சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்

(கோமதி அம்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாடு மாநிலம், தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், சங்கரன் கோவிலில் சங்கர நாராயணர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை பொ.ஊ. 1022 (கோவிலமைப்பு). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோமதி அம்மன் கோவிலின் முதன்மைப் பெண் தெய்வம். ஆதிசக்தியான பார்வதியின் அம்சமாக உறையும் அம்மன் இவர். வன்மீகநாதரின் துணைவி. இக்கோயிலில் சிவன் மற்றும் திருமால் பாதிப்பாதி உருவமாக காட்சி அளிப்பது சிறப்பாகும்.

சங்கரநாராயணர் கோயில்
சங்கரநாராயணர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தென்காசி
அமைவு:சங்கரன்கோவில்
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:ஆடித் தவசு

மரபு வழி வரலாறு

தொகு

இந்துப் புராணங்களின்படி, இந்த அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவனும்,திருமாலும் சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார்கள். கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள்

பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும்.

ஆடித் தபசு

தொகு

ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்குக் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இங்கு அமைந்துள்ள சிரீ சக்கர பீடத்தில், நோயாளிகள், தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள், மனநலமற்றவர்கள் ஆகியோரை அமரவைத்தால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு வழங்கப்படும் நைவேத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது. கோவிலுக்கு வருவோர், பாம்பு, தேள் ஆகியவற்றின் சிறு படங்களை உண்டியலில் செலுத்துவதன் மூலம் நலம் பெறுவர் என நம்பப்படுகிறது.

பாம்பு புற்று

தொகு

கோவிலின் உள்ளே அம்மன் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் உள்ள பாம்பு புற்று வன்மீகம் என்று அழைக்கப்படுகிறது. இப்புற்றில் இருந்து எடுக்கப்படும் மணலை உடலில் தடவிக் கொண்டால் நோய்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "ஊரும் பேரும் - ரா. பி. சேதுப்பிள்ளை". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 27, 2012.

வெளி இணைப்புகள்

தொகு