கோபி மோகன் தாகூர்

ராஜா கோபி மோகன் தாகூர் (Raja Gopi Mohan Tagore) (1760-1819) இவர் பாதுரியகட்டா தாகூர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் வங்காளப் பகுதியைச் சேர்ந்த ஜமீந்தாரும் மற்றும் அறப்பணிகளில் ஈடுப்பட்டவருமாவார்.

பணிகள் தொகு

தர்பநாராயண தாகூரின் மகனான இவர், தாகூர் குடும்பத்தின் பாதுரியகட்டா கிளையை நிறுவியவராவார். இவருக்கு சமசுகிருதம், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், பாரசீகம் மற்றும் உருது போன்ற மொழிகள் தெரிந்திருந்தன. [1] கோபி மோகன் தாகூர் தனது செல்வத்திற்காக நன்கு அறியப்பட்டவர். மேலும் 1812 ஆம் ஆண்டில், காளிகாட்டில் உள்ள காளிக் கோயிலுக்கு மிகப் பெரிய தங்கத்தைப் பரிசாக வழங்கியவராக இருந்திருக்கலாம். [2]

நாட்டில் மேற்கத்திய கல்வியைத் தொடங்கிய கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார். [3] பிற்காலத்தில் இந்துக் கல்லூரி என்று அழைக்கப்பட்ட மாநிலக் கல்லூரியை நிறுவியதற்காக இவர் அளித்த நன்கொடை இரண்டாவது பெரியதாகும், இது வர்தமான் மகாராஜாவுக்கு அடுத்தபடியாக இருந்தது. இதன் நினைவாக கல்லூரியின் நூலக மண்டபத்தில் பளிங்கினால் ஆன கல்வெட்டு ஒன்று அமைக்கப்பட்டது. பின்னர் இந்துக் கல்லூரியின் ஆளுநராக நியமிக்கப்பட்டு தகுதியான மாணவர்களுக்கு இவரது பெயரில் உதவித்தொகை வழங்கினார்.

கோபி மோகன் துர்கா பூசையை ஆடம்பரமாக கொண்டாடினார். ஆர்தர் வெல்லஸ்லி உட்பட பல ஐரோப்பியர்கள் இவர் வழங்கிய விழா மற்றும் இரவு விருந்தில் கலந்து கொண்டனர். [1]

அறப்பணிகள் தொகு

கலை, இசை, சமசுகிருத கற்றல் மற்றும் தடகள விளையாட்டு ஆகியவற்றின் சிறந்த புரவலராக இருந்த இவர் இந்த நோக்கத்திற்காக தாராளமாக நன்கொடை அளித்தார். [1] பிரபல மல்யுத்த வீரர் இராதா கௌலா இவரிடம் பணிபுரிந்துள்ளார். இவரிடம் பணிபுரிந்தவர்களில் பிரபல வங்காள பாடலாசிரியர் இலக்கி காந்தா மற்றும் அக்காலத்தின் பிரபல பாடகர் காளி மிர்சா ஆகியோரும் அடங்குவர்.

இவர் சோவபசார் இராஜா இராஜ் கிருஷ்ண தேவின் நெருங்கிய நண்பராக இருந்தார். [1] இவர் ஒரு முறை ஜெசூரைச் சேர்ந்த இராஜா பரோடா காந்தா ராயின் தந்தைக்கு உதவினார்.

கலைப்பணி தொகு

1803ஆம் ஆண்டில் கொல்கத்தாவுக்கு வருகை தந்த பிரிட்டிசுக் கலைஞர் ஜார்ஜ் சின்னரியின் உதவியுடன் இவர் தாகூர் குடும்பத்தின் கலைத் தொகுப்பைத் தொடங்கினார். [4] [1] பின்னர் இது இவரது பேரன் பிரத்யோத் குமார்தாகூரால் விரிவாக்கப்பட்டது. 1802 இல் இவர் சியாம்நகரில் உள்ள சியாம்நகர் முலாசோர் காளிக் கோயிலை நிறுவினார்.

குடும்பம் தொகு

இவருக்கு சூர்ஜி குமார், சந்திர குமார், நந்தகுமார், காளி குமார், ஹர குமார் மற்றும் பிரசன்ன குமார் எ ஆறு மகன்களும் மற்றும் ஒரு மகளும் இருந்தனர். [1] இதில் ஹர குமார் தாகூர் மற்றும் பிரசன்ன குமார் தாகூர் ஆகிய இருவரும் தாகூர் குடும்பத்தை முன்னோக்கி மரபில் செலுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 The Modern History of the Indian Chiefs, Rajas, Zamindars, &c. J.N. Ghose. 1881. பக். 163. https://archive.org/details/modernhistoryin00unkngoog. பார்த்த நாள்: 3 April 2017. 
  2. Dutta, Kalyani, "Kalighat", in "Calcutta, the Living City", Vol I, edited by Sukanta Chaudhuri, p 25, Oxford University Press, ISBN 0-19-563696-1.
  3. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, p 141
  4. Prodyot Coomar Tagore, Catalogue of the Pictures and Sculptures in the Collection of the Maharajah Tagore, Thacker, Spink Calcutta, 1905.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபி_மோகன்_தாகூர்&oldid=2991529" இலிருந்து மீள்விக்கப்பட்டது