ள விமான நிலையத்துக்கு இவர் நினைவாக லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Kuri Shatikar Kurijan Bishista Asamiya,Editors-Sharma, Dr. Pranati and Sharma, Anil. Journal Emporium, 1999
  2. Kuri Shatikar Kurijan Bishista Asamiya, Editors-Sharma, Dr. Pranati and Sharma, Anil. Journal Emporium, 1999
  3. "Padma Awards Directory (1954-2007)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 7 December 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிநாத்_பர்தலை&oldid=3993101" இலிருந்து மீள்விக்கப்பட்டது