சபிஹா கானும்

பாகிஸ்தானிய நடிகை

சபிஹா கானும் ( பஞ்சாபி, உருது: صبیحہ خانم‎ , பிறப்பு: குஜராத்தில் 16 அக்டோபர் 1935) எனும் முக்தர் பேகம் ஒரு பாகிஸ்தான் திரைப்பட நடிகை. இவர் 1950 மற்றும் 1960 களில் பாகிஸ்தான் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருந்தார். மேலும் 1980 மற்றும் 1990 களில் விருது பெற்ற திரைப்பட வேடங்களில் தொடர்ந்து நடித்தார். விருது பெற்ற சில தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தார்.[1][2][3]

சபிஹாவின் பெரும்பாலான திரைப்படங்களில் அவரது கணவர் மறைந்த சந்தோஷ் குமார் (நடிகர்) (சையத் மூசா ராசா) அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சபிஹா மற்றும் சந்தோஷ் ஆகியோர் "சரியான ஜோடி" என்று பொதுமக்களால் பெரிதும் கருதப்பட்டனர். மேலும் அவர்கள் கணிசமான ரசிகர்களைப் கொண்டிருந்தனர்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

முக்தர் பேகம் அல்லது சபிஹா கானும் தில்லியைச் சேர்ந்த முகமது அலி (மஹியா) மற்றும் பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாபின் அமிர்தசரஸைச் சேர்ந்த இக்பால் பேகம் (பாலோ) ஆகியோரின் மகள். இவர் தனது தாத்தா பாட்டிகளால் பழமைவாத கிராமப்புற சூழலில் வளர்க்கப்பட்டார். ஆனால் லாகூரில் தனது தந்தையுடன் இருக்கும் போது தனது முதல் மேடை நடிப்பு வாய்ப்பைப் பெற்றார்.

ஒரு கலாச்சாரக் குழு 1948 இல் பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள ஒரு சினிமா இல்லத்திற்கு விஜயம் செய்தது. தூதுக்குழுவின் ஒரு பகுதியாக இருந்த முக்தர் பேகம் (அப்போது 1948 இல் ஒரு இளம் பெண்), சஸ்ஸி புன்னூன் (பாலு மற்றும் அஸ்லம் நடித்த) படத்திலிருந்து "கித்தாய் கே யூன் பர்தேசியா வே" என்ற பஞ்சாபி பாடலைப் பாடினார். அவரது செயல்திறம் பாராட்டப்பட்டது. முகமது அலி தனது மகளை ஒரு பிரபல மேடை நாடக எழுத்தாளரும் கவிஞருமான நஃபீஸ் கலீலிக்கு அறிமுகப்படுத்தினார். இவரது உறுதியைக் குறிப்பிட்டு, கலீலி பியூட் ஷிகான் என்ற நாடகத்தில் ஒரு கதாப்பாத்திரத்தை வழங்கினார். அதை இவர் ஏற்றுக்கொண்டார். நபீஸ் கலீலி இவருக்கு சபிஹா கானும் என்ற திரைப் பெயரைக் கொடுத்தார்.

இவரது தற்போதைய வாழ்க்கை

தொகு

இவர் தற்போது தனது மகளுடன் அமெரிக்காவின் வர்ஜீனியா, லீஸ்பர்க்கில் வசித்து வருகிறார்.

இவரது தொழில்

தொகு

நபீஸ் கலீலியின் வேண்டுகோளின் பேரில், திரைப்பட இயக்குநர் மசூத் பர்வேஸ் பெலி (1950) என்ற படத்தில் இவருக்கு ஒரு கதாப்பாத்திரத்தை வழங்கினார். 1950 ல் இயக்குனராக மசூத் பர்வேஸின் முதல் படமான பெலியில் நடிகர்கள் சந்தோஷ்குமார், ஷாஹீனாவுடன் சபிஹா கான் ஒரு திரைப்பட நடிகையாக அறிமுகமானார்.

அடுத்து சபிஹா பிரபல இயக்குநர் / தயாரிப்பாளர் அன்வர் கமல் பாஷாவின் வெள்ளி விழா படமான டோ அன்சூ (1950)இல் சபிஹா 'நூரி' என்ற கதாப்பாத்திரத்தில் சந்தோஷ் மற்றும் குல்ஷன் அராவுடன் நடித்தார்.

சந்தோஷ், சபிஹா மற்றும் குல்ஷன் அரா ஆகியோர் நடித்த முர்தாசா ஜிலானி இயக்கிய தனது அடுத்த படமான ஆகோஷில் சபிஹா இன்னும் சில அங்கீகாரங்களைப் பெற்றார். சந்தோஷுடன் அன்வர் கமல் பாஷா இயக்கிய 1953 இல் வெளியான 'குலாம்' படத்தில் இவரது பாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கும்னம் (1954) படத்தில் இவரது கதாப்பாத்திரமும் திரைப்பட பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது. சீமா, சுதிர் மற்றும் சபிஹா கானும் நடித்த இந்த படத்தை அன்வர் கமல் பாஷா இயக்கியிருந்தார். இந்த படம் சபிஹா நடித்த ஒரு மனநலம் குன்றிய பெண்ணைப் பற்றிய கதை. எம்.எஸ்.தார் இயக்கிய காதல் பஞ்சாபி படமான துல்லா பட்டி (1956) இல் 'நூரன்' வேடத்தில் சபிஹா நடித்தார். இந்த படம் பாகிஸ்தான் திரையரங்குகளில் பொன்விழா கொண்டாடியது.

குறிப்புகள்

தொகு
  1. "Sabiha Khanum, the First Lady of Pakistani Cinema, Passes Away". The Wire. 2020-06-14. பார்க்கப்பட்ட நாள் 2020-07-14.
  2. Shoaib Ahmed (15 June 2020). "Screen idol Sabiha Khanum passes away in US". Dawn (newspaper). https://www.dawn.com/news/1563537. 
  3. "اداکارہ صبیحہ خانم انتقال کر گئیں". Voice of America (in Urdu language).

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபிஹா_கானும்&oldid=4160950" இலிருந்து மீள்விக்கப்பட்டது