சக்தி அ. பாலஐயா

சக்தி அ. பாலையா (சூலை 26, 1925 - ஆகத்து 2, 2013) இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த மூத்த கவிஞரும், எழுத்தாளரும், ஓவியரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். சக்தி பாலையா, தனிவழிக் கவிராயர், மலையரசன், லக்ஷ்மி ஆகிய பெயர்களில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.[1]

சக்தி அ. பாலையா
பிறப்பு(1925-07-26)26 சூலை 1925
தலவாக்கலை, இலங்கை
இறப்புஆகத்து 2, 2013(2013-08-02) (அகவை 88)
இராகமை
இருப்பிடம்மாபொலை, வத்தளை
தேசியம்இலங்கையர்
பணிஆசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர், கவிஞர், ஓவியர்

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

தலவாக்கலைக்கு அருகில் லிந்­து­லை என்ற தோட்டத்தில் விசுவநாதர், இலக்குமி அம்மை ஆகியோருக்குப் பிறந்தவர் பாலையா. தனது 10வது அகவையில் ‘பாரதியின் தாக்கம்’ என்னும் தலைப்பில் தனது முதல் கவிதையை எழுதினார்.[1] 1940களின் பின் பகுதியில் இவர் கவிதைகள் வீரகேசரியில் வெளிவந்தன. படிப்பை முடித்துக் கொண்ட சக்தி ஓர் ஓவியராகவே தனது வாழ்வைத் தொடங்கினார். அர­சினர் நுண்கலைக் கல்­லூ­ரியில் கலை­யா­சி­ரி­ய­ராக பயிற்சி பெற்று இலங்கை ஆசிரிய கல்லூரி, ஹேவுட்ஸ் கலைக் கல்லூரி ஆகியவற்றில் ஆசி­ரி­ய­ராகவும், விரி­வு­ரை­யா­ள­ராகப் பணி­யாற்­றி­னார். ஒரு சில நூல்களுக்கும், இதழ்களுக்கும் அட்டைப் பட ஓவியங்கள் வரைந்துள்ளார்.[1] இவ­ரு­டைய ஓவியக் கண்­காட்­சிகள் 1950களில் கொழும்­பிலும் பிற இடங்­க­ளிலும் நடை­பெற்­றுள்­ளன. இவர் திருமணமாகாதவர்.[2]

சிறுவயதுமுதல் காந்தி பக்தராகவும் கதராடை அணிபவராகவும், இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட தலைவர்களின் ஆற்றல், பெருமை, தியாகம் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கவராகவும் இவர் இருந்திருக்கின்றார்.

எழுத்தாளராக

தொகு

‘மனோதத்துவமும் கலையும், போதனா முறையும்’ என்னும் பயிற்சி நூலினை 1952ஆம் ஆண்டிலும். ‘சொந்த நாட்டினிலே’ என்னும் தேசியப் பாடல்கள் அடங்கிய நூலினை மொழியுரிமைக்காக 1956 இலும் வெளியிட்டார்.[1] "Analysis of ages of lives in earth and Dravidian culture" என்னும் இவருடைய ஆங்­கில நூல் 2011 இல் வெளியிடப்பட்டது. சி. வி. வேலுப்பிள்ளையின் ஆங்­கிலக் கவிதை நூலான ‘In Ceylon’s tea garden’ என்ற நூல் சக்தி பாலையாவின் மொழி­பெ­யர்ப்பில் தேயிலைத் தோட்­டத்­திலே என்ற பெயரில் 1969 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 2007 இல் வெளிவந்தது.[2] இந்தத் தமிழாக்கம் வீரகேசரியில் தொடராகப் பிரசுரிக்கப்பட்டது.

1963ல் தினகரனில் ‘மேல் நாட்டு ஓவியர்கள்’ என்னும் தலைப்பில் பல ஆக்கங்களைப் படைத்துள்ளார். சுதந்திரனில் மலை நாட்டு அறிஞர்கள் என்னும் தலைப்பில் தொடர்கட்டுரைகளை எழுதியுள்ளார். கல்கி மற்றும் சி.என். அண்ணாத்துரை அவர்களின் திராவிட நாடு போன்ற தமிழக ஏடுகளிலும் சக்தியின் எழுத்துக்கள் இடம்பெற்றன.[1]

இவர் தமிழ் ஒளி (1954) வளர்ச்சி (1956) ஆகிய சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளார். வீரகேசரியின் துணை ஆசிரியராகச் சில காலமும் சி.வி.யின் “மாவலி” சஞ்சிகையின் இணை ஆசிரியராகச் சிலகாலமும் பணிபுரிந்துள்ளார்.[1]

எழுதியுள்ள நூல்கள்

தொகு
  • மனோதத்துவமும் கலையும் போதனா முறையும், 1952
  • சொந்த நாட்டிலே – தேசிய கீத நூல், 1956
  • தேயிலைத் தோட்டத்திலே – மொழிபெயர்ப்புக் கவிதை நூல், 1969
  • சக்தீ பாலஐயா கவிதைகள் - துரை வெளியீடு, 1998

விருதுகள்

தொகு
  • கவிச்சுடர் (அரசு விருது, 1987)
  • தமிழ் ஒளிபட்டமும் விருதும் (1993)
  • மூதறிஞர் (இலங்கை கம்பன் கழகம், 1998)
  • கலாபூசணம், கலாசார அமைச்சு
  • வாழ்நாள் சாதனையாளர் விருது, குறிஞ்சிப் பேரவை (2010)[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 சக்தி. அ. பாலஐயா, இவர்கள் நம்மவர், பீ. எம். புன்னியாமீன்
  2. 2.0 2.1 மலையகத்தின் மூத்த கலைஞர் சக்தி பாலையா காலமானார், வீரகேசரி, ஆகத்து 3, 2013
  3. குறிஞ்சிப் பேரவையின் இலக்கிய விழாவில் சக்தி பாலையா[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், நவம்பர் 7, 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_அ._பாலஐயா&oldid=3722140" இலிருந்து மீள்விக்கப்பட்டது