சமயபுரம் போஜீஸ்வரர் கோயில்

சமயபுரம் போஜீஸ்வரர் கோயில் திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

கோயிலின் நுழைவாயில்

அமைவிடம் தொகு

போசளேஸ்வரர் கோயில் எனப்படுகின்ற போஜீஸ்வரர் கோயில் திருச்சி அருகே சமயபுரத்தில் உள்ளது. இவ்விடம் ச.கண்ணனூர் என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவன், இறைவி தொகு

மூலவர் போஜீஸ்வரஸ்வாமி என்றும் போஜராஜஸ்வாமி என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி ஆனந்தவள்ளி ஆவார்.

வரலாறு தொகு

இந்தக்கோயில் ஹொய்சல மன்னர்களால் பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். மைசூரைச் சேர்ந்த துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்த ஹொய்சல மன்னர்களில் இரண்டாவது நரசிம்மன் பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சோழனுக்கு உதவியாக வந்து பகைவரை விரட்டி சோழனை ஆட்சியில் அமர்த்தினார். அவருடைய புதல்வரான வீர சோமேஸ்வரன் தன் ராஜ்யத்தைத் தமிழ்நாட்டில் நிலைநிறுத்தக் கருதி பொ.ஊ. 1253-இல் கண்ணனூரை தலைநகரமாக்கி விக்கிரமபுரம் என்ற புதிய பெயரைக் கொடுத்துள்ளார். ஹொய்சல மன்னர்களில் இவரே புகழ் பெற்றவராகக் கருதப்படுகிறார். இக்கோயில் இவர் கட்டுவித்ததாகும்.[கு 1] தற்போது இது போஜராஜா கோயில் என்று வழங்கப்படுகிறது.

அமைப்பு தொகு

ராஜகோபுரம் இல்லாத நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றின் வலது புறத்தில் அமிர்தமிருத்ஞ்சயன் (சிவன்) உள்ளார். தொடர்ந்து இத்திருச்சுற்றில் மடப்பள்ளி, நந்தவனம், விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, நவக்கிரக சன்னதி ஆகியவை உள்ளன. மூலவர் கருவறையின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. சுபகிருது வருடம் ஆவணி மாதம் 21-ஆம் நாள் 6 செப்டம்பர் 1962 அன்றும், துர்முகி வருடம் மாசி மாதம் 21-ஆம் நாள் 5 மார்ச் 2017 ஞாயிற்றுக்கிழமை அன்றும் [1] குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டுகள் உள்ளன.

குறிப்புகள் தொகு

  1. 27 நவம்பர் 2017 அன்று கோயிலுக்கு நேரில் சென்றபோது அங்கிருந்த அறிவிப்புப்பலகையில் இருந்து இவ்விவரங்கள் தொகுக்கப்பட்டன.

மேற்கோள்கள் தொகு

  1. சமயபுரம் போஜீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம், தினகரன், 6 மார்ச் 2017[தொடர்பிழந்த இணைப்பு]

படத்தொகுப்பு தொகு