சண்டக்கான் மரண அணிவகுப்பு
சண்டக்கான் மரண அணிவகுப்பு (ஆங்கிலம்: Sandakan Death Marches மலாய்: Kawat Maut Sandakan இந்தோனேசியம்: Pawai Kematian Sandakan) என்பது, மலேசியா, சபா, சண்டக்கான் போர்க்கைதிகள் முகாமில் இருந்து, 260 கி.மீ. தொலைவில் இருந்த இரானாவு எனும் இடத்திற்கு, நேச நாடுகளின் போர்க் கைதிகள் கால்நடையாக நடக்க வைக்கப்பட்ட போது 2,434 போர் வீரர்கள் இறந்து போயினர்; அந்த நிகழ்ச்சியை, நினைவுபடுத்தும் வகையில் சண்டக்கான் மரண அணிவகுப்பு என்று அழைக்கப் படுகிறது.[1]
இரண்டாம் உலகப் போரில், சப்பானியர்கள் தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளைக் கைப்பற்றி, கொடுங்கோல் ஆட்சி செய்தனர். தீபகற்ப மலேசியாவில் தரையிறங்கிய அதே காலகட்டத்தில், போர்னியோவிலும் காலடி பதித்தனர். 1942 ஜனவரி முதலாம் தேதி லபுவானில் தரை இறங்கினார்கள். ஒரு சில வாரங்களில், அங்கு இருந்து வடக்கு போர்னியோவுக்குள் ஊடுருவல் செய்து, சில நாட்களில் போர்னியோ தீவையே முழுமையாகக் கைப்பற்றினார்கள்.[2]
இந்த சண்டக்கான் மரண அணிவகுப்பு, இரண்டாம் உலகப் போரின் போது ஆத்திரேலிய படைவீரர்கள் அனுபவித்த மிக மோசமான கொடுமை என்று பரவலாகக் கருதப்படுகிறது.[3]
பொது
தொகு1942-இல் இருந்து 1945 வரை வடக்கு போர்னியோ சப்பானியர்களின் பிடியில் சிக்கி இருந்தது. தென் போர்னியோ தீவின் கலிமந்தான் பகுதியும் அவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. சப்பானியர்களை எதிர்த்துப் போரிட்ட நேச நாட்டுப் படைகள், வானில் இருந்து குண்டுகளைப் போட்டன. அதனால் பல நகரங்கள் சேதம் அடைந்தன அல்லது அழிந்து போயின. அவற்றுள் சண்டக்கான் நகரம் அதிகமாய்ப் பாதிப்பு அடைந்தது.
1942 பிப்ரவரி மாதம், சிங்கப்பூர் போரில் (Battle of Singapore) சப்பானியர்களிடம் சரண் அடைந்த ஆத்திரேலிய போர்க் கைதிகள் மற்றும் பிரித்தானிய போர்க் கைதிகள் வடக்கு போர்னியோவிற்கு சிங்கப்பூரில் இருந்து கப்பல்கள் மூலமாக சண்டக்கான் நகருக்கு அனுப்பப்பட்டனர்.
வடக்கு போர்னியோவின் சண்டக்கான் நகரில் ஓர் இராணுவ விமான ஓடுதளம் அமைக்கவும் (Military Airstrip); மற்றும் போர்க் கைதிகள் முகாம்களை (Prisoner-of-War Camps) அமைக்கவும் அந்தப் போர்க் கைதிகள் அங்கு அனுப்பப்பட்டனர்.[4]
சப்பானியர்களின் சித்திரவதை
தொகுசப்பானியர்களின் ஆட்சி காலத்தில் சண்டக்கான் நகரில் பிரித்தானிய, ஆத்திரேலிய போர்க் கைதிகளுக்காக ஒரு சிறைச்சாலை உருவாக்கப்பட்டது.
அந்தச் சிறைச்சாலையில் இருந்த கைதிகள் மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்பட்டனர். மனிதத் தன்மையற்ற முறையில், மிக மோசமாகச் சித்ரவதை செய்யப்பட்டனர். கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக அந்தச் சிறைச்சாலை, 260 கி.மீ. தொலைவில் இருந்த இரானாவு உள் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
2434 போர்க்கைதிகள் இறப்பு
தொகுஅப்போது சண்டக்கான் போர்க்கைதிகள் முகாமில் ஏறக்குறைய 2500 கைதிகள் இருந்தனர். ஏற்கனவே பல ஆயிரம் பேர், சப்பானியர்களின் சித்ரவதைகளினால் இறந்து விட்டனர். எஞ்சியவர்கள் இரானாவு எனும் இடத்திற்கு கால்நடையாக நடக்க வைக்கப் பட்டனர்.[5] அந்த நிகழ்ச்சியைச் சண்டக்கான் மரண அணிவகுப்பு என்று அழைக்கிறார்கள்.
போர்க் கைதிகளில் ஆறே ஆறு பேர்தான் தப்பிப் பிழைத்தனர். மற்ற 2434 போர்க்கைதிகள் நடைபாதையிலேயே இறந்து போயினர்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Digger History Sandakan Death March: Japanese Inhumanity
- ↑ Sandakan Death March பரணிடப்பட்டது 2007-01-01 at the வந்தவழி இயந்திரம் The Pacific War Historical Society
- ↑ Digger History Sandakan Death March: Japanese Inhumanity
- ↑ Southernwood, Ross (25 November 2012). "Final footsteps of POWs". The Sydney Morning Herald.
- ↑ Laden, Fevered, Starved பரணிடப்பட்டது 2006-12-17 at the வந்தவழி இயந்திரம் Sandakan POW Camp, 1942–1944
- ↑ The Marches பரணிடப்பட்டது 2017-03-15 at the வந்தவழி இயந்திரம் Australia's War, 1939–1945
மேலும் காண்க
தொகு- The Sandakan Track – Sandakan-Ranau Death March (1942–1945) Sandakan-Ranau Death March
- Sandakan Memorial Park Lynette Silver, who began assisting the Office of Australian War Graves (OAWG) with the development of the Sandakan Memorial Park in 1995, has been involved in a number of initiatives since that time.
- Fraudulent Military Service: Investigating suspect claims made by various individuals in regard to war service and so on.