தொல்லியல் அருங்காட்சியகம், கோயமுத்தூர்

(கோயம்புத்தூர் அரசு அருங்காட்சியகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோயம்புத்தூர் அரசு அருங்காட்சியகம் (GOVERNMENT MUSEUM, COIMBATORE) தமிழ்நாட்டில் அருங்காட்சியகத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இருபது மாவட்ட அருங்காட்சியகங்களில் ஒன்று. இது 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்காட்சியகத்தின் வளாகம் தற்பொழுது (2013) கோயம்புத்தூரில் காட்டூர் பகுதியில் வ. உ. சி. பூங்காவிற்கு எதிரில் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் தமிழக தொல்லியல் துறையினரால் 1980களில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் கி.மு. 100களில் ரோமானியர்களால் பயன்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த ரோமானியக் காசுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானையோடுகள், தமிழ் வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் மற்றும் கல்வெட்டுக்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல இடங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களுடன், மானுடவியல், நாணயவியல், கலை, வரலாற்றுக்கு முந்தைய காலம், நிலவியல், தாவரவியல், உயிரியல் ஆகிய வகைப்பாட்டில் பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் அரசு அருங்காட்சியகம்

காட்சிப் பொருட்கள்

தொகு

இங்குள்ள காட்சியகத்தில் சிலைகள், பிணப்புதையலுடன் கண்டெடுக்கப்பட்ட பானைகள், கொங்கர் கல்வெட்டுக்கள், நடுகற்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் கோயம்புத்தூர் மாவட்டப் பகுதிகளான அவினாசி, காளப்பட்டி, வெள்ளலூர் போன்ற பகுதிகளில் கிடைத்த தொல்லியல் பொருட்களும் பழங்குடியனரான இருளர், மலசர், காடர் ஆகியோரின் பயன்பாட்டுப் பொருட்களும், பண்டைய நாணயங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தொல் சிற்பங்கள்

தொகு

இங்கு பல பழமையான சிறிதும் பெரிதுமான சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:

  • கோவைக்கருகிலுள்ள வெள்ளலூரில் அகழ்தெடுக்கப்பட்ட நாயக்க அரசர், அரசி சிலைகள் (கிபி.16 ஆம் நூற்றாண்டு).
  • அம்மன் சிலை (கிபி. 18 ஆம் நூற்றாண்டு)
  • அவினாசிக்கருகே கிடைத்த சுப்பிரமணியர், வள்ளி, தெய்வயானை சிலைகள் (கிபி. 12 ஆம் நூற்றாண்டு)

முதுமக்கள் தாழி

தொகு

இங்கு வைக்கப்பட்டுள்ள பெருங்கற்கால (2000 ஆண்டுகளுக்கு முந்தைய) முதுமக்கள் தாழிகளும் அவற்றில் பயன்படுத்தப்பட்ட பாண்டங்களும் காளப்பட்டிக்கருகே கண்டெடுக்கப்பட்டவையென இக்காட்சிகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தொல் கருவிகள்

தொகு

வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலக் கருவிகள், இடைக்கற்கால (கிமு 15000-கிமு 10000) நுண்கருவிகளும் புதைபடிவ எலும்பு எச்சங்களும், புதுக்கற்காலக் (கிமு 10000-கிமு 2000)) கருவிகள் என மூன்று காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்டவற்றை இங்கு காணலாம்.

பழங்குடியினர்

தொகு

பழங்குடியினரான காடர், இருளர், மலசர் ஆகியோரது வாழ்வுமுறையைக் காட்டும் அவர்களது வசிப்பிட அமைப்புகள், பயன்படுத்திய பொருட்கள், இசைக்கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வழிபாட்டுப் பொருட்கள்

தொகு

பழங்கால வழிபாட்டுப் பொருட்களும், இசுலாமியர் பயன்படுத்திய வழிபாட்டுப் பொருட்களும் இங்குள்ளன.

நாணயங்கள்

தொகு

பண்டைய ரோமானியர் நாணயங்கள், கொங்கு சேரர், கொங்கு சோழர், கொங்கு பாண்டியர் மற்றும் கொங்கு பாண்டியர் கால நாணயங்கள், புதுக்கோட்டை அரசர் காலநாணயங்கள், மைசூர் சுல்தான் மற்றும் மதுரை சுல்தான் கால நாணயங்கள், திருவிதாங்கூர் சக்கரக்காசு, ஆங்கிலோ இந்தியக் காசுகள், மைசூர் உடையார் நாணயம், பிரித்தானிய இந்திய நாணயங்கள், இந்தியக் குடியரசின் நாணயங்கள், உலக நாடுகளின் நாணயங்கள் ஆகியவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படத்தொகுப்பு

தொகு

ஆதாரங்கள்

தொகு