எம். எம். ஏ. சின்னப்பா தேவர்

தமிழ்த் திரைப்பட நடிகர்
(சாண்டோ சின்னப்பா தேவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாண்டோ சின்னப்பா தேவர் (28 சூன் 1915 – 8 செப்டம்பர் 1978)) என அழைக்கப்படும் எம். எம். ஏ. சின்னப்பா தேவர் 1960- 1970 களில் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். பட அதிபராக உயர்ந்தவர் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர். எம்.ஜி.ஆரை நடிப்பில், குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தனது படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தவர். எம். ஜி. ராமச்சந்திரன் இவருடைய 17 படங்களில் கதாநாயகராக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர்; மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா நடிப்பில் ’’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற வெற்றிப்படத்தை 1971-ல் வழங்கினார். 1970 - 1971இல் கலைமாமணி விருது பெற்றவர்.

சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பா தேவர்
Sandow M. M. A. Chinnappa Thevar
பிறப்புமருதூர் மருதாச்சலமூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர்
(1915-06-28)28 சூன் 1915
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு8 செப்டம்பர் 1978(1978-09-08) (அகவை 63)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
தேசியம்இந்தியர்
பணிநடிகர், தயாரிப்பாளர் (திரைப்படம்)
செயற்பாட்டுக்
காலம்
1940-1978
சமயம்இந்து
பெற்றோர்அய்யாவு தேவர்,
இராமாக்காள்
வாழ்க்கைத்
துணை
மாரிமுத்தம்மாள்
பிள்ளைகள்தண்டாயுதபாணி,
சுப்புலட்சுமி
ஜகதீசுவரி
உறவினர்கள்எம். ஏ. திருமுகம் (சகோதரர்)

ஜெமினி எஸ்.எஸ்.வாசன், ஏவி. மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், பட்சி ராஜா ஸ்டூடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கொடி கட்டிப் பறந்த காலத்தில், இதே கருதுகோள்களோடு தமிழ்த் திரையுலகில் தடம் பதித்தவர்; அவர்களுக்கு இணையாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, திரை உலகை வியக்க வைத்தவர் எம் எம் ஏ சின்னப்பா தேவர்.

இளமை

தொகு

சின்னப்பா தேவர் கோவையில் உள்ள ராமநாதபுரத்தில் 1915 ஜூன் 28 ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் அய்யாவு தேவர்-ராமாக்காள். தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். சின்னப்பா தேவருக்கு ஒரு அண்ணன். பெயர் `பயில்வான்' எம்.ஏ.சுப்பையா தேவர். எம்.ஏ.நடராஜன் தேவர், எம்.ஏ.ஆறுமுகம் தேவர் (எம். ஏ. திருமுகம்), எம்.ஏ. மாரியப்பன் தேவர் என்று மூன்று தம்பிகள் இருந்தனர். மருதமலை மருதாசலமூர்த்தி அய்யாவு தேவர் சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் ஆகும். இதில் மருதமலை மருதாசலமூர்த்தி என்பது மருதமலை முருகனின் பெயராகும்.

இவர்களில் ஆறுமுகம்தான் பிற்காலத்தில் திரைப்படத்துறையில் எடிட்டராகி, எம். ஏ. திருமுகம் என்ற பெயரில் இயக்குநராக விளங்கினார். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக சின்னப்பா தேவர் ஐந்தாவது வகுப்பு வரைதான் படித்தார். பின்னர்,கோவை பங்கஜா மில்லில் மாதம் ஒன்பது ரூபாய் சம்பளத்தில் சம்மட்டியால் இரும்பு அடிக்கும் வேலையில் வாழ்க்கையைத் தொடங்கினார். அக்காலத்தில் கோவையில் புகழ்பெற்று விளங்கிய நிறுவனமாக "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி"யில் தொழிலாளியாகப் பணியில் சேர்ந்தார்.

அதன் பின் பால் வியாபாரம், அரிசி வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டார். சோடா தயாரித்து விற்பனை செய்தார். சின்னப்பா தேவரும் அவர் நண்பர்களும் சேர்ந்து, "வீரமாருதி தேகப் பயிற்சி சாலை" என்ற உடற்பயிற்சி நிலையத்தைத் தொடங்கினார்கள்.

குடும்பம்

தொகு

சின்னப்பா தேவருக்கு 1936-ல் அவருடைய 21-வது வயதில் திருமணம் நடந்தது.இவர் மனைவியின் பெயர் மாரிமுத்தம்மாள். இவ்விணையருக்குத் தண்டாயுதபாணி என்ற ஒரு மகன், சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று இரண்டு மகள்கள். தண்டாயுதபாணி 'பி.காம்' பட்டதாரி. தேவர் தயாரித்த பெரும்பாலான படங்களைத் தேவரின் தம்பியும், புகழ் பெற்ற எடிட்டருமான ஆறுமுகம் என்கிற எம். ஏ. திருமுகம் இயக்கினார். தேவர் பிலிம்ஸ் நிர்வாகத்தை மற்றொரு தம்பியான மாரியப்பன் கவனித்துக்கொண்டார்.

தேவரின் மூத்த மகள் சுப்புலட்சுமியை மணந்தவர் ஆர். தியாகராஜன். இவரும் பிறகு இயக்குநர் ஆனார். 'வெள்ளிக்கிழமை விரதம்', 'ஆட்டுக்கார அலமேலு' ஆகியவை இவர் இயக்கியப் படங்கள் ஆகும்.

திரைப்பட வாய்ப்பு

தொகு

சின்னப்பா அங்கு உடற்பயிற்சிகள் செய்து கட்டுடல் பெற்றார் மல்யுத்தம், கத்திச்சண்டை, கம்புச்சண்டை முதலியவற்றையும் கற்றார். இந்த காலத்தில் கோவையில் ’’ஜுபிடர் பிக்சர்ஸ்’’ என்ற நிறுவனம் திரைப்படங்களைத் தயாரித்து வந்தது. அந்நிறுவனத்தில் எம்.ஜி.ஆர், எம். என். நம்பியார், எஸ். வி. சுப்பையா ஆகியோர் ஒப்பந்த நடிகர்களாக மாத ஊதியத்தில் வேலை பார்த்து வந்தனர். திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிக்கவும், புராண கதாபாத்திரங்களில் நடிக்கவும் கட்டுடல் பெற்ற நடிகர்கள் தேவைப்பட்டனர். அப்போது, சின்னப்பா தேவருக்கு அந்த வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சின்ஹா என்னும் இயக்குநரின் பார்வையில் பட்டுத் துணை நடிகரானார். 20 படங்கள் வரை பல வேடங்களில் நடித்தார்.

எம். ஜி. ஆருடன் நட்பு

தொகு

திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக எம்.ஜி.ஆருடனும், மற்ற நடிகர்களுடனும் தேவருக்கு நட்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரும், தேவரின் "வீர மாருதி தேகப்பயிற்சி சாலை"க்கு வந்து உடற்பயிற்சி செய்வது உண்டு. எம்.ஜி.ஆருக்கு ஏற்கனவே கத்திச்சண்டை அறிந்திருந்தார். கம்புச்சண்டையில் தேர்ந்தவரான சின்னப்பா தேவர், அதுபற்றிய நுட்பங்களை எம்.ஜி.ஆருக்குக் கற்றுத்தந்தார். இவர்களின் நட்பு சிறு சிறு சர்ச்சைகளுக்கிடையேயும் இறுதி வரைத் தொடர்ந்தது.

தயாரிப்பாளர்

தொகு

அக்காலத்தில், புராணப் படங்கள் தயாரிப்பதில் புகழ் பெற்ற சி. வி. ராமன் என்ற இயக்குநர் கோவையில் இருந்தார். அவரிடம் தயாரிப்பு நிர்வாகியாகத் தேவர் பணியாற்றினார். சினிமாத் தயாரிப்பு நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். இதற்கிடையில், தேவரின் தம்பி திருமுகம் படத்தொகுப்பு துறையில் பெயர் பெற்றார். ஜுபிடர் தயாரித்த "வேலைக்காரி", "மனோகரா" முதலிய படங்களுக்கு எடிட்டராகப் பணியாற்றினார்.

சொந்தமாகத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று தேவருக்கு ஆசையில் நண்பர்களிடம் பணம் சேகரித்து 10 ஆயிரம் ரூபாயுடன் சென்னைக்கு வந்தார். ஜீலை 7, 1955 "தேவர் பிலிம்ஸ்" படக் கம்பெனியை தொடங்கினார். முதல் படத்தையே, பெரிய நட்சத்திரங்களை வைத்து தயாரிக்க வேண்டும் என்று தேவர் விரும்பினார். கோவையில் நண்பராகப் பழகியிருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எம்.ஜி.ஆர். சம்மதித்தார். அதன் பின்னர் பானுமதி மற்றும் பாலையா, கண்ணாம்பா, ஈ.ஆர்.சகாதேவன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

திரைப்படங்கள்

தொகு

தன் தம்பி எம்.ஏ. திருமுகம் இயக்க "தாய்க்குப்பின் தாரம்" என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இந்தப்படத்துக்கு முதலில் ஏ.பி.நாகராஜன் வசனம் எழுத ஏற்பாடாகியிருந்தது. பின்னர், கண்ணதாசன் எழுதுவார் என்று கூறப்பட்டது. இறுதியில் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அய்யாப்பிள்ளை எழுதினார். பாடல்களை கோவை லட்சுமணதாஸ், மருதகாசி ஆகியோர் எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். தேவரின் நேர்மை, நாணயம், திறமை பற்றி அறிந்திருந்த நாகிரெட்டி, படத்தயாரிப்புக்கு தேவையான பணத்தைக் கொடுக்க முன்வந்தார். படத்தின் நெகடிவ் உரிமையை வாங்கிக்கொண்டு, பணம் தந்தார். இப்படத்தில் முரட்டுக்காளை ஒன்று நடித்தது. 4-9-1956-ல் வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்" பெரு வெற்றிப் படமாக அமைந்தது. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால், தேவர் உற்சாகம் அடைந்தார். அடுத்த படத்தையும் எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரிக்கத் திட்டமிட்டார். ஆனால் அது இயலாமல் போனது. அடுத்து சில படங்களை ரஞ்சன், உதய குமார், ஜெமினி கணேசன், ஆனந்தன் போன்றாரை வைத்து தயாரித்தார்.

'கொங்கு நாட்டுத் தங்கம்' படத்தை அடுத்து, மீண்டும் எம்ஜி ஆர் கூட்டணி அமைந்தது. தேவர் பிலிம்ஸ் படங்களில் தொடர்ந்து நடிக்க எம்.ஜி.ஆர். சம்மதித்தார். 'தாய் சொல்லை தட்டாதே' படத்தில் எம்.ஜி.ஆரையும், சரோஜாதேவியையும் நடிக்க வைக்க தேவர் தீர்மானித்தார். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி, கதை- வசனத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

'தாய் சொல்லை தட்டாதே' படம் ஒரே மாதத்தில் தயாராகியது. 7-11-1961-ல் வெளியான இப்படம் நூறு நாள் ஓடியது. இதை அடுத்து 'தாயைக் காத்த தனயன்', குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப்பின் பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, தேர்த்திருவிழா, காதல் வாகனம், நல்ல நேரம் ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் வெற்றிப் படங்களை எடுத்தவர் என்ற பெயர் தேவருக்கு கிடைத்தது. தேவர் பிலிம்ஸ் தயாரித்த 16 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்தவர் தேவர்தான். 1977-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனபின், திரைப்படங்களில் நடிக்கவில்லை. எனவே தேவர் பிற நடிகர்களை வைத்துத் திரைப்படங்கள் எடுக்கத் திட்டமிட்டார்.

தேவர் படங்களிலேயே எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டிருந்த போது, சில பெரிய திரைப்பட நிறுவனங்கள் எம்.ஜி.ஆரை அணுகி, தங்களுடைய படங்களிலும் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். இதன் காரணமாக, எம்.ஜி.ஆர். இல்லாமல் சில படங்களைத் தயாரிக்க தேவர் முடிவு செய்து, அதற்கென்றே 'தண்டாயுதபாணி பிலிம்ஸ்' என்ற படநிறுவனத்தைத் தொடங்கினார். இந்தப்நிறுவனம் சார்பில் பல்வேறு படங்கள் தயாரிக்கப்பட்டாலும், பக்தி கலந்த சமூகப்படங்கள் பெரிய வெற்றி பெற்றன. தமிழ் மட்டுமே தெரிந்த தேவர் ராஜேஷ்கண்ணாவை வைத்து ஹாத்தி மேரா சாத்தி என்னும் பெரும் வெற்றிப்படத்தை இந்தியிலும் எடுத்தார்.

இவற்றில் ’துணைவன்’ (1969), 'தெய்வம்' (1972), 'வெள்ளிக்கிழமை விரதம்' (1974) ’ஆட்டுக்கார அலமேலு’(1972 )ஆகியவை மாபெரும் வெற்றிப்படங்களாகும். 'தெய்வம்' படத்தில், புகழ்பெற்ற கிருபானந்தவாரியார் நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைப்பில், கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்களுக்கு பெங்களூர் ரமணி அம்மாள், மதுரை சோமு, டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ராதா ஜெயலக்‌ஷ்மி, பித்துக்குளி முருகதாஸ் ஆகிய இசைக் கலைஞர்கள் பாடினார்கள்.

திட்டமிடல்

தொகு

தேவரின் படங்கள் குறைந்த செலவில், குறுகிய காலத்தில் (பொதுவாக 40 நாட்களுக்குள்)தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றன.நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரே தவணையில் மொத்தமாக கொடுத்தார். மற்ற கலைஞர்கள், ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் கிடைத்தது. இதன் காரணமாக ஒரு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் அன்றே, அது வெளியாகும் தேதியையும் தேவர் அறிவித்து விடுவார். அதே தேதியில் படம் நிச்சயம் வெளியாகும்.

பண்பு நலன்கள்

தொகு

சிறந்த முருக பக்தராக விளங்கிய தேவர் ஒவ்வொரு படத்திலும் கிடைக்கும் லாபத்தை நான்காகப் பிரிப்பார். இதில் ஒரு பங்கு முருகனுக்கு வழங்குவார். முருகன் அருளால்தான் தனக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டுவதாக தேவர் எண்ணினார். அதனால், லாபத்தில் கால் பகுதியை, முருகன் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கினார். பழனி கோவில், மருதமலை முருகன் கோவில் உள்பட பல கோவில்கள் இதனால் பலன் அடைந்தன. ஒரு பங்கை தனக்கு வைத்துக் கொண்டு, மற்றொரு பங்கை, தனக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று பணம் கொடுத்து, திரை படம் எடுக்க 10 ஆயிரம் ரூபாயுடன் சென்னைக்கு அனுப்பி வைத்த பழைய நண்பர்களுக்கு பிரித்துக் கொடுத்தார். மற்றொரு பங்கை நன்கொடைகளாக வழங்கினார். தேவர், காலையில் அலுவலகம் வந்ததும் முருகனை வணங்கிவிட்டு வேலை தொடங்குவார். உதவி கேட்டு வருகிறவர்களுக்கு 'இல்லை' என்று கூறாமல் உதவி செய்வார்.

இறுதிக்காலம்

தொகு

1977-இல் முதலமைச்சர் ஆனபின், எம்.ஜி. ஆர் படங்களில் நடிக்கவில்லை. எனவே, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து 'தாய் மீது சத்தியம்' படம் தயாரிக்க தேவர் முடிவு செய்தார். வசனங்களை தூயவன் எழுதினார். ரஜினிகாந்த்தின் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்தார்.சங்கர் கணேஷின் இசையில் தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் இப்படத்தை இயக்கினார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. 6-9-1978-ல் தேவர் ஊட்டி சென்று படபிடிப்புகளில் கலந்துகொண்ட போது தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தமும் அதிகமாக இருந்தது. ஊட்டியில் கடும் குளிர் இருந்ததால், கோவைக்கு சென்று சிகிச்சை பெறுவது நல்லது என்று கருதப்பட்டது. எனவே, தேவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைகள் தொடர்ந்தன. மறுநாள் 7-9-1978 இல் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, காலை 10 மணி அளவில் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 63. தேவரின் உடல் கோவை ராமநாதபுரத்தில் உள்ள வீட்டுக்குக் எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு திரையுலகப் பிரமுகர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள். சின்னப்பா தேவரின் உடல் அடக்கம் கோவையிலேயே நடந்தது. இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர். நடந்து சென்று கலந்து கொண்டார். ஜெய்சங்கர் உள்பட திரை உலக பிரமுகர்கள் பலரும் சென்றனர். சின்னப்பா தேவர் மறைவையொட்டி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். வெளியிட்ட அனுதாப செய்தி

தேவர் மறைந்த பிறகும் அவர் குடும்பத்தினர் தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டனர். ரஜினிகாந்த் நடித்த 'தாய் மீது சத்தியம்', 'அன்னை ஓர் ஆலயம்', 'ரங்கா', 'தர்மத்தின் தலைவன்' உள்பட பல படங்களை எடுத்தனர். அவை வெற்றிகரமாகவே ஓடின. இந்த சமயத்தில், 'மை டியர் குட்டிச்சாத்தான்' என்ற முப்பரிமான ('3 டி') படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு, தமிழ் உள்பட பல மொழிகளில் 'மொழிமாற்றம்' செய்யப்பட்டு வெற்றிபெற்றது. அதனால், தேவர் பிலிம்ஸ் உள்பட பல பட நிறுவனங்கள் '3 டி' படங்கள் எடுத்தன.

ஆனால், குட்டிச்சாத்தான் தவிர மற்ற எல்லா '3 டி' படங்களும் தோல்வியைத் தழுவின. இதனால் தேவர் பிலிம்ஸ் நிறுவனம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. தேவர் குடும்பத்தினர் பல திசைகளில் பிரிந்தனர். சாண்டோ சின்னப்பா தேவர் என்ற மகத்தான மனிதரால் உருவாக்கப்பட்ட நிறுவனம், படத்தொழிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேவரின் தம்பியும், இயக்குநருமான எம்.ஏ. திருமுகம், 2004 டிசம்பரில் மரணம் அடைந்தார்.

கருவி நூல்

தொகு
  • பா.தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் என்ற புத்தகம். கிழக்குப்பதிப்பகம் வெளியீடு.

வெளியிணைப்புகள்

தொகு