கோலாட்டம் (கருநாடகம்)
கோலாட்டா (Kolata)(கோலாட்டம்) என்பது தென்னிந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கருநாடக மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனம் ஆகும். இந்த குச்சி நடனம் ஒரு வகை வீர நடன வகையாகும்.
விளக்கம்
தொகுகோலாட்டா நடனம் இதன் வட இந்திய வடிவமான தாண்டியா ராஸிலிருந்து சற்று வித்தியாசமானது. இந்த நடனத்தை இரண்டு முறைகளில் ஆடுகின்றனர். முதல் நடன முறையானது வண்ணக் குச்சிகளைக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது. பொதுவாக ஆண்களும் பெண்களும் இணைந்து இந்த நடனத்தில் ஈடுபடுவார்கள். இது ஒப்பீட்டளவில் எளிமையான கோலாட்டா நடனமாகும். இரண்டாவது நடன முறையானது, கிராமிய பாடல்களுக்கு ஏற்ப ஆண்கள் மட்டுமே நடனமாடுவார்கள். இந்நடனத்தில் தடிமனான குச்சிகளைக் கொண்டு நடனமாடுவதால் இந்த நடனத்தினை நீண்ட நேரம் ஆடுவது கடினமானது.[1]
'செலுவாயா செலுவோ தனி தண்டனா', 'கொலு கொலன்னா கொலு கொலே' போன்றவை கர்நாடகாவில் எளிமையான கோலாட்ட நடனத்திற்கான மிகவும் பிரபலமான பாடல்கள் ஆகும். ஆண்களின் கோலாட்டம் ஆடும் போது பாடப்படும் பாடல்கள் 'இந்திரா காந்தி கொண்டவண்ணா', 'பெலிசலகொண்டா கரே பேஜா' போன்றவை.
உலகெங்கிலும் உகாதி மற்றும் கன்னட ராஜ்யோத்சவா கொண்டாட்டங்களுக்காகக் கன்னடக் கூத்துக்களில் செழுவய்யா செலுவோ கோலாட்டம் நடத்தப்படுகிறது.
நடன நடை
தொகுகையில் இரண்டு குச்சிகளுடன், ஒவ்வொரு நடனக் கலைஞரும் வெவ்வேறு தோரணைகள் மற்றும் தாளங்களில் குச்சிகளை அடிப்பார்கள். நடன பாணியிலும், பாடலிலும் கணிசமான வேறுபாடுகள் உள்ளன. மைசூர், மாண்டியா மற்றும் ஹாசன் மாவட்டங்களின் வொக்கலிகா, நாயக்கர் மற்றும் கொல்லா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோலாட்டத்தில் சிறந்து விளங்கும் சமூகத்தினர் ஆவார். மேலும் வட கர்நாடகாவின் ஹல்லக்கி கவுடா சமூகமும், குடகின் கொடவா சமூகமும் கோலாட்ட நடனத்திற்குப் பிரபலமானவர்களாவர்.[2]